கசக்குற வாழ்வே இனிக்கும்!



இயற்கை 360°

இந்தக் காயை சமைத் தாலே, சிறியவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களும் முகம் சுழித்தபடி உணவை ஒதுக்கும் கசப்பு..! இதன்மேல் எப்போதும் ஒரு தீரா வெறுப்பு..!! என்றாலும்... ‘‘சுவைதான் கசப்பு. இதுதரும் பலன்களோ இனிப்பு..!” ஆம்..! ‘‘தாவர இன்சுலின்” என்று கொண்டாடப்படுகிற பாகற்காய் பற்றி இன்றைய இயற்கை 360° தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!
Momordica charantia என்கிற தாவரப்பெயர் கொண்ட இந்தப் பாகற்காய் தோன்றிய இடம் ஆப்ரிக்கா. வாணிபம் வாயிலாக இந்தியா மற்றும் சீனா வந்தடைந்த இந்த கசப்புக் காய்கள், 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஆசிய மண்ணின் அடையாளமாய் மாறிவிட்டன என்பதே உண்மை.

Bitter Gourd, Bitter Melon, Bitter Apple, Bitter Squash, Balsam pear என ஆங்கிலத்திலும், கரேலா, கரவிலா, கர்லா, காகரக்காயா, ஹாகலக்காயி என பிற மொழிகளில் அழைக்கப்படும் பாகற்காய்க்கு, எல்லா மொழிகளிலும் ‘‘கசப்பான காய்” என்பதே பொருளாம். பாகு+அல்+காய், அதாவது, இனிப்பு இல்லாத காய் என பொருள்படும் இந்த பாகற்காய், பாகக்காய், பாவக்காய் என மறுவி, இதன் கசப்பை உண்பதே பாவம் என மாறிவிட்டது.!
ஆனால், ‘‘கசக்குற வாழ்வே இனிக்கும்..!” என்பதை இந்தக் கசப்புக்காய்கள் தமது அரிய மருத்துவ குணங்கள் வாயிலாக நமக்கு உறுதிசெய்கின்றன. குறைந்த கலோரிகளும், நிறைந்த நீர்த்தன்மையும், நிறைந்த நார்ச்சத்தும் உள்ள பாகற்காயில் வைட்டமின்கள் C, B, E, குறிப்பாக தையமின், நியாசின், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட பி வைட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்ஃபரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் உள்ளிட்ட கனிமச்சத்துகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. 
இதுதவிர Carotene, Charantin, Triterpene, Vivien, Polypeptide P, Catechin, Epicatechin, Gallic acid ஆகிய தாவரச் சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்து காணப்படும் பாகற்காய், நமது அன்றாட பயன்பாடான வாழைப்பழம், கீரை, ப்ரோக்கோலி ஆகியவற்றைவிட இருமடங்கு சத்துகள் உள்ளதாக  சொல்லப்படுகிறது.

பாகற்காயின் கசப்புத்தன்மைக்குக் காரணம் சாரன்டின் (Charantin) எனும் தாவரச்சத்து. கல்லீரலின் க்ளூக்கோஸ் ஃபாஸ்பட்டேஸ் உள்ளிட்ட செரிமான நொதிகளை ஊக்கப்படுத்தி, இன்சுலினின் திறனை அதிகரிப்பதுடன், ஃப்ரக்ட்டோஸமைன் அளவைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, குறிப்பாக அதிகாலை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பாகற்காய் பயனளிக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. ‘தாவர இன்சுலின்’ (Plant insulin) என்று முன்மொழியும் பாரம்பரிய சீன மருத்துவம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தாவரங்களில் முதன்மைத் தாவரமாக இதனை குறிப்பிடுகின்றது. 

பாகற்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் நீர்த்தன்மையும் பசியைக் கட்டுப்படுத்தி, எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுவதுடன், இதன் டெர்பீன்கள் மற்றும் பெப்டைட்கள், குடல் புழுக்கள், குடல் ஒட்டுண்ணிகள் உள்ளிட்ட கிருமிகள் தாக்கத்தை மட்டுப்படுத்த துணைபுரிகிறது. 

நோயெதிர்ப்பு சக்தி, கண் மற்றும் சரும பாதுகாப்பு, ரத்தச் சுத்திகரிப்பு, புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பு, செல் அழற்சியிலிருந்து பாதுகாப்பு, நரம்பு மண்டல ஆரோக்கியம், வயோதிக ஆரோக்கியம், புற்றுக்கட்டிகளிலிருந்து பாதுகாப்பு என பாகற்காயின் நன்மைப் பட்டியல் நீளமானது என்றுகூறும் இயற்கை மருத்துவர்கள், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய், இதய நோய், கல்லீரல் மற்றும் பெருங்குடல் அழற்சி நோய்கள், சிறுநீரக நோய்கள், கௌட் ஆகிய நோய்களின் தீவிரத்தைக் குறைக்க  பயனளிக்கும் என்கின்றனர்.

