நாய்களுக்கும் ஐஸ் வாட்டர் கொடுங்க!



செல்லமே செல்லம்

வெயில் காலம் என்பது வெறுக்கக்கூடிய காலமில்லை. வெயில் என்பது ரொம்பவே அத்தியாவசியமானது. சரியான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி, நாம் இந்தக் காலகட்டத்தை எளிதாகக் கடக்க முடியும். ஆனால், விலங்குகளும் பறவைகளும் என்ன செய்யும்? நம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை இந்த கடும் வெயிலிலிருந்து பாதுகாப்பது எப்படி?  விளக்கம் அளிக்கிறார் கால்நடை மருத்துவர் வி.அருண்.

‘‘ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் கூடிக்கொண்டே இருக்கிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் பறவைகளையும் கூட பாதிக்கிறது. மனிதர்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் உள்ளதால்  நம் உடலின் வெப்பநிலையை சமன் செய்து விடும். நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடல் வெப்பத்தை நாக்கு மற்றும் மூக்கு வழியாகத்தான் வெளியேற்ற முடியும்.  அதனால்தான் நாய்கள் நாக்கை வெளியே தொங்கப் போட்டிருக்கும்.

வெயில் காலத்தில் விலங்குகளுக்கு சன் ஸ்ட்ரோக், நீர்ச்சத்துக் குறைபாடு, உண்ணிகள் மற்றும் ஈக்களால் ஏற்படும் தொற்று போன்றவை ஏற்படலாம். எனவே அதிக கவனம் தேவை.

*சன் ஸ்ட்ரோக்

வெயிலின் காரணமாக, நாய்களின் உடல் வெப்பநிலை,  104 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். அதனால்  அதிகமாக மூச்சு வாங்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டிய நாக்கும் ஈறுகளும் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். நாக்கு வறண்டு காணப்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டால் ஃபிட்ஸ் வரலாம். வாந்தி பிரச்னை ஏற்படும். உடல்நிலை கெட்டு கோமா ஸ்டேஜ் ஏற்படலாம். சில நேரங்களில் ரத்த வாந்தி வரலாம். அபாயகட்டத்தை அடைந்துவிட்டால் மரணம் கூட நேரலாம். மூக்கு சின்னதாக முகம் அமுங்கினாற் போல் இருக்கும் நாய் வகைகளுக்கு (பக்) இன்னும் சிரமம்.

காற்றில் ஈரப்பதம் குறைந்திருக்கும் இந்த வெயில் காலத்தில் நாய், பூனை போன்றவற்றை வாக்கிங் கூட்டிச்செல்லும் நேரத்தை குறைத்துக் கொள்ளலாம். வெயில் வருவதற்கு முன்னும் வெயில் தாழ்ந்த பின்னும் வாக்கிங் கூட்டிச்செல்வது  நல்லது.

 வெயில் குறைந்து போனாலும், சூடு குறையும் வரை பீச் மணலில் வாக்கிங் அழைத்துச் செல்லக் கூடாது. மாலை நேரம் மொட்டை மாடியில் வெயில் இல்லாவிட்டாலும் அதன் ரேடியேஷன் இருக்கும். அனல் காற்று இருக்கும். அங்கேயும், மாடிப்படிக்கு அடியில், கார் ஷெட், பால்கனி போன்ற இடங்களில் கட்டிப்போட வேண்டாம். அனல் தாக்குதலால் அவை சோர்வடைந்துவிடும்.

* நாய் உண்ணிகள் மற்றும் ஈக்கள்

வெயில்காலம் நாய் உண்ணிகள் இனப்பெருக்கம் செய்யும் சீசன் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவை ரத்தத்தின் மூலம் பரவும் நோய்களை உண்டாக்கும். வருமுன்னே தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வந்து விட்டாலே விரைந்து பரவும். உண்ணி இருப்பது தெரிந்தால் அதை அதன் உடலிலேயே நசுக்கக்கூடாது. கையுறை அணிந்து அவற்றை நீக்கலாம். ட்வீஸர்ஸ் கொண்டும் எடுக்கலாம். எடுத்து மொத்தமாக ஓரிடத்தில் குவித்து எரித்துவிடுவதே நல்லது.

