கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்
என் நண்பருக்கு ஒரு மணி நேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தால் கால்கள் வீங்கிவிடுகின்றன. இதனால் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கிறார். இதற்கு என்ன காரணம்? சரி செய்ய முடியுமா?
- ஜி.பாஸ்கர், விருத்தாசலம்.
ஐயம் தீர்க்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் அருண்குமார்...``கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பருமன் பிரச்னை உள்ளவர்களுக்குத்தான் தொங்கப் போட்டவுடன் கால் வீக்கம் வரும். அதனால், கால் வீக்கம் வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்து வரை பார்த்து பரிசோதித்து, முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
பயணங்களின் போது அதிக நேரம் கால்களை ஒரே இடத்தில் வைத்து உட்கார்வதால், சிலருக்கு வீக்கம் ஏற்படும். விமானப்பயணங்களில் இப்படி பலமணி நேரம் காலை மடக்கி உட்கார்வதால் ஏற்படும் வீக்கத்தை ‘எக்கனாமிக் கிளாஸ் சிண்ட்ரோம்’ என்கிறோம். காலில் இருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே செல்கிறது.
இந்த ரத்த ஓட்டமானது குறையும்போது கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பலமணி நேரங்கள் காலை மடக்கி உட்கார்ந்து பயணம் செய்பவர்களுக்கு ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ எனப்படும் நாளங்களுக்கு உள்ளே ரத்தக்கட்டிகள் பிரச்னையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க கால்களுக்கும் பாதங்களுக்கும் தேவையான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். வீனஸ் ஸ்டாக்கிங்ஸ் (venous stockings) எனப்படும் காலின் ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் காலுறைகளை அணிந்து கொண்டால் கால் வீக்கம் மற்றும் ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ வராமல் தவிர்க்கலாம்...’’
- விஜய் மகேந்திரன்