நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை 28



ஆனந்த மழைபுத்த பிட்சு ஒருவர் சுவாமிஜி யின் சீடரான திருமதி. ஓல்ஃபுல் என்பவரைப் பார்க்க விரும்பினார். அப்போது மடத்தின் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஓல்ஃபுல்லை எங்கே சென்று சந்திப்பது என்று விவரம் அறியாமல் தவித்தார் அந்த புத்த பிட்சு. பிறகு சுவாமி விவேகானந்தரிடமே ஓல்ஃபுல்லின் குடிலுக்குச் செல்லும் வழியை விசாரித்தார். சுவாமிஜி தானே அழைத்துச் செல்வதாகச் சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் இடியும் மழையும் பிடித்துக்கொண்டது. புத்த பிட்சு இந்த திடீர் மழையில் திக்குமுக்காடிப் போய் விட்டார். நடக்கவே தடுமாறினார். சுவாமிஜிக்கு மழையைக் கண்டவுடன் பெரிய சந்தோஷம். ஒரு குழந்தை மாதிரி மழையில் ஆடத்தொடங்கி விட்டார். ஓல்ஃபுல் வீட்டை அடையும் வரை ஆட்டம் பாட்டம்தான்.

ஆனால் புத்த பிட்சு கால்கள் சேற்றில் சிக்கியதால் தட்டுத் தடுமாறியபடி இருந்தார். உடனே சுவாமிஜி, பிட்சுவை சேற்றில் இருந்து விடுவித்து தன்னோடு அணைத்துக்கொண்டே ஓல்ஃபுல் குடிலை அடைந்தார். அது மட்டுமில்லை, குடிலுக்குச் சென்றவுடன் புத்த பிட்சுவின் பாதங்களைக் கழுவி வரவேற்று அவரை அகமகிழச் செய்தார்.

நோய் தீர்த்த மருத்துவர்‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதை தனது செயல்கள் மூலம் பலமுறை நிரூபித்து வந்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். சுவாமிஜி டார்ஜிலிங்கில் இருந்த சமயம்... கல்கத்தாவில் வைசூரி நோய் தாக்கி தலைவிரித்து ஆடியது. உடனடியாக கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார் விவேகானந்தர்.

மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யவும், நிவாரணம் அளிக்கவும் ஒரு தன்னார்வப் படை அமைக்க விரும்பினார்.
மடத்தில் இருந்த பிற ஊழியர்களுக்கு, ‘இவ்வளவு பெரிய பணியை நம்மால் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யமுடி யுமா?’ என்ற சந்தேகம் வந்தது. ‘‘இதை நாம் செய்துதான் ஆக வேண்டுமா? இதற்கு நிறைய பணம் வேண்டுமே!’’ என்று சுவாமிஜியிடம் கேட்டார்கள். இந்தக் கேள்விகளால் சுவாமிஜி வருத்தமடைந்தார்.

‘‘அப்படியென்றால் மக்களை நோயில் தவிக்க விட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்க்கப் போகிறோமா? மடத்தின் சொத்துகளை விற்றாவது மக்களுக்கு உதவி செய்திட வேண்டும். நாம் துறவிகள். எங்கு போனாலும் நமக்குப் பிச்சை போடுவதற்கு மக்கள் இருப்பார்கள். சாதாரண மக்களுக்கு அப்படி இல்லை. எனவே முதலில் மக்களுடைய துன்பத்தைப் போக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

கல்கத்தாவில் மிகப்பெரிய மைதானத்தை வாடகைக்கு எடுத்து, தன்னார்வத் தொண்டுப் பணி தொடங்கியது. பணக்காரர்கள் பலர் நிறைய பணம் கொடுத்து இந்த சேவைப்பணிக்கு உதவினார்கள். பல நாட்கள் சிரமேற்கொண்டு இந்தப் பணியினைச் செய்து முடித்தார் விவேகானந்தர்.

நான் நரேன் ஸ்ரீராமகிருஷ்ண  பரமஹம்சரின் நல்ல அன்பைப் பெற்றிருந்த அசுவினி குமார் தத்தாவை சுவாமிஜி ஒரு முறை அல்மோராவில் சந்தித்தார். அந்த சந்திப்பின் பின்னணி சுவாரசியமானது. தத்தா ஒரு வேலையாக அல்மோரா சென்றபோது, அங்கு குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்த ஒரு சாதுவை தூரத்தில் பார்த்தார். குதிரை மேல் சவாரி செய்கிறார் என்றால் நிச்சயமாக அந்த சாது விவேகானந்தராகத்தான் இருக்க முடியும் என்று பூரணமாக நினைத்தார் தத்தா.

அங்கே இங்கே விசாரித்து, விவேகானந்தரைத் தேடி ஒருவழியாக அல்மோராவில் அவர் தங்கியிருந்த வீட்டை அடைந்தார். வாசலில் இருந்த ஒரு சாதுவிடம், ‘‘என் பெயர் தத்தா. நான் நரேனைப் பார்க்க வந்திருக்கிறேன்’’ என்று சொன்னார்.  சுவாமிஜியை ‘நரேன்’ என்று தத்தா குறிப்பிட்டதால் அந்த சாதுவுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘நரேன் என்று யாருமில்லை. நரேன் இறந்துவிட்டார். சுவாமி விவேகானந்தர்தான் வீட்டில் இருக்கிறார்’’ என்று சொன்னார்.

அசுவினி குமார் தத்தாவோ, ‘‘எனக்கு விவேகானந்தர் தேவையில்லை, நரேன்தான் வேண்டும்’’ என்று கூறினார். உள்ளே இருந்த விவேகானந்தர் காதுகளில் இந்த உரையாடல் விழ, அவர் அசுவினி குமார் தத்தாவை உடனே உள்ளே அழைத்து வணங்கி, ‘‘என்னை நீங்கள் நரேன் என்றே அழைக்கலாம்’’ என்றார்.

(தொடரும்)

ரேணுகா சூரியகுமார்