பதற்றக் கோளாறுகள் (Anxiety Disorders)



மனசே... மனசே...

குழந்தைகள் பரீட்சையின் போதோ, வீடு/பள்ளி இடமாற்றத்தின் போதோ, பழக்கமில்லாத சூழ்நிலையின் போதோ பதற்றப்படுவது இயல்பான ஒன்றே. இச்சூழ்நிலையில், சில எதிர்மறையான கேள்விகள்/கவலைகள் (எ.டு: என்ன நடக்குமோ?,

ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ?) எழுவது சகஜம்தான். அது ஒருவரை தயார்நிலையில் வைக்கவும், சவால்களை சமாளிக்க உந்துதலாகவும் அமையும். அதுவே, எல்லா விஷயத்துக்கும் காரணமே இல்லாமல் தொடா்ந்து பதற்றப்பட்டாலோ, ஒரு விஷயத்துக்கு அளவுக்குஅதிகமாக கவலைப்பட்டாலோ, அது பதற்றப்படுபவரின்நிம்மதியையும் சந்தோஷத்தையும் குலைத்து விடும்.

பதற்றம் என்பது ஒருவித தெளிவற்ற, அச்சம் கலந்த, விரும்பத்தகாத ஒரு மனநிலை. கவலைதான் இதனின்முக்கிய அம்சம். ஏதோ கெடுதல் ஏற்படப் போகிறது என்ற பயமும், ஆபத்திலேயே இருப்பது போன்ற நிம்மதியற்ற உணர்வும் கலந்திருக்கும். பதற்றக் கோளாறுகளின் அறிகுறிகள் திடீரென்றும் ஏற்படலாம்... கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி, நீடிக்கவும் செய்யலாம். ஏன் இப்படி வித்தியாசமாக உணர்கிறோம், கவலைப்படுகிறோம் எனக் குழந்தைகளுக்கு காரணம் கூட தெரியாது.

பதற்றம் ஒரு மனநல கோளாறாக ஆவது எப்போது? காரணமே இல்லாமலும் மேலும் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடியும், குழந்தையின் அன்றாட வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியை பதற்றமானது பாதிக்கும் போது, அது ஒரு மனநலக் கோளாறு ஆகிறது. இது மனநலப் பிரச்னைதானா என்பதை புரிந்து கொள்ள, குழந்தையின் வயதையும்மனதில் கொள்ள வேண்டும்.

சிறுகுழந்தையாக இருக்கும்போது, தனிமைப்படுத்தும் போது பதற்றம் அடைவது இயல்புதான். அதுவே குழந்தைப் பருவத்தைத் தாண்டியப் பின்னரும், தனியே விட்டு சென்றால், அளவுக்கு அதிகமாக பதற்றமடைவது, மனநலப் பிரச்னையின் அறிகுறியே. பதற்றம் ஏற்படுத்தும் எல்லா சூழ்நிலையையும் குழந்தை தவிர்க்க நேரிட்டால், அதை உளவியல் ஆலோசகரின் கவனத்துக்கு உடனே கொண்டுவர வேண்டும். 

விளைவுகள் பதற்றக் கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படும் அவஸ்தை மிக அதிகம். இது குழந்தையின் படிப்பு, சமூக வாழ்க்கை போன்றவற்றை பாதிப்பதோடு, குழந்தையின் நிம்மதி, சந்தோஷம், தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கியம் போன்றவற்றையும்பெரிதும் பாதிக்கிறது. இவர்களின்ஆளுமையும் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையற்றவர்களாக உருவாவதற்குக் காரணமாகிறது. குழந்தைகள் பொதுவாக இது குறித்து வெளியே பேசுவதற்கே தயக்கம் காட்டுவார்கள். தம்மை பலவீனமானவர்கள் / பயந்தாங்கொள்ளி என பிறர் கருதிவிடுவார்கள், பெற்றோர் தங்கள் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் கருதி, தனிமையாக உணர்வார்கள்.

 அதிக பதற்றம் குழந்தையின் செயல்பாடுகளைப் பாதிப்பதால், பரீட்சையிலும் அவர்களின் செயல்திறன் குறையும். பெற்றோருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்தி விடும். வளர வளர, வேறு பல மனநலப் பிரச்னைகளையும் இது ஏற்படுத்தி விடக் கூடும்.  பதற்றக் கோளாறும் பிற மனநலப் பிரச்னைகளும் பொதுவாக, பதற்ற வகைக் கோளாறுடன், மனச்சோர்வு (Depression), ஏ.டி.எச்.டி (ADHD) போன்ற கோளாறுகளும் சேர்ந்து காணப்படலாம். ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கும்மேற்பட்ட பதற்ற வகை கோளாறுகள் இருக்கும் வாய்ப்பும் உள்ளது. இது மிகவும் பரவலாக காணப்படும் ஒரு மனநலக் கோளாறே.