ஸ்பிரே, ஸ்பாட் ஆன் ஆகியவற்றை பயன்படுத்தி உண்ணிகள் பரவாமல் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். உண்ணிகளால் நாய்களுக்கு ராஷஸ் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ராஷஸ் ஏற்பட்டால் காய்ச்சல் வரும்.வெயில் காலத்தில் பிராணிகளைச் சுற்றி ஈக்கள் அதிகமாகப் பறக்கும்.

அவை நிறைய முடிகள் உள்ள நாய்களுக்கு வாலின் கீழே மற்றும் கழுத்துக்குக் கீழே முட்டை வைக்கும். அந்த இடத்தில் பிறகு புழுப் பிடித்து புண்கள் ஏற்படும். நோய்த்தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. ஹேரி பிரீடு நாய்களுக்கு (ஜெர்மன் ஷெப்பர்டு) இந்த வெயில் காலத்தில் முடியை டிரிம் செய்ய வேண்டும்.

*நீர்ச்சத்துக் குறைபாடு

வெயிலில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் தண்ணீரின் தேவை அதிகமிருக்கும். அவை வாயை திறந்து தண்ணீர் வேண்டும் என கேட்காது.  நாம்தான்  தேவை அறிந்து குளிர்ச்சியான, சுத்தமான தண்ணீரை நிறைய கொடுக்க வேண்டும். ஐஸ் வாட்டர் கொடுக்கலாம். சின்ன இன நாய்கள் (Small Breed) அவ்வளவாக தண்ணீர் குடிக்காமல் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதைத் தடுக்க, தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொடுத்தால் அவை நிறைய தண்ணீர் குடிக்கும். நாய்களை அதிக நேரம் சங்கிலியில் கட்டி வைத்திருந்தால் அதற்கு தண்ணீர் தேவையென்றால் குடிக்க முடியாது.  அவிழ்த்துவிட்டால் அது தன் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்கும்.

நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் பிராணிகள் சோர்ந்து போகும். உணவு எடுத்துக்கொள்வது குறையும். குளிர்ச்சியான உணவுகள் மற்றும் திரவ உணவுகள் கொடுக்கலாம்.  வெயில் காலத்தில் உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரமாகும். எனவே அசைவ உணவுகளை குறைத்துக் கொடுப்பது நல்லது. உடலமைப்பு காரணமாக ஆண் பூனைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும். அவற்றை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

*பயணம்

காராகவே இருந்தாலும் வெயிலில் அழைத்துச் செல்ல வேண்டாம். வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காரினுள் விட்டுவிட்டு போகாதீர்கள். சிறிது நேரம்தான் என்றாலும் காரின் உள்ளே தெர்மல் ரேடியேஷன் இருக்கும். அதை ‘கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்' என்பார்கள். இதனால் அவற்றின் உடல்நிலை மிகவும் பாதிப்படையும்.
நீண்ட தூரப் பயணம் செல்வதற்கு முன்பு நம் செல்லப் பிராணிகளை கால்நடை மருத்துவரிடம் காட்டி பயணத்தில் அவற்றுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தருவதற்காக மருந்துகள் வாங்கி செல்லலாம்.

 ஏசி காரில் அழைத்துச் செல்வதே நல்லது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை நிறுத்தி ஓய்வு கொடுக்க வேண்டும். வெளியூருக்குச் செல்வதால் தங்கள் வீட்டுப் பிராணிகளை கெனால் அல்லது போர்டிங் பாயின்டில் விட்டுச்செல்லும்போது அந்த இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உண்ணிகளுக்கான சிகிச்சையும் தடுப்பூசிகளும் போட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

 வெயிலினால் பிராணிகளுக்கு கிட்னி, கல்லீரல் மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம். அதனால் மாதமிருமுறை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்ய வேண்டும். பொதுவாக ஆடு, மாடுகளை  நிழலில் கட்டி வைப்பதுதான் நல்லது.

வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் எப்போதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். வெயில் அதிகமாகி, தண்ணீர் கிடைக்காவிட்டால் பறவைகள் இறந்து போகும். தெரு நாய்களுக்கு வெயிலின் காரணமாக இதய பாதிப்பு மற்றும் சரும நோய்கள் அதிகம் வரும். தண்ணீர் ஒன்றுதான் இதற்குத் தீர்வு.'' நாய், பூனை போன்றவிலங்குகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடல் வெப்பத்தை நாக்கு மற்றும்  மூக்கு வழியாகத்தான்வெளியேற்ற முடியும்.

- தேவி மோகன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்