இதயத்துக்கு இதமானவர்கள்!



ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மருத்துவர்கள். என்றாலும் சிகிச்சைக்கு உறுதுணையாக இருப்பதோடு, அனைத்து சூழ்நிலைகளிலும் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்பவர்கள் செவிலியர்களே.

 மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு தவிர்க்க இயலாதது என்பதன் காரணமாகத்தான் மருத்து வர்களை மூளை என்றும் செவிலியர்களை இதயம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

அப்படி இரவு பகல் பாராது பணிபுரியும் செவிலியர்களை  கவுரவிக்கும் நோக்கோடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை `ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது' வழங்கி சிறப்பிக்கிறது.

நவீன செவிலியக் கோட்பாடுகளை உருவாக்கிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12ம் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாளின் முதலாமாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை இசபெல் மருத்துவமனையில் நடைபெற்றது. சிறந்த நிர்வாகி, சிறந்த பேராசிரியர், சிறந்த சமூக நல செவிலியர், சிறந்த மருத்துவமனை செவிலியர் என 4 பிரிவுகளில் 4 செவிலியர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

ரயில் விபத்தில்  பாதிக்கப்பட்டவர்கள், ரயில் பயணிகளில் அவசர மருத்துவ உதவி  தேவைப்படுபவர்களுக்கு நேரம் காலமின்றி விரைந்து சென்று செவிலியப்பணி  மேற்கொண்டு வருவதால் ஸ்டான்லி ஜோன்ஸுக்கு சிறந்த மருத்துவமனை செவிலியர்  விருது வழங்கப்பட்டிருக்கிறது!சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர்  ராணிப்பேட்டை ஸ்கடர் நினைவு மருத்துவமனையில், 1987ல், டிப்ளமோ நர்சிங்முடித்தார்.

அங்கேயே 2 ஆண்டுகள் செவிலியராக பணிபுரிந்து விட்டு, பிர்லா மருத்துவமனையில் 3 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றியிருக்கிறார்.  1992லிருந்து இப்போது வரையிலும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் தீவிர     சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ‘‘ரயில்வே  மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் எந்நேரமும் தயார்நிலையிலேயே இருக்க  வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால்  விழிப்புடனே இருக்க வேண்டும்’’ என்கிற ஸ்டான்லி ஜோன்ஸ், ரயில்வே விபத்து மீட்புக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

‘‘சில  ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து,  அரக்கோணத்தில் ஏற்பட்ட மின்சார ரயில் விபத்து ஆகியவற்றுக்கெல்லாம் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தோம். தீவிர சிகிச்சை  பிரிவில் பணிபுரிவதால் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் நோயாளிகளின் 
உயிருக்கே உலையாகி விடும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடனே செயல்படுவேன்.

தீவிர சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகள் இருக்கின்றன. அவசர மருத்துவத்  தேவைக்காக வருகிற நோயாளிகளுக்கு முதலுதவி செய்து அவர்களை சிகிச்சைக்கு  தயார்படுத்துவதே எனது முக்கியப் பணி’’ என்கிற ஸ்டான்லி ஜோன்ஸுக்கு 1993  மற்றும் 2000ம் ஆண்டுக்கான தென்னக ரயில்வேயின் சிறந்த செவிலியர் விருது  வழங்கப்பட்டிருக்கிறது!

கேப்ஸ்யூல்

பயணம் பாதுகாப்பானதா?எனக்கு போன மாதம் ஹார்ட் அட்டாக் வந்து சரியாகி இப்போது ஓய்வில் இருக்கிறேன். வியாபாரம் சம்பந்தமாக துபாய் செல்ல வேண்டியிருக்கிறது? நான் விமானப் பயணம் செய்யலாமா டாக்டர்?இதயநோய் மருத்துவர் ஹரீஷ்சோமசுந்தரம்...``ஹார்ட் அட்டாக் வந்து அதில் இருந்து மீண்டு உள்ளீர்கள். ஒரு மாதம் கழித்த நிலையில் கண்டிப்பாக விமானப் பயணம் செய்யலாம்.

பயணம் கிளம்பும் 2 நாட்களுக்கு முன்பு உங்களின் இதயநோய் மருத்துவரை சந்தித்து எக்கோகார்டியோகிராம், இசிஜி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, உடல் நல்ல நிலையில் உள்ளது என்றவுடன் கிளம்பலாம். விமானப் பயணத்தின் போது இருக்கையில் வெகுநேரம் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். கால்களை அசைக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

வெகுநேரம் அமர்ந்து இருக்கும் போது  இதய நோயாளிகளுக்கு கால்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புண்டு.  அதனால் நடப்பது முக்கியம். மருத்துவரின் அறிவுரைப்படி வீனஸ் ஸ்டாக்கிங்ஸ் காலுறைகளை கால்களுக்கு அணிந்து கொண்டால் ரத்தக்கட்டிகள் உருவாகாது. பயணச்சீட்டு எடுக்கும் போதே Low salt diet என வேண்டுகோள் கொடுத்துவிட்டால் உப்பு குறைவான உணவுகளை மட்டுமே கொடுப்பார்கள். மேலும் பழங்கள், அவித்த காய்கறிகள் சாப்பிடலாம். மது மற்றும் மாமிச உணவுகளை விமானப் பயணத்தின் போது அறவே தவிர்த்துவிட வேண்டும்...’’

- சேரக்கதிர்

தமிழ்ச்செல்வி

கிராமப்புற  மக்களைத் தேடிச்சென்று சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருத்துவ சேவை புரிவதற்காக சிறந்த சமூகநல செவிலியர் விருதைப் பெற்றிருக்கிறார் தமிழ்ச்செல்வி! கோவை பீளமேட்டைச் சேர்ந்த இவர், 1988ல், கோ.குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்து  விட்டு, அங்கேயே செவிலியராக பணிபுரிய ஆரம்பித்தார். 1994ல், காந்தி கிராமம்  மருத்துவப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, பொது சுகாதாரச்  செவிலியம் கற்றுத்தரக்கூடிய பயிற்சியாளராகவும் செயல்பட்டிருக்கிறார்.

அது  என்ன பொது சுகாதாரச் செவிலியம்? ‘‘இரண்டு வகையான செவிலியப் பணி இருக்கிறது.  ஒன்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியப் பணி மேற்கொள்வது. இரண்டாவது வகையான பொது சுகாதாரச் செவிலியம் என்பது மக்களைத் தேடிச்சென்று  அவர்களுக்கு மருத்துவ சேவை புரிவது. சுகாதார நடவடிக்கைகள் குறித்து  விழிப்புணர்வும் பயிற்சியும் அளித்து, தடுப்பூசிகள் மூலம் நோய்கள் வருமுன்  காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பொதுச் சுகாதார செவிலியத்தின் அடிப்படை. 

கிராம மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களின் நல வாழ்வுக்காக பணியாற்றுவது  பெருமை கொள்ளத் தக்கது. கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் சேவை  அமைப்பான `சித்பவானந்தா கிராமப்புற சுகாதார மையத்'தின் சார்பில் பல கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். அன்றாட  வாழ்க்கையில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் சுகாதார நடவடிக்கைகள் எவ்வாறு  இருக்க வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறோம். புகைப்பிடித்தலால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரம் மேற்கொண்டு  வருகிறோம்.

செவிலியர் என்பது பணியல்ல... சேவை என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும் நிலையில்தான் நோயாளிகளை ஆதரவோடு அரவணைத்து சிகிச்சை வழங்க முடியும். நோயாளிகள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்,  செவிலியர்தான் புரிதலோடு அவர்களை அணுக வேண்டும். கிராமப்புறத்தில்  மருத்துவ முகாம்களுக்குச் செல்லும்போது இங்குள்ள மக்கள் எல்லோரும் மிகவும்  இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகிறார்கள்’’ என்று தன் களப்பணி அனுபவம்  பகிர்கிறார் தமிழ்ச்செல்வி.

எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் விழிப்புடனே இருக்க வேண்டும்.

தமிழ்மணி

கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 780 செவிலியரை உருவாக்கியிருக்கும் ஆசிரியப் பணிக்காக சிறந்த செவிலிய ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் தமிழ்மணி!
பெங்களூருவை சேர்ந்த  இவர், 1987ல்,
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.

