வரலாற்றுப் புகழ்பெற்ற மரண சாசனம்!மர்மங்களின் மறுபக்கம்  34

1821 ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் தேதியன்று அந்த மாவீரன் உயிர் நீத்த நாள்.‘‘நான் திடீரென இறக்கும் சூழல் அமைந்தால், அதற்குக் காரணம் ஆங்கிலேய அதிகாரிகளும், அவர்களின் கூலிப் படையும்தான்’’  என்று தான் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு  முன்பே  டைரியில் எழுதி வைத்திருந்தார் நெப்போலியன்.

படுக்கையில் அமர்ந்தவாறு, மடியில் ஒரு  அட்டையை மேஜையாகக்  கருதி, அதில் தான் முன்பு தன்  வேலையாளிடம்  டிக்டேட் செய்த வசனங்களை, தன் நடுங்கும் கைகளால் நகல் எடுத்து தனது மரண  சாசனமாக்கினார்.

தென் அட்லாண்டிக்கில், செயிண்ட் எலினா தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டபோது  இதுதான் தன் முடிவு  என்றுதான் அவர்  நினைத்திருந்தார். அப்போது  அந்தத் தீவின் கவர்னராக  இருந்த ஹட்சன் லோயினால் தனக்கு தீமை நேரும் என்று மன்னர்  நெப்போலியனின் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது.

நெப்போலியன் அந்த தனிமைச் சிறையிலேயே உயிர்  விட்டபோது ஏழு பிரிட்டிஷ் டாக்டர்கள் அங்கே வந்து கூடினர். எதற்காக? மன்னரின் குடும்ப மருத்துவரான பிரான்செஸ்கோ அட்டோன்மார்க்கி, மூன்று மணி நேரம் போஸ்ட்மார்ட்டம் செய்ததை பிக்பாஸாக  கண்காணிக்கத்தான். இந்த டாக்டர்களில், உள்ளூர் கவர்னரின் டாக்டரும் ஒருவர். ஆனால் அவர்களுக்கு நெப்போலியனின் உயில் பற்றி அப்போது ஏதும் தெரியாது.

எல்லா டாக்டர்களும் பரிசோதனை நடத்தியபின் தனித்தனியாக நான்கு  அறிக்கைகள்  தயார்  செய்து அரசிடம் கொடுத்தனர். குடலில் கான்சர் போன்ற அல்சர் நோயினால் அவர் இறந்தார் என்பதுதான் அனைவரின் ஏகோபித்த முடிவு. ஐரோப்பாவில்  நெப்போலியன் மரணம்  மக்களிடையே 25 ஆண்டுகளாக  கிடைக்காத  மன நிம்மதியைப்பெற்றுத் தந்தது.

நெப்போலியனின் பாடிகார்டான லூயி மார்சந்த்  எழுதியது - தன் மகளுக்கு தன் சுயசரிதையை அனுப்பியபோது ‘‘நீயும், உன் வருங்கால சந்ததியும், இந்த மன்னன் என்னை எப்படி தன் அருகிலேயே  வைத்துக்  கொண்டு அன்பு செலுத்தினார் என்பதை அறிந்து கொள்வதற்காக,
என் சரித்திரத்தை உனக்கு அனுப்பி இருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

1955 ஆம் ஆண்டு இந்த மெய்க்காப்பாளரின் சரிதை  அவரது பேரனால் நூல் வடிவம் பெற்று ரிலீசானது. எவராலும் லூயி மார்சந்த் எழுதியுள்ள உண்மை ஆதாரங்களை மறுக்கவே  முடியவில்லை.

இதில் ஒரு டாக்டர்  மட்டும்  இந்நூலைப்  படித்து விட்டு, நெப்போலியன்  விஷம்  கொடுத்து தான் கொல்லப்பட்டு  இருக்கிறார் என்கிற முடிவுக்கு வந்தார். மன்னர் மறைந்து 157 ஆண்டு களுக்குப் பிறகு 1978 ஆம்  ஆண்டு  மற்றொரு மாபெரும் மர்ம உண்மை உலகிற்குத் தெரிய வந்தது. நெப்போலியனோடு நாடு கடத்தப்பட்ட  இன்னொரு பிரெஞ்சு அதிகாரிதான் நெப்போலியனைக்  கொன்றார் என்பதே அது.

1798 ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனின் உறுதுணையாக இருந்து  உதவியவர்கள் அரண்மனை நிர்வாகியான ஹென்றி கிரேடியன் பெர்ட்ராண்ட், மன்னரின் நண்பரான சார்லஸ் டிரிஸ்டன் ஆகியோர்தான். சார்லஸின் மனைவியும் இப்பயணத்தில் உடன் வந்தது பல கிசுகிசுக்களை உருவாக்கியது. இந்தப் பெரிய குழு, 23 அறைகள் கொண்ட ‘லாங்  உட் அவுஸ்’ என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். துறைமுகத்தி
லிருந்து இது சுமார் ஆறு மைல் தூரம்.

தினமும் மன்னரின் பொழுது மிகவும் அமைதியாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும்  சீட்டு விளையாட்டு, பில்லியர்ட்ஸ் விளையாட்டு என தொடரும். தினசரி நெப்போலியன், தனது வாழ்க்கையை சொல்லச் சொல்ல, ஒரு உதவியாளர் அதை எழுதிக் கொண்டு வருவார். இதைத்தான் கைப்பட  திருத்தி  எழுதினாராம் நெப்போலியன்.

அப்போதுதான் நெப்போலி யனுக்கு எமனாக அத்தீவுக்குப் புதிய  கவர்னராக  ஹட்சன் லோயி 1816   ஆம்  ஆண்டு வந்து சேர்ந்தார். கவர்னர் செய்த அட்ராசிட்டிகள்  நெப்போலியனுக்கு  அவர்  பேரில் கொலைவெறியை ஏற்படுத்தின. தன்னைக்  கொல்லப்போவது  ஹட்சன்தான்  என்று  தன்  சகாக் களுடன்  பேசும்போது மன்னர் கூறி வந்தார்.

சளி, சூரிய வெளிச்சம்  பட்டால் தலைவலி, பல் ஈறுகளில் சிதைவு உள்ளிட்ட சிக்கல்கள் திடீரென ஏற்பட்டன. மன்னர் வெளியில்  செல்வதையே  நிறுத்தி விட்டார். ஐரிஷ் டாக்டர்  பேரி ஓமியாரா தனது சந்தேகங்களை அடிக்கடி பிரிட்டனில் உள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார் என்கிற காரணத்திற்காக, கவர்னர் 1818 ஆம் ஆண்டு அவரை டாக்டர் பதவியில் இருந்து  நீக்கிவிட்டார். பின்  நெப்போலியனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி