“உலகின் ரோல்மாடல் இந்தியா மட்டுமே!”



உலகளவில் தடுப்பூசி, வறுமை ஒழிப்பு என பாடுபடும் கேட்ஸ் பவுண்டேஷனில்  செயல்பாடுகள்  பின்தங்கிய  நாடுகளில் வெகு பிரபலம். கேட்ஸ் பவுண்டேஷனின் துணை நிறுவனரான மெலிண்டா கேட்ஸ், உயிர்காக்கும்  தொழில்நுட்பங்களின்  உதவி, இந்தியாவின் மருத்துவசிகிச்சை களின் நிலை ஆகியவற்றைக் குறித்து நம்மிடம் பேசினார்.

வறுமை  ஒழிப்பு  என்பது  ஐ.நாவின் முக்கிய மேம்பாட்டுத் திட்டம். இந்தியாவின்  உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய  இடங்களில் கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு செயல்பாடுகளை வறுமை ஒழிப்புக்கு ஆதரவாக மேற்கொண்டு  வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடம் நீங்கள் சமர்ப்பித்துள்ள திட்டம் பற்றி கூறுங்கள்?

மக்கள் எந்த சமூகத்தின் எந்தநிலையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நிலை அவசியம். கல்வி அறிவைப் பெற குறிப்பிட்ட தொகையை அவர்கள் முதலீடு செய்வது காலத்தின் அவசியம். அடுத்து, வங்கியற்ற இடங் களிலும் போன்களின் மூலமே வங்கிகளை  எளிதாக அணுகும் வசதி, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி காலத்திற்கேற்ப அதனை மேம்படுத்துவது ஆகியவற்றை நாங்கள் செயல்படுத்த ஆர்வமாக உள்ளோம்.
 
உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் வசதியின்றி, 60 குழந்தைகள் இறந்த செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்?

செய்தியை முதன் முதலில் கேட்டபோது குழந்தைகளை இழந்த பெற்றோர் களின் துயரத்தை நினைத்து வருந்தினேன். இந்தியாவின் சிறப்பே, எப்படிப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் அது உடனடியாக செய்தியாகி மக்களுக்குத் தெரிந்துவிடுவதுதான். மருத்துவமனைகளில் நவீன கருவிகளை வாங்கி, சரியான நபர்களை பயிற்சியளித்து மருத்துவமனைகளில் பணியாற்ற வைப்பது அவசியம். இந்தியாவின் மீதான நம்பிக்கையை நான் இன்னும் இழக்கவில்லை.

மலிவு விலையில் தொழில்நுட்பங்களை மக்களுக்கு வழங்குவதில் கேட்ஸ் பவுண்டேஷன்தான் முன்னணி வகிக்கிறது. தெலுங்கானாவில் கழிவறை வசதிகளை உருவாக்கித் தந்தது போன்ற புதிய திட்டங்களுக்கு உங்களை ஊக்குவிப்பது எது?

இந்தியாவை ஆச்சரியமாகப் பார்க்க காரணம், உலகநாடுகள் இந்தியாவின் உதவியின்றி சூழல்  லட்சியங்களை அடைந்து விட  முடியாது என்பதே எதார்த்தம். இந்தியா இன்று போலியோ நோயை அழித்து நோய்களைக் கட்டுப்படுத்த புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நாடும் கூட. போலியோ நட வடிக்கையை உலகெங்கும் முடுக்கிவிட எங்களுக்கு நம்பிக்கை கிடைத்ததே  இந்தியாவிடமிருந்துதான். இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட MenAfri Vac என்ற மருந்து ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் உலகிற்கான ரோல்மாடல் இந்தியா என்கிறேன்.

கிராமங்களுக்கு நீங்கள் கூறும் லட்சிய திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு இருக்கிறதா?

கலாசாரம் வேறுபட்டாலும் புதிய பயன் தரும் கண்டுபிடிப்புகளை அனைத்து மக் களுக்கும் கொண்டு சேர்க்கத்தானே வேண்டும். பெண்கள் தம் மருமகளுக்கு, மகளுக்கு சொல்லித்தரும் விஷயங்கள் அற்புதமானவை. இதுபோன்ற சுயஉதவிகளை பெண்கள் தமக்குள்ளே செய்துகொண்டு பல்வேறு தலைமுறைகளையும் ஆபத்திலிருந்து காக்கிறார்கள். உ.பியில் வீட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு பெண்கள் பிரசவம் பார்ப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

கடந்தாண்டு இந்திய அரசு, தன்னார்வ நிறுவனங்களுக்கு அயல்நாட்டு உதவிகளை மறுத்து ஆணையிட்டது. கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவி பெறும் PHFI அமைப்புகள் கூட இதனால் பாதிக்கப்பட்டன. உங்களது செயல்பாட்டை இவை எப்படி பாதித்தன?

எங்களது செயல்பாடுகள் பெரியளவு பாதிக்கப்படவில்லை. அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்ந்து நாங்கள்  ஒத்திசைவுடன் பணியாற்றி வருகிறோம். நாங்கள் இந்தியாவில் வெளிப்படையாக பணியாற்றி வருவது இம்முறையில்தான்.

நன்றி: Joeannna Fernandes, TOI

நேர்காணல்:
மெலிண்டா கேட்ஸ்,
கேட்ஸ் பவுண்டேஷன்

தமிழில்: ச.அன்பரசு