வந்தனா சிவா



பசுமை பேச்சாளர்கள் 12

இருபதுக்கும் மேற்பட  சூழலியல் குறித்த நூல்களை எழுதி  உலகளவில்  இந்தியாவின் முக்கிய  சூழலியலாளராக  அங்கீகாரம்  பெற்று வலம் வரும் டாக்டர் வந்தனா சிவா, 1952, நவம்பர் 5 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்தவர்.

சண்டிகரில் பஞ்சாப் பல்கலையில் இயற்பியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர், தன் பிஹெச்.டி படிப்பை கனடாவில் ஒன்டாரியோ பல்கலையில் படித்தார். ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து  ஆகிய நாடுகளில் மரபணு பொறியியலுக்கு எதிராக  வந்தனா நடத்திய  போராட்டங்கள்(2003) முக்கியமானவை. 

“நான் இயற்பியல் படித்தபோது இயற்கை மீதான விருப்பம் தொடங்கியது. சூழலியல் குறித்து கற்க இயற்பியலே என்னைத்  தூண்டியது. இதோடு  மக்களின் தொழில், பாகுபாடு, பொருளாதாரம் ஆகியவற்றுக்கான விடையை, நான் என் சொகுசு படுக்கையில்  படுத்துக்கொண்டு யோசிக்க  விரும்பவில்லை.

இப்படித்தான் சூழலியல் குறித்த பயணம் தொடங்கியது” என பேசும் வந்தனா சிவா, 1982 ஆம் ஆண்டு ரிசர்ச் பவுண்டேஷன் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி, இகோலஜி என்ற அமைப்பை டேராடூனில் தொடங்கி பல்வேறு சூழலியலுக்கான ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு வந்தனா  தொடங்கிய  நவ்தான்யா அமைப்பு, பல்வேறு கிராம மக்களையும் ஒன்றிணைத்து நாட்டு விதைகளை காக்கவும் அதனை பரிமாறிக்கொள்ளவுமான  இடைமுகமாக சிறப்பாக  செயல்பட்டு  வருகிறது.

‘‘நான் சிறுமியாக இருக்கும்போது  ஐன்ஸ்டீனை என் ஹீரோவாக நினைத்தேன். ஆனால் பின்னாளில் காந்தி எனக்கு ஒளிவிளக்கானார். சமூகம்  பெறவேண்டிய பாகுபாடற்ற  நிலை,  ஜனநாயகம் என்பதற்கான முழு உருவமாக காந்தியை நான் பார்க்கிறேன்” என்று பேசும் வந்தனா, 2003 ஆம் ஆண்டு சூழல் நாயகன் விருதை டைம் பத்திரிகையிடமிருந்தும், 2010 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆற்றல் வாய்ந்த பெண்கள் வரிசையிலும் இடம் பிடித்திருந்தது இவரது செயல்பாட்டிற்கான மகத்தான அங்கீகாரம்.  

நவ்தான்யா, இந்தியாவில் 16 மாநிலங்களில் 60 விதைப்பண்ணைகளை தொடங்கி 3 ஆயிரம் அரிசி வகைகளை அழியாமல் பாதுகாத்தது வந்தனா சிவாவின் சாதனை. “சமூகத்திற்கான மாற்றம் சூழல் விழிப்புணர்வை உறுதியாக நம்முள் மலர்த்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்ற வந்தனா சிவாவின் வார்த்தைகளில்தான் பிறக்கிறது எதிர்காலத்திற்கான ஆசுவாசம்.

ச.அன்பரசு