நகரங்களின் கதை!



உலகெங்கும் இருக்கும் நகரங்களின் பரப்பு குறுகியதாக இருந்தாலும், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள் என இதற்குப் பல காரணங்கள். தினம் தினம் கிராமங்களிலிருந்து மக்கள் குடிபெயர்ந்து நகரங்களை நாடி வரும் போக்கு அதிகமாகிவிட்டது.

‘வரும் 2050ம் ஆண்டுக்குள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 86 சதவீத மக்களும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 64 சதவீத மக்களும் நகரங்களில்தான் வசிப்பார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலகின் சில முக்கிய நகரங்களின் வரலாற்றைப் பார்க்கலாமா?

* ஜப்பான் தலைநகரம் டோக்கியோ, முன்னாளில் ‘இடோ’ என்ற பெயரில் ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது. 1868ல் இது ஜப்பானின் தலைநகரானபோது இதன் பெயர் டோக்கியோ என மாற்றப்பட்டது. டோக்கியோ என்றால் கிழக்கின் தலைநகரம் என்று பொருள். Fortune Global இதழில் பட்டியலிடப்பட்ட உலகின் 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் இங்குள்ளன. இதில் உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் அடக்கம்.

* மெக்ஸிகோ நாட்டின் தலைநகர் மெக்ஸிகோ சிட்டி. கி.பி. 100ம் ஆண்டிலிருந்து 900ம் ஆண்டு வரை இங்கு உள்நாட்டு மக்கள் குழுக்கள் வசித்தனர். அஸ்டெக் என அறியப்பட்ட மெக்ஸிகாஸ்கள் தங்கள் கடவுள் குறிப்பிட்ட அடையாளத்தைக் காட்டி அந்த இடத்தில் ஒரு பெரிய நகரத்தை உருவாக்கும்படி கூறியதாக நம்புகின்றனர்.

அதன்படி டெக்ஸ்கோகோ என்ற ஏரியில் உள்ள ஒரு தீவில் ஒரு கழுகு ஒரு கள்ளிச் செடியின் மீது உட்கார்ந்து பாம்பு ஒன்றைத் தின்றது. மெக்ஸிகோ நகரம் உருவாக்கப்பட்டது அங்குதான். பிறகு அந்தத் தீவு செயற்கையாக விரிவாக்கப்பட்டது.

* இன்று மும்பை என்று அறியப்படும் பம்பாய் முதலில் ஒரு மீன் பிடி கிராமமாகவே இருந்தது. மும்பை ஏழு தீவுகள் இணைந்த பகுதியாக இருந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஒருவர் ஆண்டு வந்தார். 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆளுகையில் இருந்த மும்பை, பிறகு பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 19ம் நூற்றாண்டில் மும்பை பெரிய துறைமுகமாகியது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்கு பெற்ற மும்பை நகரம் 1960ல் மகாராஷ்டிர மாநிலம் உருவானபோது அதன் தலைநகரமாயிற்று. இந்தியாவின் வர்த்தக நிதி மற்றும் பொழுதுபோக்குத் தலைநகரம் என்பது இதில் முக்கிய அம்சம். இங்கு டப்பாவாலாக்களால் விநியோகிக்கப்படும் மதிய உணவு முறை உலகப் புகழ் பெற்றது.

* சாவ் பாலோ, பிரேசில் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இது 1554ல் போர்ச்சுகீசிய கிறிஸ்துவ பாதிரியார்களால் நிறுவப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நில ஆராய்ச்சிக்கு ஒரு தங்குமிடமாக இருந்த இது, 1711ல் நகரமாக உருவெடுத்தது. 1822ல் பேரரசர் முதலாம் பேட்ரா என்பவரால் இந்நகரில் பிரேசிலின் விடுதலை பிரகடனப்படுத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் இதுவும் ஒன்று.

*  1614ம் ஆண்டு நியூயார்க் டச்சுக்காரர்களால் ஒரு வணிகப் பணியிடமாக  நிறுவப்பட்டது. 1664ல் இது ஆங்கிலேயர் வசம் வந்தது. 1785லிருந்து 1790 வரை அமெரிக்காவின் தலைநகராக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இது அமெரிக்காவின் பெரிய நகரமாகத் திகழ்கிறது. உலகளாவிய கலை, நாகரிகம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தலைநகரமாக நியூயார்க் திகழ்கிறது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம், டைம்ஸ் சதுக்கம், சுதந்திர தேவி சிலை ஆகியவை நியூயார்க்கின் சிறப்பான இடங்களாகும்.

* அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆகும். ‘எல் பியூப்லோ டி லா ரெய்னா டி லாஸ் ஏஞ்சல்ஸ் சொபிரி எல் ரியோ போர்ச்சியுன்டுலா’ என்ற பெயரில் ஸ்பானியரால் இந்நகரம் உருவாக்கப்பட்டது. இப்பெயருக்கு ‘தேவதையின் ராணிகளுடைய நகரம்’ என்று அர்த்தம்.

இந்நகரம் 1781ம் ஆண்டு செப்டம்பர் 4ம் நாள் ஸ்பெயின் கவர்னர் ஃபிலிப் டி நெவி என்பவரால் உருவாக்கப்பட்டது. 1821ல் மெக்ஸிகோ சுதந்திரப் போரின்போது இந்நகரம் மெக்ஸிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஒரு பகுதியானதும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு நகரமாக 1850ல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இங்கு 100 அருங்காட்சியகங்கள் உள்ளன.

* 17ம் நூற்றாண்டில் வங்காள நவாப் மூன்று கிராமங்களை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்தார். இதுவே கொல்கத்தாவாக வளர்ந்தது. ஹுக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொல்கத்தா, இந்திய விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. 1911ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக  இருந்த கொல்கத்தா குறித்து டொமினிக் லாப்பியர் எழுதிய புத்தகத்தின் தலைப்பான ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற பெயரில் கொல்கத்தா அழைக்கப்படுகிறது. அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் இங்கு உள்ளது.

* ஒரு காலத்தில் சிறு மீனவ கிராமமாக இருந்த ஷாங்காய், இப்போது சீனாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். ஷாங்காய் என்பதற்கு ‘கடல் மீது’ என்று பொருள். ஷாங்காய் துறைமுகம் உலகிலேயே அதிக கப்பல் போக்குவரத்து கொண்ட துறைமுகம் ஆகும். கிழக்கு சீனக் கடற்கரையில் அமைந்துள்ள ஷாங்காய், சீனக் கடற்கரைகளின் மையமாகத் திகழ்கிறது. ஷாங்காயிலிருந்து சீனாவின் பல பகுதிகளுக்கு சுலபமாகச் செல்ல முடியும். இது கடல் மற்றும் ஆற்றுத் துறைமுகமாகவும் திகழ்கிறது. இது ‘கிழக்கின் பாரிஸ்’ என அழைக்கப்படுகிறது.

* வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா. இது ஒளிமயமான வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் கொண்ட நகரமாகும். இதன் மசூதிகளும், மஸ்லின் என்ற மெல்லிய துணி வகைகளும் உலகப் புகழ் ெபற்றவை. இது உலகில் அதிக அரிசி மற்றும் சணல் உற்பத்தியாகும் பிரதேசம் ஆகும்.

வங்காளத்தின் மொகலாயத் தலைநகராக இது 75 ஆண்டுகள் திகழ்ந்தது. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பிரிவினைக்குப் பிறகு இது கிழக்கு பாகிஸ்தானின் தலைநகராகத் திகழ்ந்தது. வங்க தேசம் உருவானதும்,  87 லட்சம் மக்கள் வாழும் பெரும் நகரமாக டாக்கா உயர்ந்தது.

* டெல்லி நகரம் பழைய, புதிய என இரண்டு முகங்களைக் கொண்டது. பல பேரரசர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்ட நகரம். அந்நியப் படையெடுப்புகளுக்குப் பிறகு முஸ்லிம் மன்னர்கள் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றனர். பிறகு மொகலாயர்களின் தலைநகராக செழித்து வளர்ந்தது.

மொகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 1803ம் ஆண்டில் டெல்லி நகரம் பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் வந்தது. 1911ல் பிரிட்டிஷார் தங்கள் தலைநகரத்தை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றினர். அதன்பின் இயல்பாகவே இது சுதந்திர இந்தியாவின் தலைநகரானது. குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, நாடாளுமன்றம், இந்தியா கேட் போன்றவை டெல்லியில் சில முக்கிய இடங்களாகும்.

* புவர்னஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவின் தலைநகரம் ஆகும்.  1536ல் ஸ்பானியர்களால் நிறுவப்பட்ட இது, ஒரு முக்கிய துறைமுகமாக வளர்ந்தது. 1880ல் அர்ஜென்டினாவின் தலைநகராகவும் பொருளாதார சக்தியாகவும் மாறியது. தென் அமெரிக்காவில் அதிக மக்கள் காண வருகின்ற நகரம் இது. ஐரோப்பிய பாணி கட்டிடக் கலைக்காகவும், ரம்மியமான சூழலுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். கடந்த 150 ஆண்டு
களில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு குடியேறியுள்ளனர்.

(தொடர்ச்சி - அடுத்த இதழில்...)

- க.ரவீந்திரன், ஈரோடு.