என்னைப் போல் ஒரு பொம்மை!



உடலில் எந்தவித குறைகளும் இல்லாமல் பிறப்பதை ஆகச்சிறந்த வரமாக பார்க்கிறோம். ஆனால், பொதுவான உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தினின்று சிறிது மாறுதல்களுடன் சிலர் பிறந்துவிட்டால் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனம் நமக்கு இயல்பாக வருவதில்லை. 
உடலில் சில மாற்றங்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களை நாம் என்னவாக உணரச் செய்கிறோம் என்பது முக்கியம். அதை பொறுத்தே அவர்களின் தன்னம்பிக்கை  அமையும். அவர்கள் வளர்ந்ததும் சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு முன்பாக முதலில் தங்களை தாங்களே ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு உருவாக வேண்டும். 

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த எமி ஜான்ட்ரிசெவிட்ஸ், உடல் மாற்றங்களுடன் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களை போன்ற உடலமைப்பு மற்றும் தோற்றங்களுடன் கூடிய பொம்மைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். அந்தக் குழந்தைகளை பிரதிபலிக்கும் பொம்மைகள் குழந்தைகளின் தாழ்வுமனப்பான்மையை குறைத்து தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள உதவுகிறது.“உடல் பாகங்கள் வளர்ச்சியின்மை, பிறப்பு அடையாளங்கள் மாற்றங்களுடன் பிறந்த குழந்தைகள் உலகில் உள்ளனர். 
புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி கதாபாத்திரங்கள், குறிப்பாக பொம்மைகளில் கூட தங்களை போன்றே தோற்றமுடைய மாற்றங்களுடைய எவரையும் அவர்கள் பார்ப்பதில்லை. இது போன்ற குழந்தைகள் தங்களை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உணர்கின்றனர். 

அரசியல் சூழல்கள், ஊடக கலாச்சாரம் மற்றும் சாதாரண உரையாடல்கள் கூட ஆழமான உணர்ச்சி காயங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எல்லோருக்கும் ஒரு சக்தி இருக்கிறது. சக்தி என்பது திறனை பற்றியது அல்ல, நோக்கத்தின் வெளிப்பாடு. நம்மிடம் உள்ள சக்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். அந்தக் குழந்தைகளும் சூப்பர் சக்தி பெற்ற ஹீரோக்கள்தான்.

ஒரு சாதாரண துணி இவர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. நான் என் சக்தியை இவர்களுக்கான பொம்மைகளை தயாரிக்க பயன்படுத்துகிறேன். ஒரு பொம்மை எவ்வாறு ஒரு குழந்தையின் வாழ்வை மாற்றும் என்று நினைக்கலாம்.  பொம்மை கடைகளுக்கு சென்றால் நம்மைப் போலவே தோற்றமளிக்கும் பொம்மைகளை பார்க்க முடியும். ஆனால், இந்தக் குழந்தைகளுக்கு அப்படி இருப்பதில்லை. 

இவ்வளவு பெரிய உலகில் தங்களை அங்கீகரிக்காத, பிரதிபலிக்காத ஒரு பொருள் இல்லை என்பது அந்தக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுக்கிறது. இதனால் அவர்களின் உளவியல் வளர்ச்சியும் பாதிக்கிறது. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் அவர்களை நேசிப்பதை போல் இருப்பதால் பொம்மைகள் அவர்களை உளவியல் ரீதியாக குணப்படுத்துகின்றன” என்றவர், அவர் தயாரிக்கும் பொம்மைகள் குழந்தைகளின் நலனில் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து விளக்குகிறார். 

“குழந்தை புற்றுநோயியல் துறையில் பணியாற்றியிருக்கிறேன். என் அனுபவத்தில் குழந்தைகள் பற்றிய சில புரிதல்கள் உள்ளன. பொம்மைகள் குழந்தைகளை குணப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. பொம்மைகள் தொடர்ந்து குழந்தைகளிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளில் ஒன்று. அவை குழந்தைகளின் அனுபவங்களைச் செயலாக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவுகின்றன. 

நான் முதலில் விளையாட்டாக ஒரு பொம்மையை செய்திருந்தேன். அதனை ஆன்லைனில் பார்த்த ஒருவர் தன்னுடைய மகளுக்கும் ஒரு பொம்மை வேண்டும் என்றார். ஆனால், அந்த பொம்மை தன் மகளைப் போலவே ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புற்றுநோய் பாதிப்பினால் அந்தச் சிறுமியின் ஒரு கால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. நான் அதை தயாரித்துக் கொடுத்ததும் அவர் அதை ஆன்லைனில் பகிர்ந்தார். 

அதனை தொடர்ந்து எனக்கு 200க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்தன. இதுதான் என் வாழ்வின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டேன். உடல் அல்லது மருத்துவ மாறுதல்கள் உள்ள குழந்தைகளுக்காக அவர்களை பிரதிபலிக்கும் பொம்மைகளை தயாரிக்கத் தொடங்கினேன். போலந்து நோய்க்குறியுடன் பிறந்த ஹோப் என்ற சிறுமிக்காக பொம்மையை உருவாக்கும் போது அவளது கையிலும் ஒரு நீண்ட பிறப்பு அடையாளம் இருந்தது. 

