வாய்க்கும் வயிற்றுக்கும் ஆராய்ச்சி!



பழைய உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் எப்போது தோன்றியது?
- எஸ்.ராம்சந்தர், 9ம் வகுப்பு, கே.வி.எஸ். பள்ளி, விருதுநகர்.

உங்கள் கிண்டல் புரிகிறது. வேடிக்கையாக இருந்தாலும் இப்பழக்கம் ஆதி மனிதன் வேட்டையாடிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது ஃப்ரிட்ஜ், ஃப்ரீசர் வசதிகள் இல்லை என்பதால், வேறு ஏற்பாடுகள்!பழங்காலத்தில் இருந்து நமது காலம் வரை உணவைப் பதப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது.

உணவை உலர வைத்தல், அதிக உப்பைப் பயன்படுத்துதல் என்று உணவைப் பதப்படுத்த பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைப் பார்த்திருக்கிறீர்களா? உணவைப் பதப்படுத்த பயன்படும் நவீன முறை இது.

இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடக்கும் ‘ரெடி டூ ஈட்’ உணவுகள் பலவும் பதப்படுத்தப்பட்டவையே.நம் மக்கள் காலங்காலமாக மிக அதிக அளவில் பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய்தான்! நல்ல முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமலே சாப்பிடலாம்... நா ஊறும்!

விவசாய விஞ்ஞானிகள், கால்நடை விஞ்ஞானிகள் ஆகியோர் என்ன செய்வார்கள்?
- க.நேத்ரா, 8ம் வகுப்பு,
மில்லினியம் பள்ளி, சென்னை-89.

விளைச்சலைப் பெருக்குதலுக்கான ஆய்வுகள், புதிய ரகங்களை உருவாக்குதல் போன்றவை விவசாய விஞ்ஞானிகளின் பணியே. இதைப் போல விலங்கு விஷயங்களை மேம்படுத்துவதும் உருவாக்குவதும் அத்துறை விஞ்ஞானிகளின் வேலை.

இவர்கள் ஆரோக்கியமான தாவரங்களையோ, விலங்குகளையோ ஒன்றுடன் ஒன்று இணைத்து புதிய தாவரத்தையோ, விலங்கினத்தையோ உருவாக்குவார்கள். இவையே கலப்பினம். மெதுவாகக் கனியும் வாழைப்பழங்கள், சில கோழி வகைகள் எல்லாம் இப்படி உருவானவையே. முற்றிலும் புதிய தாவரத்தையோ, விலங்கையோ கூட உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள்.

இன்று புதிய உணவுக் கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளுமே கடைகளை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எனினும், கண்டுபிடிப்பாளர்கள் நிறுத்தியபாடில்லை. மனிதர்களின் உணவு சப்ளையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக்கூடபுதிதாகக் கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளில் 90% இப்படி உருவாக்கப்பட்டவையே!

இதெல்லாம் சரி... விலங்குகள் என்ன ஆகும் என்கிறீர்களா? தாவரங்களிலேயே இவ்வளவு செய்யும்போது விலங்குகளை விட்டு வைப்பார்களா? எலிகளையும் மூஞ்சூறுகளையும் சேர்த்து பெரிய எலிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் சேர்த்து புது வகை ஆட்டை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆடு தன் பெற்றோரான ஆடு, செம்மறி ஆடு ஆகிய இரண்டு ஆடுகள் மாதிரியும் இருக்கிறதாம்.
பெரிய எலி சோதனை எலியாகும். புதிய ஆடு உணவாக மாறும். எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்காகத்தான்!