அல்சீமருக்கு வருகிறது அருமருந்து!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

‘தடுக்க முடியாதது... சிகிச்சை தரவும் முடியாதது’ என்பதால் பெயரைக் கேட்டாலே அதிர வைப்பதாக இருக்கிறது அல்சீமர். இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காணும்முயற்சியில் முதல் கட்ட வெற்றி பெற்றிருக்கிறது அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம்.

 நோய்த்தொற்று ஏற்பட்டால் மூளையிலுள்ள மைக்ரால்ஜியா செல்களில் அதன் பாதிப்பு உடனடியாகத் தெரியும். இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜினைன் என்ற அமினோ அமிலம் அதிகம் சுரப்பது தெரிய வந்தது. அல்சீமர் உண்டாக்கப்பட்ட ஓர் எலிக்கு Difluoromethylornithine (DFMO) என்ற வேதிப்பொருளை அளித்த போது எலியின் அஜினைன் சுரப்பு கட்டுக்குள் வந்தது.

நினைவுத்திறன் பரிசோதனையில் எலியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ‘இதே போல மனிதர்களுக்கும் DFMO பயன்படுத்தி அல்சீமரை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’என்று உற்சாகத்தோடு சொல்கிறார்கள் நரம்பியல் துறை பேராசிரியர் கரோல் கால்டன் மற்றும் ஆராய்ச்சிக் குழுவினர்!

உடலும் அறிவும் ஒண்ணு!

உடல்நலம்  பாதிக்கப்பட்டால் அறிவாற்றலும் பாதிக்கப்படுவதைஆய்வாளர்கள்  கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, நோய்த்தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அறிவாற்றல் (IQ) பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கிறது இந்த  ஆய்வு.டென்மார்க் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் எரிக்ஸன் பென்ராஸ் குழு, 1974 முதல் 1994 வரை பிறந்த  டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சத்து 90 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தியது.

வயிற்றிலோ,  சிறுநீரகப் பாதையிலோ, சருமத்திலோ அது எந்த வகை நோய்த்தொற்றாக  இருந்தாலும், அது அறிவாற்றலின் மையத்தை மோசமாக்கிவிடுவதை ஆய்வில்  உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மூளையைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு  மண்டலம் பாதிக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்கள்.

 வெவ்வேறு நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இடையே அபூர்வ ஒற்றுமையாக IQ அளவு சராசரிக்கும் கீழ் இருந்திருக்கிறது.  ‘நோய்  எதிர்ப்பு மண்டலத்தில் கவனம் செலுத்தினால் அறிவுத்திறனை மேம்படுத்த முடியும்... மனநலப் பிரச்னைகளை குணமாக்கும் வாய்ப்பு அதிகம்என்பதை இந்த  ஆய்வில் புரிந்துகொண்டிருக்கிறோம்’ என்கிறார் பென்ராஸ்.