உயிர்க்கொல்லி மீன்!ஜப்பானின் கமகோரி நகரமெங்கும் ஸ்பீக்கர்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எதுபற்றி? அங்காடிகளில் விற்கப்படும்  பஃபர்மீன்  பற்றித்தான். கவனமாக சாப்பிடாவிட்டால் உயிர் கொல்லும் எமனாகும் மீன் இது. அங்காடிகளில் மீனின் கல்லீரலை அகற்றாமல் விற்று விட்டதுதான் அபாயத்திற்குக் காரணம். அதில்தான் நரம்புகளை பாதிக்கும் டெட்ரோடோ நச்சு நிறைந்திருந்தது.

இது  ஒவ்வொரு  ஆண்டும்  ஏற்படுவதுதான். ரூல்கள் கடுமையாக விதிக்கப்பட்டும்   தீராத  பிரச்னை இது. தற்போது  பஃபர் மீன்களின் தன்மை  அறியாத மீனவர்கள் வலையில்  சிக்கியதை  சாப்பிட்டு பலரும் பாதிக்கப்பட, விவகாரம் இன்டர்நேஷனல் லெவலுக்கு சென்றுவிட்டது.

இரண்டு மி.கி.  டெட்ரோடோ டாக்சின் மனிதரைக் கொல்ல போதும். நரம்புகளைத் தாக்கி ரத்தத்திலுள்ள சோடியத்தை உறைய வைத்து, மூச்சுத்திணறலை உருவாக்கும். பின் பந்தயக்குதிரையாக ஓடிய இதயத்துடிப்பு பிரேக்டவுன் பஸ்ஸாக நின்றுபோக மரணம் நேரும்.

இந்த நச்சை பஃபர்பிஷ் உடலில் குறிப்பிட்ட  பாக்டீரியாக்கள்  உருவாக்குகின்றன. இங்கிலாந்தின் தென்பகுதி கடலிலுள்ள மீன்களிலும் டெட்ரோடோ நச்சு காணப்படுகிறது. மருத்துவத்தில் இது புற்றுநோய் வலிநிவாரணியாகவும் பயன்படுகிறது.