ஆப்பிரிக்காவில் கோமாளிமேடை!



2015 ஆம் ஆண்டு சீனா கென்யாவுக்குள் நுழைந்தது. பல்வேறு சுரங்கங்களைத் தொடங்கி அமெரிக்கா மாடலில் நாட்டைச் சுரண் டியது. கலைஞர்கள் சும்மாயிருப்பார்களா? மைக்கேல்சோய் என்ற கென்ய கலைஞர், நைரோபியிலுள்ள ஸ்டூடியோவில் சீனா லவ்ஸ் ஆப்பிரிக்கா என்ற தலைப்பில் சீனர்களைக் கலாய்க்கும் படங்களாக வரைந்தார். சீனர்களே தேடிவந்து பார்க்கும் அணிவரிசை அது.

கென்யாவுக்கு மருத்துவ மனைகள், சாலைகள் அமைத்துத் தருகிறது சீனா என சீனர்கள் பேசினாலும், கலைஞர்கள் அதனை ஏற்கத்தயாராக இல்லை. Ken Saro-Wiwa, Ayi Kwei Armah, Wole Soyinka, Chinua Achebe,Ngugi Wa Thiong’o ஆகிய எழுத்தாளர்கள் முந்தைய தலைமுறை எனில் மைக்கேல் சோய் போன்றோர் இத்தலைமுறையினருக்கு கார்ட்டூன், கேரிகேச்சர் மூலம் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள்.

நைஜீரியாவின் பிரபல அரசியல் பகடி நிகழ்ச்சியான ‘தி அதர் நியூஸ்’ அரசியல்வாதிகளின் முகங்களைக் கிழித்தெறிகிறது. “கதையில் வருவதைப்போல அரசன் உடையின்றி நிர்வாணமாக இருப்பதை நாங்கள் அப்பட்டமாகக் கூறுகிறோம்” என்கிறார் அரசியல் பகடிகளுக்கான நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஆஸ் அனெக். ஆப்பிரிக்கா, கானா உள்ளிட்ட நாடுகளிலும் ஓவியர்கள் அரசியல் பகடிச் சித்திரங்களை வரைந்து ஜனநாயகம் காக்கிறார்கள்.