சோப்பு போடலாமா?



ஒரு நிமிடம்...

நட்சத்திரங்களின் அழகு ரகசியம் முதல் 10 வகை சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வு வரை பல்வேறு சோப்பு வகைகளை தினந்தோறும் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இவற்றில் எது நல்ல சோப்பு? நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சோப்பு சரியானதுதானா? சரும நல மருத்துவரான சுபாஷினி விளக்குகிறார்...

சோப்பு ஏன் தேவை?

சுற்றுப்புறச்சூழலும் வாழ்க்கைமுறையும் மாசடைந்த இன்றையச் சூழலில் வெறும் தண்ணீரால் கை கழுவுவது எப்படி போதுமானதில்லையோ, அதேபோல வெறும் தண்ணீரில் குளிப்பதும் போதுமானதல்ல. உடலில் அழுக்கு சேராமலும் தோல் பகுதிகளில் நோய்த்தொற்றுகள் வராமலும் தடுக்க சோப்பு நிச்சயம் தேவை. இந்த இரு காரணங்கள் தவிர, நம்முடைய சருமத்துக்கு இதமான உணர்வைக் கொடுக்கவும் நறுமணத்தைத் தருவதற்கும் சோப்பு பயன்படுகிறது.

நம் உடல் அதிகமாக வியர்க்கும்போது சருமத்தில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. வியர்வையுடன் அழுக்கும் ஒன்று சேர்ந்துகொண்டால் தொற்றுகள் ஏற்படும் சாத்தியம் இன்னும் அதிகமாகும். இதனுடன் சூட்டுக்கட்டி, கொப்புளம் போன்றவற்றையும்
சோப்பின் மூலம் தவிர்க்க முடியும்.

சோப்பும் சில பிரச்னைகளும்சரியாகத் தேர்ந்தெடுக்கிற சோப்பு மட்டுமே நமக்கு இத்தனை உதவிகளையும் செய்யும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சோப்பு போட்ட பிறகு, தண்ணீரால் சுத்தம் செய்துவிடுவதால் உடலின் உள்பகுதியில் எந்த பாதிப்பும் வராது. சருமப் பகுதிகளில்தான் பிரச்னைகள் ஏற்படும்.

சிலருக்கு சருமம் கருப்படையும். சிலருக்கு சோப்பில் இருக்கும் வேதிப் பொருட்கள் சூரிய வெளிச்சத்துடன் சேராமல் வெளியில் செல்லும்போது எரிச்சலை உண்டாக்கும். சோப்பு கடினத் தன்மையுடன் இருந்தால் தோல் பகுதியின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டுபோகும். இயற்கையாகவே சருமத்தின் ஈரப்பதம் குறைந்தவர்களுக்கு இந்த வறட்சி விரைவிலேயே வரும். வறட்சியைத் தொடர்ந்து வெடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.

எதுதான் நல்ல சோப்பு?

வழக்கமான சோப்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்படி மெடிக்கேட்டட் சோப்பு பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மாயிச்சரைஸிங் சோப்பு சரியான தேர்வாக இருக்கும்.

 மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு கிளிசரின் கொண்ட மாயிச்சரைஸிங் சோப்பு பலன் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் கிளிசரின் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக குளிரான பகுதிகளிலும் ஏசியிலேயே இருப்பவர்களுக்கும் மாயிச்சரைஸிங் சோப்பு நல்லது. வியர்வை பிரச்னை, துர்நாற்றம் உள்ளவர்களுக்கு டிரைக்ளோஸான் வகை சோப்பு பொருத்தமானது.

பாப்பாவுக்கு எந்த சோப்பு?

குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வரும் பேபி சோப்புகளை பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், Atopy children என்று சொல்கிற மிகவும் மிருதுவான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு பேபி சோப்பு கூட அலர்ஜியை உருவாக்கும். அதனால், குளியலுக்கு என்று இருக்கும் லோஷனை தண்ணீரில் கலந்து குளிக்க வைக்கலாம்.

குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தாலும் அம்மாவுக்கு சருமம் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் இந்த லோஷன் குளியலே நல்லது. குழந்தை ஒரு வயதைக் கடந்த பிறகு வழக்கமான குழந்தைகள் சோப்பு பயன்படுத்தலாம்.

டிடெர்ஜென்ட் அலர்ஜி

குளியல் சோப்பைவிட சலவை சோப்பினால்தான் பலருக்கும் அலர்ஜி ஏற்படுகிறது. சிலருக்கு சோப்பை மாற்றியதும் சரியாகிவிடும். ஆனால், சிலருக்கு எந்த சோப்புமே ஏற்றுக் கொள்ளாது. இவர்கள் சங்கடப்படாமல் கிளவுஸ் அணிந்துகொண்டு துவைக்கலாம். இப்போது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் இதற்காகவே கிளவுஸ் விற்கிறார்கள்.

பாத்திரம் துலக்கும்போது அலர்ஜி ஏற்படுகிறவர்களும் கிளவுஸ் பயன்படுத்தலாம். சோப்புக்குள் இருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தைக் குறைக்கும் வகையில், தண்ணீர் விட்டு கொஞ்சம் திரவமாகப் பயன்படுத்துவதும் நல்ல மாற்றுவழி.

பி.ஹெச். அளவை கவனியுங்கள்நம்முடைய சருமம் அமிலத்தன்மை கொண்டது. ஆனால், அல்கலைன் கொண்ட சோப்பு வகைகளை நம் உடல்ஏற்றுக் கொள்ளாது. அல்கலைன் சோப்பு பயன்படுத்தினால் கொப்புளங்கள் ஏற்பட்டு நீர் வடிவது, தோல் உரிவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதனால் இப்போது அல்கலைன் சோப்பு வகைகள் சந்தையில் பெரும்பாலும் வருவதில்லை. ஆனால், புதிய சோப்பையோ, விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக வாங்குகிற சோப்புகளிலோ இந்த பி.ஹெச். அளவு குளறுபடியாக இருக்கலாம். இதன் பாதிப்பு நாளடைவில் தெரியும் என்பதால் முன்னரே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தண்ணீரிலும் இருக்கிறது விஷயம்!

நாம் தேர்ந்தெடுக்கிற சோப்பு மட்டுமே சரியானதாக இருந்துவிட்டால் போதாது. நாம் பயன்படுத்துகிற தண்ணீருடனும் அந்த சோப்பு பொருந்த வேண்டும். தண்ணீர் கடினத்தன்மை கொண்டதாக இருந்தால் அதனுடன் சோப்பின் வேதிப்பொருட்கள் சேர்ந்து பிரச்னைகளைக் கொடுக்கும். காரத்தன்மையுள்ள தண்ணீர் என்றால் சோடியம் உப்பாகவே சோப்பு மாற்றம் அடையும்.

சுண்ணாம்புப் படிவம் கலந்த தண்ணீராக இருந்தால் சோப்பில் நுரையே வராது. ஆனால், இந்த விவரம் அறியாமல் நுரை வராத சோப்பு என்று சொல்லிவிடுவோம். இந்த குழப்பங்களால் நம் உடலில் சோப்பு வெள்ளை வெள்ளையாக ஒட்டிக்கொள்ளும். உடலில் தேவையற்ற பிசுபிசுப்பு, அரிப்பு உண்டாகும். தொழிற்சாலைகள் சார்ந்த இடங்களிலும், அமிலத்தன்மை இருக்கும் சுற்றுச்சூழலிலும் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படும்.

தீர்வு என்ன?