அதே போன்ற அடையாளங்களுடன் பொம்மை தயாரிக்க முயற்சி செய்து தோல்வியுற்று கைவிட நினைத்து வருத்தத்துடன் நின்று கொண்டிருந்த போது என் மகன் என்னிடம் வந்து, “அவர்களை போல பொம்மைகளை உருவாக்குவதே உங்களுக்கு கடினமாக இருக்கிறதென்றால், நிஜத்தில் அனுபவிக்கும் அவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்குமென்று யோசித்துப் பாருங்கள்” என்றான். நான் ஆழமாக சிந்தித்தேன். ஒரு சவாலை ஏற்றுக்கொள்வதும் ஒரு சக்திதான். நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு சிறுமியை போன்ற பொம்மையை தயாரித்து கொடுத்தேன். 

பின்னர் அதிகாரப்பூர்வமாக ‘A Doll Like Me’ என்ற பெயரில் லாபநோக்கமற்ற அமைப்பை தொடங்கி இது போன்ற குழந்தைகளுக்காக பொம்மைகளை தயாரிக்க தொடங்கினேன். இதுவரை 1,500க்கும் மேற்பட்ட பொம்மைகளை என் கைகளால் செய்துள்ளேன்” என்ற எமி தயாரிக்கும் பொம்மைகள் குழந்தைகளிடம் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. 

“நான் தயாரிக்கும் பொம்மைகள் தற்போது 50 மாநிலங்களிலும் 35க்கும் மேற்பட்ட நாடுகளிலும் உள்ள குழந்தைகளுடன் வாழ்கின்றன. அவர்களுக்கு அவை வெறும் பொம்மைகள் அல்ல. அவர்களின் தோழர்கள், பாதுகாவலர்கள், அவர்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும் உள்ளன. அறுவை சிகிச்சை அறைகளுக்குள் கூட இந்த பொம்மைகள் கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனை படுக்கைகளில் தூக்கமில்லாத இரவுகளை கடக்க இந்த பொம்மைகள் உதவியிருக்கின்றன. 

குழந்தைகளுக்கு உறுதி மற்றும் அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த பொம்மைகள் ஒவ்வொரு குழந்தைக்காகவும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்கிற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கதைகளை என்னிடம் பகிர்கிறார்கள். நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நம்மிடம் பெர்ஃபெக் ஷன் தேவையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தக் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார் எமி.

ரம்யா ரங்கநாதன்

வாசகர் பகுதி 

இல்லம் சிறக்க கோலம்!

கோலம் என்றால் அழகு என்று பொருள். கை விரலுக்கு பயிற்சி, கற்பனைத் திறனுக்கு வேலை, நுரையீரலுக்கு நன்மை, இடுப்பு, கால் எலும்புகளுக்கு வலிமை, ஞாபகத் திறனுக்கு ஊக்குவிப்பு என பல நன்மைகள் இந்த கோலமிடுவதால் ஏற்படுகிறது.தினமும் கோலமிட, நம் இல்லமும், உள்ளமும் சிறக்கும்.

*சின்ன கோலமிட்டாலும் நேர்த்தியாக, ஒரே சீராக இழை இழையாக கோலமிட, பார்க்க நன்றாக இருக்கும்.

*புள்ளிகளை கலர் மாவில் வைத்து பின் வெள்ளை மாவில் கோலமிட எளிமையாக  கலர் கோலமாக போட்டு விடலாம்.

*புள்ளி வைத்து பின் கோலத்தை விரிவுப்படுத்தி போட ரங்கோலி நேராக, கோணலின்றி அழகாக வரும்.

*தற்போது ரங்கோலி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதைக் கொண்டு போட, அழகாக பளிச்சென்று இருக்கும்.

*கோலமிட்டதும் கோலத்தை சுற்றி பார்டர் இட அழகாக இருக்கும். புள்ளி சிக்கு கோலமெனில், பூக்கோல பார்டரும், பூக்கோலமெனில் சிக்கு போல பார்டரும் இட அழகாக இருக்கும்.

*செம்மண் பார்டர் கொடுக்க எல்லா கோலங்களும் பளிச்சென்று இருக்கும்.

*மாக்கோலம் போடும் போது, வெள்ளை மாவு ஒரு பாகம், சிவப்பு, பச்சை, மஞ்சள் என கலர் கலந்து தனித்தனியே எடுத்துக் கொண்டு, கோலத்தை கலரில் வரைய காய்ந்ததும் சூப்பராக இருக்கும்.

*ஸ்பாஞ்ச் வைத்துக் கொண்டு மாக்கோலமிட, அழகாக வரும்.

*கூடிய வரை தெய்வப்படங்கள், தெய்வ சின்னங்களை தரையில் போடுவதை தவிர்க்கலாம். பூஜை அறையில் போட நன்றாக இருக்கும்.

*சாணம், பூசணிப்பூ கிடைக்கவில்லை என்றால், பஞ்சகவ்ய விளக்கு வைத்து பெங்களூர் ரோஜாவை கிழமைக்கேற்றவாறு வைத்து அழகுபடுத்த சூப்பராக இருக்கும்.

*அபார்ட்மென்ட் வீடெனில் ஸ்டென்சில், கோல ஸ்டிக்கர் வைத்து கோலமிட்டு கலரிட அழகாக இருக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.