சொந்த ஊரில் எங்களுக்கான வீடு கட்டணும்!



‘‘நான் சின்ன வயசில் இருக்கும் போதே என் பெற்றோர் இருவருமே தவறிட்டாங்க. எனக்கு ஒரு அண்ணன், தம்பி. நாங்க மூவருமே ஹாஸ்டலில்தான் வளர்ந்ேதாம். என் உறவினர்கள் உதவியால் படிச்சோம். நான் +2க்குப் பிறகு மேல படிக்கல. 
அதன் பிறகு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் என் கணவரை சந்தித்தேன். திருமணத்திற்குப் பிறகுதான் நான் இந்த பிசினசே ஆரம்பிச்சேன்’’ என்று கடகடவென்று பேசத் துவங்கினார் கருணை தேவி. இவர் ‘கேரளத்து தமிழச்சி’ என்ற பெயரில் இணையத்தில் மிகவும் ஃபேமஸ். காரணம், இவர் ஹேர் ஆயில் மற்றும் குளியல் பொடியினை தயாரித்து கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் விற்பனை செய்து வருகிறார். 
‘‘என் கணவரின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு கேரளாவுக்கு வந்துட்டேன். அதுவரை சென்னையில்தான் நானும் என் கணவரும் வேலை பார்த்து வந்தோம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் என் மாமியார் என்னை கேரளாவுக்கே வரச்சொல்லிட்டாங்க. இங்க வந்து ஐந்து வருஷமாச்சு. 

நான் சென்னையில் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்தேன். கடை முழுதும் பளிச்சென்று விளக்கு போடப்பட்டிருக்கும். அந்த விளக்கின் ஒளி காரணமாக என் முடி வறண்டு போனது. 

பொடுகு மற்றும் முடிக் கொட்டும் பிரச்னையும் இருந்தது. எந்த ஷாம்பு போட்டும் குணமாகல. இங்க கேரளா வந்த பிறகு என் மாமியார் ஒரு எண்ணெய் கொடுத்து தலையில் தேய்க்க சொன்னாங்க. அதன் பிறகு தலைமுடி கொட்டல. பொடுகு தொல்லையும் காணாமல் போனது. தலைமுடியும் ஆரோக்கியமானது. அப்பதான் என் மாமியாரிடம் கேட்டேன். 

அவங்கதான் அந்த எண்ணெயில் என்ன சேர்க்கணும், எப்படி தயாரிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. தலைமுடி உதிர்வது பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை. அதற்கான தீர்வு என் கையில் இருக்கும் போது அதை அவங்களுக்கு கொடுக்க விரும்பினேன். முதலில் என் நண்பர்கள் மற்றும் எங்க வீட்டில் அருகில் உள்ளவர்களுக்கு என் மாமியார் சொல்ல தயாரித்து சாம்பிளாக கொடுத்தேன். அதில் 90% ஆர்டர் கொடுத்தாங்க. அப்படித்தான் ‘நேஹாஸ் ஹெர்பல் ஹவுஸ்’ என்ற பெயரில் ஒன்றரை வருஷம் முன்பு பிசினஸா ஆரம்பிச்சேன். 

வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு சோப்பிற்கு பதிலாக குளியல் பொடி பயன்படுத்துவது வழக்கம். இங்கும் என் மாமியார் என் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக குளியல் பொடிகளை தயாரித்து கொடுத்தாங்க. உடல் முழுதும் தேங்காய் எண்ணெய் பூசி இந்தப் பொடிகளை தேய்த்துதான் குளிப்பாட்டுவாங்க. 

முதலில் நான் பயந்தேன். ஆனால், என் குழந்தைகளின் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருந்தது. அதை என் யுடியூப் சேனலில் பதிவு செய்தேன். பலரும் ஆர்டர் செய்ய, குளியல் பொடியினை தயாரித்து விற்பனை செய்தேன். இதைத் தொடர்ந்து ஃபேஸ் பேக்கும் ரெடி செய்தேன். முதலில் இதை சாம்பிளாக கொடுத்தேன். 

அதன் பிறகு தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தேன்’’ என்றவர், அழகு சார்ந்த ஹேர் ஆயில், ஃபேஸ் பேக் மட்டுமில்லாமல் குடம் புளி, மிளகு, ஜாதி பத்திரி, ஜாதிக்காய், சிவப்பு சந்தனப் பவுடர், நால்பமராதி பட்டைகள், பதிமுப்பட்டை என பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.‘‘எங்க வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் இருக்கு. அதில் மிளகு, ரப்பர் மரங்கள் உள்ளது. 

மேலும், தலைமுடி எண்ணெய், குளியல் பவுடர், மற்றும் ஃபேஸ் பேக்கிற்கு தேவையான சில மூலிகைகளும் எங்க தோட்டத்தில்  இருக்கிறது. மற்ற மூலிகைகளை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறேன். இதில் நாங்க எந்தவித ரசாயனப் பொருட்களும் சேர்ப்பதில்லை. இயற்கையான முறையில் காய வைத்து அதை அப்படியே பொடி செய்து தருகிறோம். 

நான் பத்தாம் வகுப்பில் இருந்தே வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். குழந்தைகளுக்கு பிறகு கேரளாவில் செட்டிலானதால், இங்கு வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அப்படித்தான் இந்த பிசினஸை படிப்படியாக துவங்கினேன்.

ஆரம்பத்தில் பெரிய அளவில் விற்பனை இல்லை. அதனால் நான் ஒவ்வொரு ஆர்டர் கொடுக்கும் போதும் அதில் வேறு பொருட்களை சாம்பிளாக வைத்து தருவேன். அதைப் பயன்படுத்தி பார்க்கும் போது, அவர்களுக்கு பிடித்துப் போகும். அதை ஆர்டர் செய்வார்கள். இப்படித்தான் என்னுடைய பிசினஸை நான் டெவலெப் செய்தேன். 

