மருத்துவக் காப்பீட்டில் மகா மோசடி?



சாதனை தமிழர்

மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் நடைபெறும் மெகா ஊழல்களை அம்பலப்படுத்தி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது அமெரிக்க பத்திரிகையான ‘The wall street journal’. இந்த மோசடியில் மருத்துவர்களே ஈடுபட்டிருப்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சி.எல்லாவற்றிலும் ஒழுங்காக நடந்துகொள்வதுபோல காட்டிக் கொள்கிற அமெரிக்காவிலேயே இத்தகைய கொள்ளை என்றால், இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் செயல்பட்டு வரும் இந்தியா போன்ற நாடுகளின் நிலை என்ன என்ற கேள்வி இதனால் எழுந்திருக்கிறது. இந்த ஆபரேஷனில் பங்கேற்ற ‘The wall street journal’ குழுவில் ஒருவரான பழனி குமணனிடம் குங்குமம் டாக்டருக்காக பேசினோம்...

உங்களைப் பற்றி...‘‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் மென்பொருள் தொழில்நுட்பவல்லுநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நிருபர்கள், ஆசிரியர் குழுவுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செய்தி சார்ந்த இணைய மென்பொருள் மற்றும் கிராபிக்ஸ் போன்றவற்றைத் தயாரிக்கிறேன். நான் ஒரு பொறியாளராக இருந்தாலும் பத்திரிகை உலகமும் எனக்கு நன்றாகப் பழக்கமானதுதான்.

எங்கள் குடும்பம் பத்திரிகைத்துறை, பதிப்புலகத்தில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. எனது தந்தை பழ.நெடுமாறன், தாத்தா பழனியப்பன், சித்தப்பா ஆறுமுகவேலு ஆகியோரிடமிருந்து பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் நிருபர்களுடனும் ஆசிரியர் குழுவுடனும் சுலபமாகப்பணியாற்ற முடிகிறது.’’நியூயார்க்கில் எப்போதிருந்து வசிக்கிறீர்கள்?

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். படித்தது TVS லக்ஷ்மி பள்ளி, அமெரிக்கன் கல்லூரி. பின்னர், கோவை PSG தொழில்நுட்பக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றேன். அதன்பிறகே நியூயார்க்வந்தேன். கல்லூரியில் நான் படித்த மென்பொருள்அடிப்படைக்கல்வி எனக்கு இப்போது உதவுகிறது. அதற்காக எனது ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எல்லாப்பெருமையும் எனக்குகற்றுக் கொடுத்த பெற்றோருக்கும்ஆசிரியர்களுக்குமே சேரும்!’’

காப்பீட்டுத் திட்டத்தில் என்ன ஊழலை வெளிப்படுத்தினீர்கள்?‘‘மெடிகேர்(Medicare) என்பதுஅமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் முதியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இந்தத் திட்டத்தின் செலவுக் கணக்கை எங்கள் பத்திரிகை கேட்டது. ஆனால், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இந்தத் தகவல்கள் வெளியாவதைத் தடுக்க முயன்றனர்.அரசாங்கமும் தனக்கு சிக்கல் இருப்பதை உணர்ந்து தயக்கம் காட்டியது. அதனால், எங்களது நிர்வாகம் நீதிமன்றத்துக்குசென்றது. நான் இப்பத்திரிகையில்சேர்வதற்கு முன்னரே தொடங்கிய போராட்டம் இது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால் அரசு விபரங்களை வெளியிட முன் வந்தது.’’

எப்படி?

‘‘காப்பீட்டுத் திட்ட செலவு விவரங்களை மூலத்தரவுகளாக அரசு வெளியிட்டது. அனைத்து ஊடகங்களுக்கும் இந்தத்தகவல்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அரசாங்கம் கொடுத்த மூலத் தரவுகளை சாமான்யரால் புரிந்துகொள்ள முடியவில்லை. சுமார் 8.8 லட்சம் மருத்துவர்கள், மருத்துவமனைக்கு அரசு கொடுத்திருக்கும் பணம்பற்றிய மூலத் தரவுகளை எளிமைப்படுத்தி, அனைத்துப் பொதுமக்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டோம். இதன் மூலம், தான் சிகிச்சை பெற்ற மருத்துவரின் பெயரை குறிப்பிட்டால், அந்த மருத்துவர் சிகிச்சைக்காக அரசாங்கத்திடம் எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். இதற்காகவே http://projects.wsj.com/medicarebilling என்ற இணையதளத்தை வடிவமைத்தேன்.’’

இது மருத்துவர்களுக்கு எதிரானமுயற்சியா?
‘‘தாங்கள் செலுத்துகிற வரிப்பணத்தால் செயல்படும் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அதற்காகத்தான்இந்தத் தளம் உருவாக்கப்பட்டது. மருத்துவர்களையோ, மருத்துவமனைகளையோ குற்றம்சாட்டுவது எங்கள் நோக்கம் இல்லை. இதில் நான் மிக கவனமுடன் செயல்பட்டேன். இதற்கு எனது பத்திரிகை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. எங்களோடு, வேறு சில பத்திரிகைகளும் இந்தப் பயன்பாட்டை உபயோகித்து பல ஊழல், மோசடிகளை வெளிக்கொண்டு வந்தனர்.’’

இதற்காக புலிட்சர் விருது கிடைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோமே...‘‘பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப் படும் உயர்ந்த விருதுதான் புலிட்சர். புலனாய்வு பத்திரிகைப் பிரிவில் இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது பல வருட போராட்டங்களுக்கு பிறகு எங்கள் பத்திரிகைக்குக் கிடைத்த வெற்றி. முதல் தொழில்நுட்ப வல்லுனராகவும் தமிழராகவும் இவ்விருதைப் பெறுவது இன்னும் பெருமையாக இருக்கிறது. பத்திரிகைத் துறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதின் முக்கியத்துவத்தை இந்த விருது உணர்த்தியிருக்கிறது...’’
இதன் மூலம் எதிர்காலத்தில்என்னென்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?

‘‘காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல், மோசடிகள் குறையும். மருத்துவச்செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விவரங்களை வெளியிட வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு வரும். மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும். மற்ற அரசு துறைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.’’இந்தியாவும் இதன்மூலம் விழித்துக் கொண்டால் சரி!

தாங்கள் செலுத்துகிறவரிப் பணத்தால் செயல்படும் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு...

- ஞானதேசிகன்