நர்சிங் படித்து விட்டு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். 1991ல், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. நர்சிங் படித்து விட்டு, பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியின் காலேஜ் ஆஃப் நர்சிங்கில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார். 1992லிருந்து இப்போது வரையிலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அன்னை ஜே.கே.கே. சம்பூரணியம்மாள் காலேஜ் ஆஃப் நர்சிங்கின் முதல்வராக உள்ளார்.

‘‘வளமான தலைமுறையை உருவாக்கக்கூடிய வல்லமை பெற்ற ஆசிரியப் பணி மிகவும் மகத்தானது. நோயாளிகளின் இதயம் போன்று மதிக்கப்படக்கூடிய செவிலியப் பணி குறித்து, மருத்துவ ரீதியான பயிற்சி அளித்தல் மட்டும் போதாது. நோயாளிகளை அணுகும் மனிதநேயத்தையும் புகட்டுவது ஆசிரியப்பணியின் கடமைதான். இந்த 23 ஆண்டுகாலத்தில் கல்லூரியை வழிநடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை செவிலியராக்கியிருப்பதில் பங்காற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்கிறார் தமிழ்மணி.

இவர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருக்கிறார். பெங்களூரு ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம், சென்னை சவிதா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் வினாத்தாள் வடிவமைப்பாளராகவும், தேர்வு அதிகாரியாகவும் உள்ளார்.

இந்தியன் நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளராகவும் இருக்கிறார். இத்தனை பொறுப்புகள் ஒருபுறம் இருந்தாலும் 2000ம் ஆண்டு அமெரிக்காவின் ஹரிசோனாபல்கலைக்கழகத்தில் கலாசாரம் மற்றும் பண்பாட்டியலில் முனைவர் பட்டமும் 2010ம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நர்சிங்கில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். ஏற்கனவே இவரது ஆசிரியப் பணியை பாராட்டி கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த செவிலிய ஆசிரியர் விருது வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராணி

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களின் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற முனைவர் ஜெயராணிக்கு சிறந்த நிர்வாகி  விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் இவரது  சொந்த ஊர். 1978ல், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங்  முடித்துவிட்டு, அங்கேயே செவிலியராகப் பணிபுரிந்தார். 1983ல் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு சி.எம்.சி. காலேஜ் ஆஃப் நர்சிங்கில் பயிற்சியாளராக 3  ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்தல்  மீதான தெளிவுள்ள இவர் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளை எட்டிக் கொண்டே வந்திருக்கிறார். 1986-88ல், எம்.எஸ்சி. நர்சிங் முடித்து விட்டு,  செவிலியத் துறைப் பேராசிரியராக தரம் உயர்ந்தார். அதோடு நின்றுவிடவில்லை... 1995ல், ஆஸ்திரேலியாவில் க்ரிட்டிகல் கேர் ஆஃப் நர்சிங் படித்து விட்டு,  சி.எம்.சி. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பாளராக 10  ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

2002-06 ஆண்டுகளில் சி.எம்.சி. காலேஜ்  ஆஃப் நர்சிங்கின் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். 2007ல், நர்சிங்  படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர் இந்தியன் நர்சிங் கவுன்சிலின்  சி.எம்.சி. மருத்துவமனைக்கான ஒருங்கிணைப்பாளராக, ஹெச்.ஐ.வி. விழிப்புணர்வு  முகாம்களை நடத்தியிருக்கிறார்.

 ‘‘உலக சுகாதார நிறுவனத்தின் சி.எம்.சி.  மருத்துவமனை பிரதிநிதியாக தாய்லாந்து, பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில்  நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இந்திய சுகாதார நிலை குறித்துப்  பேசியிருக்கிறேன். நர்சிங் படித்து விட்டு வரும் செவிலியர்களுக்கு  பிராக்டிகல் அறிவு மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதனால், அரசு மற்றும்  மிஷன் மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய செவிலியர்களுக்கு செய்முறை பயிற்சி களை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறேன். எனது வழிகாட்டுதலில் இதுவரை 2  பேர் நர்சிங்கில் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். இப்போது 4 பேர்களின்  முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு வழிகாட்டுனராக உள்ளேன்’’ என்கிறார்  விருதைத் தாங்கியபடி!

- கி.ச.திலீபன்
படங்கள்: சாதிக், சி.சுப்ரமணியம்,
மதன்குமார், அருண்