சவால்களை கடந்து வெற்றி பெற வேண்டும்!



குத்துச்சண்டை என்பது வெறும் சண்டை அல்ல... அது தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம். தனி நபரின் அடையாளமும் கூட. அண்மைக்காலமாக பெண்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் தங்களின் திறமைகளை முத்திரை பதித்து வருகிறார்கள். 
குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிகளவில் குத்துச்சண்டையை பெண்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனக்குப் பிடித்த விளையாட்டான குத்துச்சண்டையில் பல்வேறு பதக்கங்கள் பெற்று தனக்கான ஒரு இடத்தினை தக்க வைத்து வருகிறார் புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் வசிக்கும் பூவிதா. ‘‘புதுக்கோட்டையில் நெற்குப்பைதான் என்னுடைய ஊர். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மாலையீட்டில்தான். 
அப்பா அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறார். அம்மா இல்லத்தரசி. தங்கை +2 முடிச்சிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். தம்பி +2 படிக்கிறார். நான் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். 8ம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 
அம்மாவிடம் என் விருப்பத்தினை தெரிவித்தேன். அவங்க தான் குத்துச்சண்டை கற்றுக் கொள்ள சொல்லி ஊக்குவித்தார்கள். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப குத்துச்சண்டைப் பயிற்சியாளர் பார்த்திபனை சந்தித்தேன். அவரும் எனக்கு பயிற்சி அளிக்க துவங்கினார். முழு திறனோடு பயிற்சியினை மேற்கொண்டேன். 

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து  கொண்டு வெற்றியும் பெற்றேன். அந்த வெற்றி எனக்குள் ஆர்வத்தினை அதிகரித்தது. தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்றேன். அதிலும் என் வெற்றியினை பதிவு செய்தேன். அப்போது கொரோனா ஊரடங்கு வந்ததால், பயிற்சி பெற முடியவில்லை’’ என்றவர் ஆன்லைனில் தன்னுடைய பயிற்சியினை தொடர்ந்துள்ளார்.

‘‘கொரோனா காலத்தில் நேரடி  பயிற்சி எடுக்க முடியாது என்பதால் நான் ஆன்லைன் மூலம் என்னுடைய பயிற்சியினை தொடர்ந்தேன். தேசிய அளவில் நான் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்ததால், ஹரியானா மாநிலத்திலிருந்து இணையம் மூலமாக மத்திய அரசு சார்பில் பணியாற்றும் பயிற்சியாளர்கள் எனக்கு பயிற்சி அளித்தார்கள். 

பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டுமே நான் ஆன்லைன் முறையில் தான் பயின்றேன். +2விற்கு பிறகு வணிகவியல் துறையினை கல்லூரியில் தேர்வு செய்தேன். தற்போது மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வினை எழுத என்னை தயார்படுத்தி வருகிறேன்’’ என்றவர் பயிற்சியின் போது எடுத்துக் கொண்ட பராமரிப்பு மற்றும் குத்துச்சண்டை போட்டி குறித்தும் பகிர்ந்தார்.

‘‘குத்துச்சண்டையை பொறுத்தவரை நம்முடைய உடலை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக புரதம் நிறைந்த உணவினை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் உடலை நீரோட்டமாக வைத்திருப்பது அவசியம். 

அந்த நேரத்தில் இளநீர், பழங்கள் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டேன். காய்கறிகள், கீரை வகைகளும் உணவில் அதிகம் இருப்பது போல் பார்த்துக் கொள்வேன். இவை மட்டுமில்லாமல் தொடர் பயிற்சியும்தான் எனக்கு பல வெற்றிக் கனிகளை பெற காரணமாக அமைந்தது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2017ல் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 42-44 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தேன். திருப்பூரில் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் சார்பில் 2018ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 44-46 கிலோ எடைப் பிரிவில் முதல் இடம் பிடித்தேன். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் 2018ல் 6வது சுதந்திர தின கோப்பைக்கான போட்டியில் 42-44 கிலோ எடைப் பிரிவில்,  முதலிடம் பிடித்து பதக்கம் பெற்றேன். 2018ல் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 42-44 கிலோ எடைப் பிரிவிலும் முதல் இடம் பிடித்தேன்.

64வது தேசிய பள்ளிகள் விளையாட்டு சார்பில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றேன். இந்திய குத்துச்சண்டை பெடரேஷன் சார்பில் 2019ம் ஆண்டு ரோக்டாக்கில் நடைபெற்ற 3வது தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். இதற்காக ஊக்கத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இருந்து ெபற்றேன். 

2021ம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் 48-50 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ரூபாய் 75-ஆயிரம் ஊக்கத் தொகையும் பெற்றேன். தமிழ்நாடு யூத் வுமன் கூட்டமைப்பு சார்பில் 2022ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 48-50 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றேன். 

திருச்சியில் கல்லூரிகளின் அளவிலான 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் 50-52 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்றேன். கடந்த ஆண்டு தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்காக சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் 57-60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றேன்.

இன்றும் என்னுடைய குத்துச்சண்டைக்கான பயிற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உடல் சார்ந்த பயிற்சியினை அப்துல் காதர் அவர்களிடம் பெற்று 
வருகிறேன். உடன் குத்துச்சண்டை பயிற்சிகளும் மேற்கொண்டு வருகிறேன். தற்போது தேர்வுக்காக படிப்பதால் இந்த வருடம் பெரிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியாமல் போனது. 

அதற்காக நான் என் பயிற்சியினை விட்டுவிடவில்லை. வருங்காலங்களில் கண்டிப்பாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்வேன். பொதுவாக பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் போது அவர்கள் பல சவால்களை மனரீதியாகவும், நிதி சார்ந்தும் சந்திக்க வேண்டி இருக்கும். அதை எல்லாம் கடந்து வெற்றி பெறுவது நம்முடைய கையில்தான் உள்ளது’’ என்றார் பூவிதா. 

பொ.ஜெயச்சந்திரன்

வாசகர் பகுதி

கார்த்திகை தீபமும் விளக்குகளும்!

கார்த்திகை தீபம் என்றாலே விளக்குகள்தான் பிரதானம். வீடு முழுக்க விளக்கினை ஏற்றி வழிபட்டால், சிறந்த பலனை அளிக்கும் என்று வேத சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் அன்று வீட்டில் எங்கெல்லாம் விளக்கேற்றலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் 1 விளக்கும், முன் படிக்கட்டில் 2 விளக்கும், பின் படிக்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4 விளக்கும், மாடக்குழியில் 2 விளக்கும், நிலைப்படிக்கு 2 விளக்கும், சாமி படத்திற்கு கீழே 2 விளக்கும், வெளியே எம தீபம் 1 விளக்கும், கோலமிட்ட இடத்தில் 5 விளக்கும் என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். 

27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். எனவே, 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடலாம். கார்த்திகை தீபத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அகல் விளக்குகள், 2 பாவை விளக்குகள், 1 யானை விளக்கு, 1 ஐந்து முக குத்துவிளக்கு குறைந்தபட்சமாக 
ஏற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

வாசல் கோலத்தில் - 9 அகல் விளக்குகள், வாசற்படியில் 7 அகல் விளக்குகள், நிலை வாசலில் 1 ஐந்து முக குத்துவிளக்கு, 3 அகல் விளக்குகள், நிலை வாசற்படியில் 1 பாவை விளக்குகள், பூஜையறையில் 2 அகல் விளக்குகள், முற்றத்தில் 3 அகல் விளக்குகள், சமையலறையில் 3 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்.கார்த்திகை தீபத்தன்று பின் வாசலில் தீபம் ஏற்றக்கூடாது. மறுநாள்தான் அங்கு தீபமேற்ற வேண்டும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.