எதிர்கால உணவு செயற்கை இறைச்சியா?செயற்கை இறைச்சி என்றதும் பிளாஸ்டிக் (அ) ரப்பரா, மரபணு  மாற்றியதா என பீதி வேண்டாம்.  விலங்குகளின் செல்களைக் கொண்டு லேபில் தயாரிப்பதுதான் செயற்கை இறைச்சி.

2013 ஆம் ஆண்டு ஊடகங்களின் முன்பு செயற்கையாக லேபில் வளர்த்தெடுக்கப்பட்ட  இறைச்சி  பர்கரில்   வைத்து சமைக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. பிளஸ், எந்த விலங்குகளையும் கொல்ல வேண்டியதில்லை   என்பதுதான்.

மைனஸ், லேபில் தயாரிக்கப்பட்ட இறைச்சிக்கான செலவு 3 லட்சம் டாலர்கள். இதிலும்  ஸ்டார்ட்  அப்புகள், தொழில் முயற்சிகள் இல்லாமலில்லை.2016 ஆம் ஆண்டு மெம்பிஸ் மீட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் 1000 டாலர்கள் செலவில் இறைச்சியைத் தயாரித்து ஆச்சரியப்படுத்தியது.

பன்றி, மீன், பால், முட்டை, தோல் கூட இம்முறையில்   தயாரிக்க முடியும். “தொழில்  முறையில் தயாரிக்கும்போது  இறைச்சியை 10 டாலர்கள் விலையில் கூட ஈஸியாக உருவாக்கலாம்” என்கிறார் 3  லட்ச  ரூபாயில்  இறைச்சி பர்கரை உருவாக்கிய டாக்டர் மார்க் போஸ்ட்.

ஆய்வகத்தில் இறைச்சி!

தசை திசுக்களை லேபில் வைத்து ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தின் மூலமாக வளர்த்து உருவாக்கும் இறைச்சியை வைட்ரோ இறைச்சி, செயற்கை இறைச்சி என அழைக்கலாம். மரபணு மாற்றப்பட்ட ஈஸ்ட் மூலம் கோழியின்றி முட்டை, பால் ஆகியவற்றை உருவாக்க முடியும். பல்வேறு விலங்குகளின் இறைச்சியை செல் அக்ரிகல்ச்சர் மூலம் லேபில் உருவாக்க முடிந்தால், அந்த அரிய விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவதும் குறைய சான்ஸ் உண்டு. அப்படி லேபில் இறைச்சியை உருவாக்க என்ன அவசரம்?

தற்போது பூமியிலுள்ள நீர், நிலத்திற்கான தட்டுப்பாடுதான் காரணம். விலங்குகளை பண்ணையில் வளர்ப்பதற்கும், அதற்கான உணவு, நீர் ஆகியவற்றுக்கும் அதிகளவு நிலம், ஆற்றல் தேவைப்படுகிறது. உணவுப்பொருட்களை விளைவிப்பதைக் காட்டிலும் அதிக ஆற்றலை எடுத்துக்கொள்வதோடு, பசுமை இல்ல வாயுக்களையும் டன் கணக்கில் வெளியிடுகிறது.

மேலும் செயற்கை இறைச்சி தயாரிப்பு விலங்குகளை அழிவிலிருந்து காக்கும் என்பது கூடுதல் பிளஸ்தானே! 2020 ஆம் ஆண்டு செயற்கை இறைச்சி சந்தைக்கு வரும் என மெம்பிஸ் மீட்ஸ், மோசா மீட் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எப்படி தயாரிக்கிறார்கள்?

1900  ஆம் ஆண்டுகளிலிருந்தே  செயற்கை இறைச்சிக்காக ஸ்டெம்செல்களை வைத்து ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. விலங்கின் தோலிலிருந்து ஸ்டெம்செல்களை தேர்ந்தெடுத்து ஊட்டச்சத்து   நிறைந்த திரவத்தில் வளர்த்தெடுத்தால் போதுமானது. செல்கள் மெல்ல பல்கிப் பெருகும்போது  இறைச்சியினுள் தசைநார்கள் உருவாகி  பல்க்காக வளரும். தேவையானபோது அறுத்து வேகவைத்து ஆச்சி மசாலா தூவினால் சுவையான எலும்பில்லாத இறைச்சி ரெடி.

நாளைய உணவு எது?

செயற்கை பால்Muufri என்ற நிறுவனம் ஈஸ்ட்டில் குறிப்பிட்ட செல்களை விதைத்து பசுவின் தேவையின்றி ஆய்வகத்தில் பால் புரதங்களின் மூலம் பாலை உருவாக்கி சாதித்திருக்கிறது.

பூச்சிகள்

புரதம் நிறைந்துள்ள பூச்சிகளை நமக்கு முன்னமே பல நாடுகளிலும் போட்டா போட்டியிட்டு சாப்பிடத்தொடங்கிவிட்டனர் என்றாலும்,  குளோபல் புகழ் பெற நாட்களாகும். நேரடியாக பூச்சிகள் என்பதை விட மாவு போன்ற வடிவில் பிக்கப் ஆக வாய்ப்புண்டு.

பாசிகள்

நீரில் பக்கவாக வளர்ந்து பரவசம் தரும் பாசிகளை இன்று செம பீக்கில் சாப்பிட்டு உலகத்தையே உழைப்பால் ஓவர்டேக் செய்பவர்கள் ஜப்பானியர்கள்தான். எக்கச்சக்க வெரைட்டியில் எளிதில் வளர்க்க முடியும் என்பதால் அடுத்த சாய்ஸ் பாசிகள்தான்.

3டி இட்லி

3டியில் வீடு கட்டு கிறோம், துப்பாக்கி வருகிறது. சோறு வராதா? எனவே  விரைவில்  நமக்கான ரெசிபியை  டிக் அடித்தால் இட்லி வித் கெட்டிச்சட்னியோடு 3டி இட்லி சாப்பிடவும் ஜாதகத்தில் யோகம் உண்டு.

டோடூ கெபாப்

இன்று டோடூ பறவை உலகில் இல்லாததற்கு காரணமே, அதன் சூப்பர் டேஸ்ட்தான். எனவே அதனை ஆய்வகத்தில் தயாரித்து இன்றைய தலைமுறையும் டோடூ கெபாப் ஆர்டர் கொடுக்க வாய்ப்பளிக்கும்படி அறிவியல் வளர்ந்துள்ளது.

தேவை என்ன?

25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  பயோரியாக்டர்  இருந்தால்தான் இறைச்சியை  உருவாக்கி 10 ஆயிரம் நபர்களுக்கேனும் தலைவாழை விருந்து கொடுக்க முடியும். இதில் செல்களை வளர்ப்பதற்கான ரத்த அணுக்கள் கொண்ட திரவம், சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்னையைத்  தரலாம்.

“உலகத்திற்கே உணவு தயாரிக்கும் அளவு விலங்குகளின் ரத்தம், அதில் சர்க்கரை, அமினோ அமிலங்கள் என அனைத்தும் சேர்ந்தாற்போல கிடைப்பது மிகவும் கடினம்” என்கிறார் ஆய்வாளர் மார்க் போஸ்ட். “இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருட்கள் போல ஆய்வக இறைச்சி மாறுபட்டிருக்காது” என தன்னம்பிக்கை தருகிறார் விஞ்ஞானி சாஜெத் ரெகெவ்.

விக்டர் காமெஸி