தமிழையும் இந்திய பாரம்பரியக் கலைகளையும் அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் சேர்க்க வேண்டும்!



மூன்று கின்னஸ் உலக சாதனைகள், பாராட்டுப் பெற்ற ஐந்து நூல்கள், ஓவியக் கலையில் உயர்ந்த படைப்புகள், ஆட்டிசம் குழந்தைகளின் அன்னை, இசைப் பள்ளியின் நிறுவனர், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், ஆங்கில மொழிப் பெயர்ப்பு என பல திறன்களை கொண்டவர்தான் மேனகா நரேஷ். குடும்பத்துடன் அமெரிக்கா நியுஜெர்சியில் வசித்து வரும் மேனகா சென்னைக்கு வந்திருந்தார். கம்பீரமான தோற்றம், கனிவான பேச்சு, புன்சிரிப்புடன் மனம் திறந்தார். 

‘‘என்னுடைய ஒவ்வொரு செயலுக்கு பின் என் குடும்பம்தான் முக்கிய காரணம். கடந்த 2017ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது. அந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் கலன் வடிவமைப்பு குழுவின் தலைவராக என் அப்பா இருந்தார். தம்பி பரதநாட்டியக் கலைஞர். நாட்டியத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றவர். சமீபத்தில் ‘ஆட்டம்’ என்ற பெயரில்  நாட்டியம் பயில்விக்கும் கருவியை உருவாக்கி அதற்கான காப்புரிமையை பெற்ற முதல் இந்தியர். 
அம்மாவும், பாட்டியும் வாசிப்பில் மிகுந்த விருப்பம் உள்ளவர்கள். எனக்கு சிறந்த ஊக்கமும், ஆக்கபூர்வமான எண்ணங்களும் உருவாக என் பெற்றோரின் வழிகாட்டுதல் பெரிதும் உதவியது. என் கணவர் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறார். என் திறமையினை ஊக்குவித்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்’’ என்றவர், தான் பெற்ற கின்னஸ் சாதனை குறித்து பேசத் துவங்கினார்.
‘‘சுபஸ்ரீ நடராஜன் அவர்கள் தொடங்கிய ‘மதர் இந்தியா க்ரோசெட் குயின்ஸ்’ என்ற நிறுவனத்தின் உறுப்பினர் என்ற முறையில் க்ரோசெட் கின்னஸ் உலக சாதனை நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன். 
2019, 2024, 2025ம் ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் திட்டங்களுக்கு நான் செய்த பங்களிப்புகளுக்காக மூன்று ‘கின்னஸ் உலக சாதனை’ சான்றிதழ்களை பெற்றேன். 2019ல் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் செய்வதிலும், 2024ம் ஆண்டு மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சால்வை செய்வதிலும், 2025ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு போர்வைகள் செய்யத் தயாரிக்கப்பட்ட கிரான்னி சதுரங்கள் செய்வதிலும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்கள் பெற்றேன்.

நான் அடிப்படையில் இயன்முறை மருத்துவர். அதைத் தவிர பாடகர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், க்ரோசே கலைஞர், ஆசிரியர், இதழாளர் என பல்வேறு துறைகளில் செயலாற்றி வருகிறேன். இயன்முறை மருத்துவத்தில் இளங்கலை பட்டமும், உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். மாண்டசரி கல்வியிலும் டிப்ளமோ முடித்திருக்கிறேன். தற்போது கர்நாடக இசையில் எம்.ஏ. படித்து வருகிறேன்.

சாயி குருகுலம் என்ற பெயரில் இசைப்பள்ளி ஒன்றினை நியூஜெர்சியில் 2018ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். அதில் கர்நாடக இசையினை கற்பித்து வருகிறேன். சமீபத்தில் ‘கிரி பக்தி’ என்ற யூடியூப் தளத்தில் நான் பாடிய பாடல்கள் வெளியாகியிருக்கின்றன’’ என்றவர்.

கவிஞர்களும் எழுத்தாணியும், துளிமொழி -wordlet, இமைத்தூரிகை ஓவியங்கள், அவளும் நானும், பெருவெளியின் ஆலாபனை என்ற தலைப்பில் புத்தகங்களும், கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். ேமலும், இவரின் கட்டுரைகளும் பல நூல்களில் வௌியாகியுள்ளது. 

‘‘எனக்கு கலை மட்டுமில்லை எழுத்து மீதும் ஆர்வம் அதிகம். அதனால் மதுரையில் சக்தி இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். மேலும், சில இதழ்களில் கட்டுரைகள், கவிதைகளை எழுதி வருகிறேன். நியூஜெர்சி தமிழ்சங்க ஆண்டுமலர் மற்றும் வல்லினச் சிறகுகள் என்ற இதழிலும் பணியாற்றி வருகிறேன். 

எழுத்து, கலை என் இரண்டு கண்கள் என்றால் சமூக சேவை என்னுடைய மூன்றாவது கண் என்று குறிப்பிட வேண்டும். என்னால் முடிந்தவரை சமூகத்திற்கு ஏதாவது செய்ய விரும்பினேன். ஃப்ளைன்ஸ்போரோவில் உள்ள பள்ளியில் ஆட்டிசம் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இவை தவிர தன்னார்வலராய் பல மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகிறேன்.

என்னுடைய எதிர்கால திட்டம், தமிழையும் இந்திய பாரம்பரியக் கலைகளையும் அமெரிக்காவில் உள்ள இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சென்னைக்கு வந்த போது இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினேன். அதே போல் நான் சென்னை வரும் போது எல்லாம் இது போன்ற பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும். அது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். 

எனக்கு மிகவும் பிடித்த க்ரோஷே கலையின் மூலமாகவும் சமுதாயத்திற்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும். என் இசை நிறுவனம் மூலம் பாடல்களை அமைத்து இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். நிறைய எழுத வேண்டும். இந்தியப் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து ஒரு தனிப்பட்ட ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும். 

இயன்முறை மருத்துவராக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இப்படி பல திட்டங்கள் உள்ளது. ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும்’’ என்ற மேனகா, சங்கீத பாஸ்கரா, திருக்குறள் கவிச்செம்மல், அருந்தமிழ் தாரகை, வாழ்நாள் சாதனையாளர், திருக்குறள் உலக நூல் ஆய்வுப் பேரொளி என பல விருதுகளை பெற்றுள்ளார்.

விஜயா கண்ணன்