 குழந்தைகளைப் பாதிக்கும் முக்கிய பதற்ற வகைகோளாறுகள்  இதில் ஒவ்வொரு கோளாறும் ஒரு குறிப்பிட்ட வயதில்ஆரம்பிக்கும். பொதுவாக 7 வயதுக்கு மேல்தான் பதற்றக் கோளாறுகள் ஒருவரைப் பாதிக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லாவித பதற்றக் கோளாறுகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவை எல்லாமே, குழந்தையின் தினசரி வாழ்க்கை மற்றும் சந்தோஷத்தை பாதிக்கும், காரணமில்லா பயம் / கவலையே.

 1. பிரிவு குறித்த பதற்றக் கோளாறு   (Separation Anxiety Disorder)  குழந்தை வீட்டை விட்டோ, நெருக்கமாக உள்ள நபரிடமிருந்து பிரியும் போதோ, வெகுவாக பதற்றப்படுவதுதான் பிரிவு குறித்த பதற்றக் கோளாறின் முக்கிய அம்சம். பொதுவாக, 5-7 மற்றும் 11-14 வயதுள்ள குழந்தைகளிடத்தில் இது அதிகம் காணப்படுகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள்குழந்தைகளிடத்தில் அதிகமாகவோமற்றும் தொடர்ந்தோ/அடிக்கடியோ காணப்பட்டால், அது பிரிவு குறித்த
பதற்றக் கோளாறாக இருக்கலாம்.

அறிகுறிகள்

1.பிரிவு ஏற்படும் போதோ, பிரியப் போகிறோம் என்பதை அறியும் போதோ மிகுந்த கவலைக்குள்ளாவது. 

2.நெருக்கமானவரை பிரிந்து    விடுவோமோ, அவர்களுக்குஏதாவது நேர்ந்து விடுமோ என கவலைப்படுவது.

3.தொலைந்து விடுவோமோ / யாரேனும் கடத்தி விடுவதால் பிரிவு ஏற்பட்டு விடுமோ எனக் கவலை கொள்வது.

4.பிரிவுக்குப் பயந்து பள்ளிக்கு செல்லத்     தயங்குவது / மறுப்பது.

5.வீட்டிலோ / வேறு எங்காவதோ, நெருக்கமானவர் இன்றி தனியே இருக்கப் பயப்படுவது.

6.நெருக்கமானவர் இன்றி தூங்கத் தயங்குவது / மறுப்பது அல்லது வேறு எங்கும் தங்க மறுப்பது.

7.பிரிவு குறித்த கெட்ட கனவு.

8.பிரிவு ஏற்படக் கூடும் என    அறியும்போது தோன்றும் உடல் ரீதியான அறிகுறிகள் (தலைவலி, வயிற்று வலி).

 இந்த அறிகுறிகள் 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காணப்பட்டுகுழந்தையின் படிப்பு மற்றும் தினசரி செயல்பாட்டைப் பாதித்தால், அது பிரிவு குறித்த பதற்றக் கோளாறாக இருக்கலாம்.

2. பொதுக் கவலைக் கோளாறு (Generalized Anxiety Disorder)   இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாவற்றைப் பற்றியும் அதிகமாக வருத்தப்படுவார்கள். அவர்கள் வருத்தப்படும் விஷயம் பள்ளியைப் பற்றி இருக்கலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் குறித்து இருக்கலாம். பொதுவாக எதிர்காலத்தைக் குறித்தும் இருக்கலாம். ‘ஏதேனும் கெட்டது நடந்து விடுமோ’ என்ற பயத்தினுடனே எப்போதும் இருப்பார்கள். இதனால் உடல்ரீதியான அறிகுறிகளான தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, தூக்கமின்மை, சோர்வும் காணப்படும். குழந்தைக்கு 8 வயதான பின்னரே இந்தக் கோளாறு தாக்குகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் திறன் / சுயமரியாதையை சோதிக்கும் தருணங்களில் அதிகம்பதற்றப்படுவார்கள். பள்ளி சம்பந்தப்பட்ட விஷயங்களான, பரீட்சை, நண்பர்களிடம் பழகுதல், வகுப்பில் எல்லோர் முன் பேச வேண்டிய சூழல் போன்றவை இவர்களுக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இதனாலேயே, பள்ளியில் மனஉளைச்சல் (Stress) அதிகமாகும் போது, சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்து விடவும் கூடும் (School Refusal). குழந்தைகளால், அவர்களின் கவலையைக் கட்டுப்படுத்தவே முடியாமல் இருக்கும்.

