வீணாகும் உணவு!உணவு உற்பத்தியில் ஏற்படும் தடுமாற்றத்தை விட உணவு வீணாவதைத் தடுக்க அதிக முயற்சி தேவை. டென்மார்க்கின் டேல் வேலே ரெஸ்டாரண்ட். கடை மூடும் நேரம். இரவு 10:30 க்கு ரெஸ்டாரண்ட் வெளியே முந்திரிக்கொத்தாய் இளைஞர்கள் கூட்டம். எதற்கு? மீதமாகும் உணவுகளை சல்லீசு விலையில் வாங்கத்தான்.

2014 ஆம் ஆண்டு டென்மார்க் அரசு சர்வேயின்படி, ஒரு வீட்டுக்கு 105 கிலோ உணவு வீணாகிறது. மதிப்பு ரூ.30,753. பெரும்பாலான குடும்பங்களின் ஒருமாத  உணவுக்கான தொகை. பேக்கரிகளில் தாறுமாறு சைஸ் பிரெட்டுகளும் குப்பைகளுக்குத்தான் செல்கின்றன. ஐரோப்பாவில்  ஓராண்டுக்கு 100 மில்லியன் டன்கள் உணவுக்கழிவுகள் சூழலை மாசுபடுத்துகின்றன.

இதிலிருந்து உருவாகும் 227 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு, ஸ்பெயின் நாட்டின் கரிம எரிபொருள் வெளியீட்டுக்கு சமம். வளரும்  நாடுகளிலும்  670 மில்லியன் டன்கள் உணவு வீணாகிறது என்கிறது ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு. தோராயமாக, ட்ரில்லியன் டாலர்கள்  நமக்கு  நஷ்டம் என்பதே இதன் அர்த்தம்.
     
டென்மார்க்  பல்வேறு  பிளான்கள்  மூலம்  உணவு குப்பையாவதை 25%  குறைத்து விட்டது. மக்களின் மனோபாவத்தை மாற்றியதே காரணம். இங்கு செயல்படும் வீ ஃபுட் சூப்பர் மார்க்கெட்,  Sell-by date பொருட் களுக்கான ஸ்பெஷல் கடை. டென்மார்க்குக்கு அடுத்து உணவுக்கழிவை 21% குறைத்திருக்கும் நாடு இங்கிலாந்து.

“தொண்ணூறுகளில் ரஷ்யாவிலிருந்து டென்மார்க் வந்து பேக்கரியில் பார்ட் டைம் வேலைக்கு சேர்ந்தேன். சைஸ் தவறாகி வீணாகும் பிரெட்டுகளின் அளவைப் பார்த்து பெரிய ஷாக்.  ஏனெனில் மாஸ்கோவில் கடை களில் உணவு ஐட்டங்களே இல்லாத நிலை” என்னும் செலினா ஜூல் எட்டு ஆண்டு களுக்கு முன்பு, ‘Stop Spild Af Mad ’  எனும் உணவு வீணாவதற்கு எதிரான அமைப்பை கட்டியவர்.

2008 ஆம் ஆண்டு உணவு வீணாவதற்கு எதிரான ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி விழிப்புணர்வு செய்யத்தொடங்கி REMA 1000 சூப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து இச்செயல்பாட்டை செய்கிறார். யுனிலீவர், லிடில் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடி குறைப்பு, பிரெட்டின் சைஸ், விலை குறைப்பு என பலவித பிளான் களின் மூலம் உணவு வேஸ்டாவதை 50%  குறைத்துள்ளனர்.

Too Good To Go என்ற  ஆப்பும்  ஹோட்டல்களில்  வீணாகும் உணவை மக்களுக்கு குறைந்த ரேட்டில் தர உதவுகிறது. “காலாவதி தினத்தை எட்டிய பொருட்கள் சீப் ரேட்டில் கிடைப்பது மக்களுக்கு மகிழ்ச்சி. தேவையானபோது பொருட்களை வாங்குவது இதில் அவசியம்” என்கிறார் ஆர்ஹஸ் பல்கலை ஆராய்ச்சியாளரான அஸ்லான் ஹஸ்னு.

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும் உணவுக்கழிவைத் தடுக்க சட்டங்களை கூர்தீட்டி வருகின்றன. அதேசமயம் இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் திட்டமல்ல. மீத்தேன் வாயுவை அதிகளவு வெளியிடும் நாடான அமெரிக்காவில்  உணவுக் கழிவுகளின்  பிரச்னை பெரிய விளைவை ஏற்படுத்தாது “ என்கிறார் நியூயார்க் பல்கலையைச் சேர்ந்த மெடிலைன் ஹோல்ட்ஸ்மன். டென்மார்க்கின் உணவுக்கழிவு பிரச்னையில் அரசுக்கு மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தந்ததே, திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.

விக்டர் காமெஸி