பெயர் வைக்க தடை!



‘மதுவுக்குத் தடை’, ‘மைதாவுக்குத் தடை’ என்பதெல்லாம் இப்போது நீங்கள் அறிந்தவைதானே! ஆனால் சில பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கவே கூடாது என சில நாடுகளில் அரசு கூறியதோடு அதற்கான நதிமூல காரணங்களையும் கூறியிருக்கிறார்கள். பெயர் வைக்கவே போராட்டா?  ஆம். இதோ உங்கள் கவனத்துக்கு சில தடை செய்யப்பட்டுள்ள பெயர்கள்...

1. சூ டூ (Chow Tow)
மலேசிய அரசு இந்த பெயரை குழந்தைகளுக்குச் சூட்ட தடை விதித்துள்ளது. காரணம், இதன் அர்த்தம் ‘நாற்றமடிக்கும் தலை’ என்பதாகும்.

2. ஆனஸ் (Anus)
டென்மார்க்கில் 7,000 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஏதாவது பெயரை மக்கள் வைக்கலாம். இதில் இல்லாத பெயரைச் சூட்ட, அரசுக்கு பெயருடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அது அரசால் ஏற்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை. ‘ஆனஸ்’ என பெயர் வைக்க ஒருவர் விண்ணப்பித்தபோது நிராகரித்துவிட்டார்கள்.

3. பிர்கோக்கோக்ஸ்பி 11116 (Brfxxccxxb 11116)

சில பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட அரசு தடை விதிப்பதை எதிர்த்து, 1990ல் ஒரு ஸ்வீடன் ஜோடி தங்கள் குழந்தைக்கு வைத்த நூதனப் பெயர் இது. இதை அந்தக் குழந்தையோ, பெற்றோரோகூட உச்சரிப்பது எவ்வளவு கஷ்டம்!

4. @

ஒரு சீன ஜோடி, தங்கள் குழந்தைக்கு வாங்@ (Wang@) எனப் பெயர் சூட்டினர். இதில் @ என்பதனை சீனாவில் ஐடா (Ai-ta) என உச்சரிப்பர். இதன் பொருள் ‘அவனை நேசியுங்கள்’ (love him) என்பதாகும். இதனால் இப்படி பெயர் வைக்கலாகாது என தடை விதித்துவிட்டது அரசு.

5. ஃபேஸ்புக் (Facebook)

மெக்ஸிகோ நாட்டின் சொனோரா மாநிலம், ஒரு குழந்தைகள் பெயர் லிஸ்ட்டை வெளியிட்டு ‘இவற்றை வைக்க அனுமதியில்லை’ என குறிப்பிட்டுள்ளது. இந்தப் பெயர்கள் அர்த்தமற்றவை, மற்றவர்களைப் புண்படுத்துபவை, தரக்குறைவானவை, பிரிவினை ஏற்படுத்துபவை என்கிறது அரசு. இதில் ஃபேஸ்புக்கும் ஒன்று.

6. லூசிஃபர் (Lucifer)

நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விவகாரத் துறை, இதுபோல இணையத்தில் உள்ள பெயர்களைப் பார்த்து, இஷ்டத்துக்குப் பெயர் வைப்பதற்குத் தடை விதித்துள்ளது. சிலர் புரோட்டீன், பாக்டீரியாக்கள், கிருமிகள் பெயர்களையெல்லாம் கூட தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி பதற வைக்கிறார்களாம்.

7. மீனும் சிப்ஸூம் (Fish and Chips)

இப்பெயரையும் நியூஸிலாந்து தடை செய்துள்ளது. ஒரு நியூஸிலாந்து ஜோடி, தங்களுடைய இரட்டைக் குழந்தைக்கு சூட்டிய பெயர்தான் மீனும் சிப்ஸும். இப்படியெல்லாம் பெயரா? என நமக்கே டவுட் வரும்போது அரசு என்ன சும்மாவா? பாய்ந்து ரிஜக்ட் பட்டனை அழுத்தி விட்டார்கள்.

8. டலுலா டஸ் தி ஹுலா ஃப்ரம் ஹவாய் (Talula Does the Hula From Hawaii)இதுவும் இஷ்டத்துக்கு வைத்த பெயர் என மறுக்கப்பட்டது.

9. சீனியர் கான்ஸ்டபிள்நியூஸிலாந்தில் குற்றத்திற்கு தூண்டுவது போலவோ அல்லது ஒரு பட்டம் அல்லது ஒரு பதவியைக் குறிப்பது போலவோ பெயர் வைக்கப்பட்டிருந்தால் அவை சட்டபூர்வமாக மறுக்கப்படுகின்றன. ‘சீனியர் கான்ஸ்டபிள்’ என்ற பெயரைத் தடை செய்த காரணம் இப்போது புரிந்திருக்குமே!

- ராஜிராதா, பெங்களூரு.