கூகுள்கிளாஸ் 2.0 அவதாரம்!



அயர்ன்மேன் படத்தில் டோனி ஸ்டார்க்கின் கண்முன்னே சூப்பர் கம்ப்யூட்டர் உயிர்பெற்று ஓடுவதுபோல செர்ஜி பிரினின் கனவுத் திட்டமான கூகுள் கிளாஸ் ரிலீசானபோது, கிளம்பிய எக்கச்சக்க பில்டப்புகளால் பரபரப்பானது. தற்போது பிராக்டிகலாக தொழிற்சாலையில் கண்ணாடிகளை  கூகுள்  என்டர்பிரைஸ்   எடிஷனில்  வெளியிட்டுள்ளது.

ஜிஇ,  போயிங், டிஹெச்எல், ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தன்னுடைய என்டர் பிரைஸ்  எடிஷன் கண்ணாடிகளை  வழங்கி அதன் தன்மையை சோதித்துப்  பார்க்கவுள்ளது. அடுத்ததாக  மருத்துவத்துறையிலும்  என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்தும் சூப்பர் பிளான் கூகுளின் தாய் நிறுவனமான  ஆல்பபெட்டுக்கு  உள்ளது.

அண்மையில்  நடத்தப்பட்ட   ஃபாரெஸ்டர் ஆய்வில் 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 14.4 மில்லியன் தொழிலாளர்கள் ஸ்மார்ட் கிளாஸ் அணிந்திருப்பார்கள் என்ற முடிவு வெளியாகியுள்ளது. கூகுள் கிளாஸ் 2012 ஆம் ஆண்டு I/O மாநாட்டில் முதல்முறையாக  அறிமுகப் படுத்தப்பட்டது. டைம் இதழ், அதனை அவ்வாண்டின்  மிகமுக்கியமான  பொருளாக  அங்கீகரித்ததைத்  தொடர்ந்து  இங்கிலாந்து மன்னர் சார்லஸ் டூ பாடகி பியான்ஸ் வரை அதனை அணிந்து பார்க்க ஆசைப்பட்டனர்.

ஆனால் பேசும் அனைத்தும் வீடியோவாக பதிவானதால் ஷாக்கான மக்கள் கூகுள் கிளாஸை கழற்றி எறிய, விற்பனை டல்லடித்தது. கண்ணாடி அணிந்து போட்டோ எடுக்கலாம். ஆனால் அது தொழிலாளர்களுக்கு எவ்விதத்தில் உதவும்?  இதற்கான பதிலை கூகுள்  தற்போது  தேடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள்  கிளாஸை  வாங்கி தமக்கேற்ப கஸ்டமைஸ்  செய்து தேவையான சாப்ட்வேர்களை  இணைத்து பணிபுரி வதையும் கூகுள் கவனித்து வந்தது.

புதிய என்டர்பிரைஸ் கண்ணாடியில் திகுதிகு வேகத்தில் வைஃபை, அழைப்புகளுக்கு தனி பேட்டரி, லைட்வெயிட், 8MP கேமரா, வீடியோ எடுக்கும்போது பச்சை நிற விளக்கு எரிவது ஆகிய அம்சங்களை பார்த்தால், முந்தைய ரிலீசைவிட இது டாப்தான். இது. விவசாய  பொருட்களைத்  தயாரிக்கும் ACGO  நிறுவனம், கூகுள் கிளாஸ் தொழில்நுட்பம்  நிச்சயம் தங்களுடைய வேலை நேரத்தை குறைக்கும் என நம்புகிறது. எனவேதான்  ஒரு  கிளாஸுக்கு  1300-1500 டாலர்களை தண்ணீராய் செலவழித்திருக்கிறது.

“நாங்கள் ரோபாட்டு களைப்  பயன்படுத்து வதை விட தொழிலாளர்களின் திறனை  இதுபோன்ற  கண்ணாடி கள்  மூலம்   மேம்படுத்தினாலே போதும் என நம்புகிறோம்” என்கிறார் தொழிற்சாலையின் அதிகாரியான பெக்கி க்யூலிக். 70 நிமிஷங்கள் தேவைப்படும் வேலையை கூகுள் கிளாஸ் அணிந்து 5 நிமிடத்தில் முடிக்கலாம் என்பது பிளஸ்தானே! 
 
“முதலில் நான் என் வேலையில் பிரச்னை ஏற்பட்டால், பேப்பரில் எழுதி வைத்து பின் கம்ப்யூட்டரில் வந்து அதனை டைப் செய்வேன். இன்று பிரச்னை என்றால், அதனை உடனே சரி செய்ய முடிகிறது.  பாத்திரங்களை  துலக்கியபடியே  இமெயில்  செக் செய்கிற அளவு எனக்கு கூகுள்  கிளாஸ்  அட்டகாச வசதி ” என்கிறார் பேக்டரியில் வேலை  செய்யும் கென் வீன். கூகுள் கிளாஸ் பிற போட்டிகளை  ஜெயிப்பதில்தான்  இருக்கிறது அதன் எதிர்காலமே!

ப.ஜோஸபின்