பாகற்காய் மட்டுமன்றி அதன் தளிர்களும், பழங்களும், விதைகளும் ஆரோக்கியம் நிறைந்தவை என்பதால், இந்த பாகற்காய் இலைகள் மற்றும் தளிர்கள் கொண்டு தயாரிக்கப்படும் டீட்டாக்ஸ் (detox) பானங்கள், குறிப்பாக தேநீர், சூப், ஜூஸ் மற்றும் ஸ்மூத்தீ சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. 

பழுத்த மஞ்சள் அல்லது சிவப்பு நிற பாகற்காயில் கசப்புத் தன்மையும், மருத்துவ ஆற்றல்களும் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்றாலும், இதிலும் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன்கள் சருமத்திற்கு நன்மைகள் பல தருகின்றன. 

பாகற்காயின் விதைகள், விதைகளிலிருந்து பெறப் படும் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களிலிருந்து காப்பதுடன், புற்றுநோய் பரவாமல் தடுக்கவும் துணை புரிகிறது. ஆனாலும், அளவான கசப்பே உணவுக்கும் வாழ்க்கைக்கும் போதுமானது என்பதையும் இந்தக் கசப்புக் காய்கள் நமக்கு குறிப்பிட்டுக் காட்டுகின்றன. 

கசப்பை மட்டுமே தம்மில் கொண்ட செயற்கை டீட்டாக்ஸ் பானங்கள் தருவிக்கும் பக்கவிளைவுகளையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிக அளவிலான பாகற்காய் வயிற்று அழற்சி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுக்கும் போதும், கர்ப்ப காலத்தில் பெண்கள் இதனை உட்கொள்ளும்போதும் அதிக கவனம் தேவை எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.விதைகள் மூலம் பயிரிடப்படும் கொடிவகைத் தாவரமான பாகற்காயில் ஏறத்தாழ 50 வகைகள் உண்டு. 

இந்த வெப்ப மண்டலத் தாவரம், நடவு செய்த 100 முதல் 120 நாட்களுக்குள் விளைச்சலுக்கு வருகிறது என்றாலும் இந்திய மற்றும் சீன வகை பாகற்காய்களே பிரபலமானவை. உலகளவில் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பாகற்காயை அதிகம் விளைவிக்கின்றன. நமது நாட்டில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் அதிகமாக விளைவிக்கின்றன.

இந்தியாவில் விளையும் பாகற்காய்கள் அடர் பச்சை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் கரணைகளுடன் காணப்படும். சீன பாகற்காய்கள் வெள்ளரியைப் போல, வெளிர் பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் மொழுமொழுத் தோற்றத்தில் இருக்கும். இதில் இந்திய கரும் பச்சை நிறக் காயில் கசப்புத் தன்மை அதிகம் என்பதுடன், மிகச் சிறிய வடிவிலான மிதி 
பாகற்காய்கள் (Bitter gourd mini) கேரள மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் விரும்பி உண்ணப்படுகிறது.

பாகற்காயில் புளிக்குழம்பு, பொரியல், வடகம் தயாரித்து நாம் பயன்படுத்துவதைப் போல, தூரன், தீயல், மேலுக்குப் புரட்டி, பச்சடி, புளுசு என கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர உணவுகளிலும், உள் சதை மற்றும் விதைகளை நீக்கி பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்த ஸ்ஃப்ட் கரேலா அல்லது சப்ஜி என வட மாநிலங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.பாகற்காயினை உப்பு நீரில் ஊற வைப்பது, எலுமிச்சை சாறு அல்லது தயிரில் ஊற வைப்பது, தக்காளி, புளி மற்றும் வெல்லம் சேர்ப்பது என இதன் கசப்புத் தன்மையை குறைக்க, உண்மையிலே நம்மிடையே பெரும்பாடுபடுகிறது இந்தப் பாகற்காய். 

இதிலுள்ள நீர்த்தன்மை, உடல் வெப்பத்தைக் குறைக்கும் ‘யின்’ (yin) தாவரங்களில் முக்கியமானது எனும் சீனர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் சேர்த்து சமைப்பதுடன் ‘ஜென்டில்மேன் வெஜிடபிள்’ என்றும் இதனைக்  கொண்டாடுகின்றனர். ஜப்பானிய ஒகினவா தீவுகளிலும், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளிலும் அவர்களின் அன்றாட உணவு வகைகளுடன் வலம் வரும் இதனை சூப், ஜூஸ், சாலட், கறி, ஊறுகாய் மற்றும் தேநீராக மட்டுமின்றி மதுபானங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கசப்பான விஷயங்கள் எல்லாத் தருணங்களிலும் நம்மை பாதிப்பதில்லை. சில சமயம் இனிப்பை விட அதிக பலன் தருபவை என்பதை அழுத்தமாய் உணர்த்துகிறது, புண்ணியம் மிக்க பாவக்காய் எனும் இந்த பாகற்காய்!

(இயற்கைப் பயணம் நீளும்..!)