இதனால், இந்தப் பயம் அவர்களுக்கு ஒரு பெரும் சுமையாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டகுழந்தைகள், பதற்றத்தைக் குறைக்க, பொதுவாக சக குழந்தைகளை நாடி, அவர்களை சார்ந்து வாழக் கூடும். மேலும், எந்த வேலை செய்தாலும் அதை மிகச் சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். எப்போதும் மற்றவரின் ஒப்புதல் இவர்களுக்கு மிகவும் தேவைப்படும். இப்படி, பயமும், கவலையும், அதைச் சார்ந்த உடல் ரீதியான அறிகுறிகளும் 6 மாதங்களேனும் தொடர்ந்து காணப்பட்டால் அது பொதுக் கவலை கோளாறாக இருக்கலாம். 

3. சமூக அச்சம்(Social Anxiety Disorder)  குழந்தைகளைக் காட்டிலும்,பொதுவாக டீன் ஏஜ் வயதினரை சமூக அச்சக் கோளாறு அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் பயம் முழுக்க முழுக்க, சமூக சூழ்நிலைகளைக் குறித்தே இருக்கும். பிறர் என்ன சொல்லி விடுவார்களோ, தன்னை அசிங்கப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்திலேயே ஆழ்ந்திருப்பார்கள்.

பெரும்பாலும்  இவர்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள்.  பள்ளி செல்வது, வகுப்பில் பிறரிடம் பேச வேண்டிய சூழல், புது நபர்கள் வீட்டுக்கு வருதல், ஏதேனும் குடும்ப விழாக்கள் போன்ற சூழ்நிலைகளில் இவர்களுக்கு பதற்றம் அதிகமாகி வியர்த்துக் கொட்டுதல், வெட்கப்படுதல் / தசை இறுக்கமாவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் நிலையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அறிகுறியைக் கட்டுப்படுத்தப் பார்ப்பார்கள். அவர்கள் பயப்படும் சூழ்நிலையை தவிர்த்துவிடுவார்கள். தன்னை யாரேனும் தவறாக விமர்சித்தாலோ / கிண்டல் செய்தாலோ, தன்னை தற்காத்துக் கொள்ளும்வண்ணம் எதிர்த்து பேசத் தெரியாமல்தர்மசங்கடப்படுவார்கள். அதையே நினைத்து நினைத்து வேதனையும் அடைவார்கள்.

பொதுவாக இவர்கள் ஓர் இடத்துக்குச் சென்றால், அங்கு உள்ளவர்கள் எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல தன்னம்பிக்கை இல்லாமல் உணர்வார்கள். குடும்ப நபர் களிடம் இவர்கள் சாதாரணமாக, ஆரோக்கியமாக பழகுவார்கள்.  டீன் ஏஜில் சமூக அச்சக் கோளாறு உள்ளவர்கள், பெரியவர்கள் ஆனதும் பொது கவலைக் கோளாறுமற்றும் மனச்சோர்வுக்கு (Depression) ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

தினசரி பலரை சந்திக்க வேண்டியிருக்கும் தேவையால், இவர்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பொதுவாக இந்தக் கோளாறு உள்ளவர்கள், பெரும்பாலும், 15-20 வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகே சிகிச்சைப் பெற வருவது வழக்கம். குழந்தை மற்றும் டீன் ஏஜருக்கு ஏற்படும் பிற வகை பதற்றக் கோளாறுகள்  குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

டீன் ஏஜில் சமூக அச்சக் கோளாறுஉள்ளவா–்கள்,பெரியவர்கள் ஆனதும் பொது கவலைக் கோளாறு மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

பதற்றக் கோளாறின் பொதுவான அறிகுறிகள்

பதற்ற உணர்வு மனதை அலைக் கழிப்பது மட்டுமில்லாமல், உடல் ரீதியாகவும் உணரப்படுகிறது.

1.பதற்றம், நடுக்கம்
2.டென்ஷன் / அமைதியற்றநிலை
3.சோர்வாக உணா்தல்
4.தலைச்சுற்று  / மயக்க உணா்வு
5.அடிக்கடி சிறுநீா் கழித்தல்
6.இதயப் படபடப்பு
7.மூச்சுத்திணறல்
8.வியா்த்துக் கொட்டுதல்
9.எரிச்சல்
10.கவலை மற்றும் பயம்
11.தூக்கமின்மை
12.கவனம் செலுத்துவதில்/ஒருமுகப்படுத்துதலில் சிக்கல்

(மனம் மலரட்டும்)

டாக்டர் சித்ரா அரவிந்த்