சோப்பு தொடர்பாக பெரிய பிரச்னைகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. சோப்பால் உண்டாகும் பிரச்னைகளை ஆயின்ட்மென்டுகள், க்ரீம்கள், மாத்திரைகள் மூலமே சரி செய்துவிட
முடியும். விளம்பரங்களைப் பார்த்து சோப்பை அடிக்கடி மாற்றக்கூடாது. பயன்படுத்துகிற சோப்பு ஏதாவது அலர்ஜியை ஏற்படுத்தினால், சரும நல மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றுவதே நல்லது!

சோப்பு எப்படி தயாராகிறது?விளக்குகிறார் வேதியியல் பேராசிரியர் உஷா...‘‘நிறத்துக்காக சாயங்கள், மணத்துக்காக வாசனைப் பொருட்கள், திடப்பொருளாக மாறுவதற்காக சோடியம் ஹைட்ராக்ஸைடு என சோப்பு என்பதே வேதிப்பொருட்களின் கூட்டுவடிவம்தான்.சோடியம் ஹைட்ராக்ஸைடு கலந்தால்தான் கட்டியாக சோப்பு கிடைக்கும்.

சோடியம் லாரெல் சல்பேட் கலந்தால்தான் நுரை வரும். சோப்பு தயாரிப்பில் பயன்படும் விலங்குகளின் கொழுப்பு அமிலங்களின் காரத்தன்மையை மாற்ற கிளிசராலை சேர்க்க வேண்டும். நம் சருமத்தின் ஈரப்பதத்துக்காகவும், மிருதுவாக இருப்பதற்காகவும் மாயிச்சரைஸிங் ஏஜென்ட் கலப்பார்கள்.

இப்படி பல வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் சோப்பின் இறுதி வடிவம் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நிறத்தை மறைப்பதற்காக பல நிறமிகளை சேர்ப்பார்கள். அப்போதுதான் நம்மைக் கவர்கிற நிறத்தில் சோப்பு இருக்கும். குளிக்கிற சோப்பில் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்ப்பதுபோல் டிடர்ஜென்டுகளில் சோடியம் கார்பனேட் என்ற அழுக்கு நீக்கியைச் சேர்க்கிறார்கள்.

இந்த வேதிப்பொருட்கள் உடலில் அரிப்பு, அலர்ஜி, தலைவலி போன்றவற்றை உண்டாக்கலாம். சிலர் சோப்பினால்தான் தலைவலி வருகிறது என்பது தெரியாமல் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு நீண்ட நாட்கள் கழித்து சுவாசம் தொடர்பான கோளாறுகள் வரவும் வாய்ப்புண்டு.’’

சோப்பு... சில டிப்ஸ்...

நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு சருமம் என்பதும் நம் சருமப்பகுதி சுவாசிக்கும் தன்மை கொண்டது என்பதும் பல நேரங்களில் நமக்கு நினைவு இருப்பதில்லை. அதனால், நமக்கு ஏற்ற சோப்பை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக நறுமணம் கொண்ட சோப்புகள் நல்லவையல்ல. எந்த அளவு வேதிப்பொருட்கள் சேர்க்கிறார்களோ அந்த அளவே நறுமணம் கிடைக்கும் என்பதால் இத்தகைய சோப்புகளை தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி சோப்பு பயன்படுத்தி முகம் கழுவும் பழக்கம் இருக்கும். இதுபோன்ற அதிக பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து சோப்பை தேர்ந்தெடுக்கும் பழக்கமே நம்மிடம் இருக்கிறது.

ஆனால், நம் சருமத்தின் தன்மை, வயது போன்றவற்றைப் பார்த்து தேர்ந்தெடுப்பதே சரியான முறை. காதி போன்ற கடைகளில் விற்கப்படும் சோப்புகளில் வேதிப் பொருட்கள் குறைவாக இருக்கும். இதுபோன்ற இயற்கையான முறையில், குறைந்த வேதிப்பொருட்களுடன் தயாராகும் சோப்புகளைத் தேர்ந்தெடுப்பது இன்னும் சிறந்தது.

- ஞானதேசிகன்