பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!



நீல நிற ஜெர்ஸி அணிந்து கொண்டு தயாராக களத்தில் நிற்கிறார்கள். எதிரில் இருந்து பந்து வரும் சத்தம் கேட்டதும் சிறிதும் தாமதிக்காமல் மட்டையை கொண்டு பந்தினை அடிக்கின்றனர். வேகமாக ஓடி ரன் எடுக்கின்றனர். 
அற்புதமாக ஃபீல்டிங் செய்கின்றனர். இது பார்வையற்றவர்களுக்கான போட்டிதானா என நம் கண்களே வியந்து பார்க்கும்படி, மகளிர் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியை திறமையுடன் விளையாடி உலகக் கோப்பையை வென்றிருக்கின்றனர் இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர்.
 
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் கடந்த மாதம் டெல்லியில் தொடங்கியது. பெங்களூரில் சில போட்டிகள் நடந்த பிறகு, நாக் அவுட் போட்டிகள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் நடைபெற்றது. 

நவம்பர் 23 அன்று கொழும்பில் நடந்த இறுதி ஆட்டத்தின் போது டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். நேபாள அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதல் முறையாக பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று முத்திரை பதித்தது.
மாபெரும் சவால்களை கடந்து வெற்றியை தழுவி இருக்கும் இந்த வீராங்கனைகளில் சிலர் கடந்த சில வருடங்களாகத்தான் கிரிக்கெட் விளையாட்டை கற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். ‘‘இதில் பெரும்பாலான வீராங்கனைகள் கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களுக்கு தடைகளாக இருந்தன. 

குடும்பத்தினரும் ஆசிரியர்களும் அவர்கள் மேலும் விளையாட்டைத் தொடர அனுமதிக்க தயக்கம் காட்டினார்கள். மேலும் பார்வையற்றோர் கிரிக்கெட் விதிகளை அறிமுகப்படுத்தவே நேரம் எடுத்தது. ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் பெருமையுடன் வெற்றியை கொண்டாடுகின்றனர்” என்று அணியின் மேலாளர் ஷிகா ஷெட்டி கூறினார். 

சத்தம், நேரம் மற்றும் திசையை நம்பக் கற்றுக்கொள்வது சவாலானது. இருப்பினும் பார்வையற்றோர் கிரிக்கெட்டில் வீரர்கள் சரியான கையாளுதலுடன் விளையாடுகின்றனர். இதற்காக சத்தம் எழுப்பக்கூடிய உலோகத் தாங்கிகள் கொண்ட பிளாஸ்டிக் பந்து பயன்படுத்தப்படுகிறது. மேலும், வீராங்கனைகள் அவர்களின் பார்வைத்திறன் அடிப்படையில் B1, B2, B3 என்ற மூன்று வகைகளாக தொகுக்கப்படுகிறார்கள். இதில் B1 பிரிவினர் முழுவதுமாக பார்வையற்றவர்கள். 

B2 வகையினர் மிகவும் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே பார்வைத்திறன் கொண்டவர்கள் மற்றும் B3 வகையினர் பகுதியளவு பார்வைத்திறன் கொண்டவர்கள். ஒவ்வொரு அணியிலும் இந்த மூன்று வகையினரும் இருக்க வேண்டும். 

அண்டர்ஆர்ம் (Underarm) எனும் பந்தெறிவு முறையில் தரையோடு ஒட்டியவாறு பந்து எறியப்படுகிறது. B1 பிரிவினர் பேட்டிங் செய்யும் போது ரன் எடுக்க தனிநபர்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் இரண்டு என கணக்கிடப்படுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆறு அணிகளும் ஒற்றை ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடின. 

இந்தியா ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணி எனும் பெருமைப் பெற்றது.இந்திய அணியின் கேப்டனாக தீபிகா தலைமை ஏற்றார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், குழந்தை பருவத்தில் ஒரு விபத்துக்குப் பிறகு தனது பார்வையை இழந்துள்ளார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க ஆசிரியர்கள் தயங்கிய போதிலும் முயற்சி செய்ய ஊக்குவித்துள்ளனர். காலப்போக்கில், இந்த விளையாட்டு  அவருக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. 

‘‘இது எனக்கும் எனது அணிக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். இந்த மாதத் தொடக்கத்தில், பார்வைத்திறன் கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நவி மும்பையில் உலகக் கோப்பையை வென்றார்கள். அவர்களை தொடர்ந்து நாங்களும் வென்று சாதனையை இரட்டிப்பாக்கியிருக்கிறோம். இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆண்கள் டெஸ்ட் அணித் தலைவர் ஷுப்மன் கில் ஆகியோரின் ஆதரவு எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது” என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார்.

அணியின் துணைத் தலைவராக விளையாடிய கங்கா கதம், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். தனது கிராமத்தில் உள்ள பார்வையற்ற பெண்களுக்கு விளையாட்டுகளை விளையாட உத்வேகம் அளித்து வருகிறார் கங்கா கதம். அணியில் பேட்டராக களமிறங்கிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 20 வயதான அனேகா தேவி, பகுதியளவு பார்வையுடன் பிறந்தவர். 

பள்ளிக்குப் பிறகு டெல்லியில் ஒரு பார்வையற்றோர் கிரிக்கெட் முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்றார். “அறியப்படாத குரல்கள் மற்றும் நுட்பங்களுடன் நடைபெற்ற ஆரம்ப கால அமர்வுகள் சங்கடமாக இருந்தது” என்று குறிப்பிடும் அனேகா, கேட்கக்கூடிய பந்தின் அமைப்பை சரியாக புரிந்து கொண்டு பயிற்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பின்னரே அணியில் சேர்ந்துள்ளார். அணியின் மற்றொரு வீராங்கனையான பூலாசரண் ஒடிசாவின் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஐந்து வயதில் தனது இடது கண்ணில் பார்வையை இழந்ததோடு மட்டுமின்றி, சிறிது காலத்திலேயே தன் தாயையும் இழந்துள்ளார். 

பார்வையற்றோருக்கான பள்ளியின் ஆசிரியர் இவரை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுனிதா சரத்தே, தன் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், நண்பரின் பரிந்துரையின்படி பார்வையற்றோர் கிரிக்கெட் முகாமில் சேர்ந்தார். அணியில் தாமதமாகச் சேர்ந்ததால் அவர் தீவிரமாகப் பயிற்சியினை மேற்கொண்டு திறமையாக ஃபீல்டிங் செய்தார். 

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் (WBCC), 1996 முதல் இந்த விளையாட்டை கண்காணித்து வருகிறது. பார்வையற்ற ஆண்களுக்கான ஆட்டம் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், முதல் 50 ஓவர் உலகக் கோப்பை 1998ல் மற்றும் முதல் டி20 உலகக் கோப்பை 2012ல் நடைபெற்றது. இந்த ஆண்டு மகளிருக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றது இதுவே முதல்முறை.

இந்தத் தொடரை உருவாக்குவதற்கும் அணிகளை திரட்டுவதிலும் சவால்கள் இருந்த போதிலும். இப்போது மத்திய மற்றும் பல மாநில அரசுகள், ஸ்பான்சர்கள், கார்ப்பரேட் உலகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

மேலும், அதிக நாடுகள் மகளிர் அணிகளை களமிறக்குவதால், மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட்டின் தரமும் உலகளாவிய தரமும் விரைவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற ஆறு நாடுகளை சேர்ந்த பார்வையற்ற கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.

ரம்யா ரங்கநாதன்