அதிசய டாக்டர் பென்ஃபீல்ட்!முன்பு  ஒருவருக்கு  திடீரென காக்கை வலிப்பு ஏற்பட்டபோது, காரணம் என்ன என டாக்டர்களுக்கே புரியவில்லை. சுய இன்பம் டூ பாகமதி பேய்வரை யூகங்கள் அதிரிபுதிரியாக கிளம்பின.

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள ஸ்போக்கனே எனுமிடத்தில் 1891 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பிறந்த  கனடா- அமெரிக்கரான  வைல்டர் பென்ஃபீல்ட், வலிப்பு நோய்  குறித்த  கற்பனைகளை   உடைத்தெறிந்தவர்.  வலிப்பு  நோயால்  பாதிக்கப்பட்ட மூளையின் திசுக்களை  அகற்றுவதன்  மூலம்  காக்கை  வலிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு  காண  முடியும் என  நம்பினார்  பென்ஃபீல்ட்.

அனைத்து வலிப்புநோய்களுக்கும் இது தீர்வல்ல என்றாலும் நோயாளி களுக்கு பெரும் பயனளித்த முறை  இது. வலிப்பு நோய்க்கு முன்பாக ஒருவர் உணரும் வாசனை, சுவை, கருத்து  ஆகியவற்றையும் பென்ஃபீல்ட் கருத்தில் கொண்டார். ஆபரேஷனின்போது  அவரின் நோயாளி ஒருவர் “நான் பிரட் டோஸ்ட்டின் வாசனையை  நுகர்கிறேன்” என அலறினார். 

இது வலிப்பு  தொடங்கும் முன்  அவருக்கு  ஏற்படும் வாசனை அனுபவம்.  குறிப்பிட்ட மூளை திசுவை  நீக்கிய பின்பு  அவருக்கு   இந்த வாசனையும் வலிப்பும் ஏற்படவேயில்லை.  தீர்வுக்காக  நோயாளியின் பாதி மூளை  கூட  அகற்றப்பட்டிருக்கிறது.