பிசினஸ் பொறுத்தவரை நான்தான் அதை முழுக்க முழுக்க பார்த்துக் கொள்கிறேன். என் கணவருக்கு சென்னையில்தான் வேலை. அவர் மாதம் ஒரு முறைதான் இங்கு 
வருவார். அதனால் பொருட்களை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவது, மற்ற பொருட்களை வாங்குவது என அனைத்தும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். வீட்டிலேயேதான் செய்கிறோம். எண்ணெய்க்கு தேவையான பொருட்களை முதலில் உரலில் இடித்துதான் சேர்க்கிறோம். 

பிரம்மி, கரிசலாங்கண்ணி, துளசி, செம்பருத்தி பூ மற்றும் இலை, ஆவாரம்பூ, அதிமதுரம் என 30க்கும் மேற்பட்ட மூலிகைகளை அரைத்து எண்ணெயில் சேர்த்து காய்ச்சி கொடுக்கிறோம். வாரத்திற்கு 50 லிட்டர்தான் காய்ச்சுவோம். அது தீர்ந்த பிறகு அடுத்த பேட்ச் காய்ச்சுவோம்’’ என்று கூறும் கருணை தேவியின் முழு பக்கபலமாக இருப்பது அவரின் மாமியாரும் கணவரும்தான். 

‘‘நான் ஏற்கனவே சொன்னது போல என் கூட பிறந்தவங்க ஒரு அண்ணனும், தம்பியும்தான். அவங்க சென்னையில் இருக்காங்க. எனக்கு பெற்றோர் இல்லை என்பதால் எல்லாமே என் கணவரும், மாமியாரும்தான். அண்ணன், தம்பியை அடுத்து நண்பர்கள்தான் உறவினர்கள். அவர்கள் திருமணத்திற்கு வந்திருந்த போது இங்குள்ள ஸ்பெஷல் சிப்ஸ் கேட்டாங்க. அதனுடன் நான் என் மாமியாரின் ஸ்பெஷல் ஹேர் ஆயிலையும் கொடுத்தேன். அது அவங்களுக்கு பிடித்துப் போனது. 

அதைத் தொடர்ந்துதான் நான் மற்ற பொருட்களை எல்லாம் தயாரிக்க ஆரம்பித்தேன். எங்க தோட்டத்தில் விளையும் பொருட்கள் குறித்தும் இணையத்தில் பதிவு செய்தேன். அதற்கான தனிப்பட்ட ஆர்டர்களும் வந்தது. 

நம்ம நாட்டில் அனைத்து மருத்துவ பொருட்களும் உள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்தால் போதும். அப்படித்தான் எண்ணெயில் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் சீயக்காய் சேர்த்து ஷாம்புவாக ரெடி செய்தேன்’’ என்றவர், இணையத்தில்தான் தன்னுடைய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 

‘‘முதலில் நான் செய்த பொருட்கள் குறித்து வாட்ஸாப், இன்ஸ்டா, யுடியூப்பில் பதிவு செய்தேன். யுடியூப்பில் எங்க தோட்டத்து மிளகு மற்றும் ஜாதிக்காய் பற்றி ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதைப் பார்த்து வாடிக்கையாளர்கள் எனக்கு ஆர்டர் செய்தாங்க. 

அதுதான் இன்று வரை தொடர்கிறது. வாட்ஸாப், இன்ஸ்டா மூலம்தான் ஆர்டர் பெறுகிறேன். இப்போது இணையமும் துவங்க இருக்கிறேன். சில சமயம் ஆர்டர் அதிகமாக வரும் போது மிளகு, புளி, ஜாதிக்காய் என்னுடைய தோட்டத்தில் மட்டுமில்லாமல் மற்றவர்களின் தோட்டத்தில் இருந்தும் பெற்றுக் கொடுப்பேன்.இப்பதான் பிசினஸ் படிப்படியா முன்னேறி வருகிறது. 

இதுநாள் வரை வீட்டில் வைத்துதான் தயாரித்து வந்தோம். இப்போது ஒரு ஷெட் அமைத்து மேலும் வேலையாட்களை நியமித்து அதிக அளவில் செய்கிறோம். இதை மேலும் ஒரு யூனிட் மாதிரி அமைக்க இருக்கிறேன். 

அடுத்து எங்க தோட்டத்தில் முழுக்க முழுக்க மூலிகைகளை பயிர் செய்ய இருக்கிறேன். காரணம், சில மூலிகைகள் எங்களின் தோட்டத்தில் விளைகிறது. மற்றதை நான் நாட்டு மருந்து கடைகளில்தான் வாங்கி பயன்படுத்துகிறேன். அவற்றையும் என்னுடைய தோட்டத்தில் பயிர் செய்தால் நான் செய்யும் பிசினஸ் முழுமையாக இருக்கும்.

மேலும், வாடிக்கையாளர்கள் பொருத்துதான் இதை நான் விரிவாக்க இருக்கிறேன். நான் இந்த பிசினஸ் செய்ய ஒரே காரணம் என்னுடைய சொந்த ஊரில் எங்களுக்கான ஒரு அழகான வீடு கட்டணும். என் அண்ணன், தம்பி எல்லோரும் வாடகை வீட்டில்தான் இருக்காங்க. என்னுடைய சொந்தம்னா அவங்க இரண்டு பேர்தான். அதனால எங்களுக்காக எங்க ஊரில் ஒரு வீடு கட்டணும்’’ என்றார் கருணை தேவி.

ஷன்மதி