குற்றவாளி யார்?மர்மங்களின் மறுபக்கம் 44

‘‘பத்திரிகையின் செய்திக்கட்டுரைகள் தவறான கோணத்திலே போய்க்கொண்டிருந்தன. இக்கொலைக்கு தனி நபரே பொறுப்பு என்று எனது நாவலில் கூறியுள்ளேன்’’ என்று தனது கடிதத்தை  முடித்திருந்தார்ஆலன் போ.எட்கர் ஆலன் போ எழுதிய ‘மேரி ரோஜட்’ நாவல், பிரபல பெண்கள் இதழில் தொடர்கதையாக நவம்பர் 1842- 1843 என இரு ஆண்டுகள் வெளிவந்தது.

கதையில் துப்பறியும் இன்ஸ்பெக்டர் டூபன், மாநிறமான கொலைகாரனுடன்  மேரி  தொடர்புகொண்டு  பேசி  வந்தாள் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவனோடு காணாமல் போய்விட்டாள் என்றும் சொன்னார். கதைக்கு இப்படி சுபம் போட்ட  ஆலன் போ, அந்தக் குற்றவாளி யார் என்பதை வாசகர்களின் சாய்ஸிற்கே விட்டுவிட்டது செம ட்விஸ்ட்.  

“சில முக்கிய பகுதிகளை நீக்கிவிட்டோம். ஏனெனில் துப்பறியும் நிபுணர் கொடுத்த சில தகவல்களை மேற்கொண்டு ஆராய இதில் இடமிருப் பதால், அதைத் தவிர்த்து விட்டோம் என்று ஆசிரியர் கடைசி அத்தியாயத்தில் கூறியிருந்தார். நாவல்  வெளிவந்து  விற்பனையில் பெஸ்ட்  செல்லராக தூள் கிளப்பிய சமயத்தில் மேரி ரோஜரின்  வழக்கில் போலீஸ் ஒரு இன்ச் கூட முன்னே நகர துப்பு கிடைக்கவில்லை.

ஆலன் போ நாவலைப்  படித்த  வாசகர்களில் சிலர் ஆலன் போவுக்கு குற்றவாளி யார் என்பதை தெரிந்தும்  காட்டிக்கொடுக்கவில்லை என்று   பேசிக்கொண்டார்கள்.சிறந்த எழுத்தாளர் என நிரூபிக்கத்  துடித்த  எட்கர் ஆலன் போவுக்கு கடும் வறுமை.

முக்கியக்காரணம் அவரின் மொடாக்குடிப்பழக்கமே. அடிப்படையில் கோழையான ஆலன் போ, நாவலில் உணர்ச்சிகரமாக வெடிக்கும் நாயகர்கள், கொடூரக் கொலைகள், குரூர வில்லன்கள் என திட்டமிட்டு உருவாக்கி தன் ஈகோவை திருப்திபடுத்திக் கொண்டார்.

முதலில் துப்பறியும் கதைகள் எழுதினாலும், வக்கிர மூளை மனிதர்களையும் அவர்கள் மக்களுக்குச் செய்யும் கொடுமைகளையும் காட்சியாக விவரிப் பதில்  வல்லவரானார் ஆலன் போ. மக்களும் இவரின் கதை களைப் படித்து தேனில் விழுந்த ஈயானார்கள்.

நாவல் பத்திரிகையில் வந்தபோது முதல் பகுதியைப் படித்தவர்கள், ‘மாநிற கொலையாளி’ யார் என்னும் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். கடற்படை காதலரின் அதிதீவிரமான காதல் விளையாட்டால் 1838 ஆம் ஆண்டு மேரி கர்ப்பமானாள்.

அதைக் கலைக்க அக்காதலன் மாநிற டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.ஆனால் மீண்டும் 1841 ஆம் ஆண்டு சம்மரில் மேரிக்கு  குமட்டல்  எடுக்க, அதே டாக்டரிடம் மீண்டும் ஆலோசனை. மேரி கருக்கலைப்பின்போது இறந்தே போனாள் என்பது ஆலன் போ எழுதிய கதை.

இதே நாவல் புத்தக வடிவில் இரு ஆண்டுகளுக்குப்பின் வந்தபோது ஆசிரியர் அதில் 15  கரெக்‌ஷன்களைச் செய்தார். க்ளைமேக்ஸ்  மாற்றமில்லை. ஆசிரியர், தன் நண்பருக்கு  எழுதிய கடிதத்தில் அதை  மிகவும் தெளிவாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.‘‘அவர் இறந்ததற்குக் காரணம், அவளது காதலனான அந்த கடற்படை ஊழியன்தான். ஒன்று அவளை நீரில் மூழ்கடித்து கொன்றிருக்க வேண்டும். இல்லை, இரண்டாவதாக அவள் அபார்ஷனால்  இறந்திருக்க வேண்டும்’’.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி