மது... மயக்கம் என்ன?
நான் மட்டும் குடிக்காமல் இருந்தால், நண்பர்கள் மீதான என் அன்பை
நள்ளிரவு 2 மணிக்கு எப்படி வெளிப்படுத்த முடியும்?
- யாரோ
மூளைக்குள் (Brain) என்ன நடக்கிறது? மதுவின் முதன்மையான நேரடிச் செயல்பாடு என்பதே மூளையின் திறனைக் குறைப்பதுதான். இதன் தொடர்ச்சியாகவே நரம்பு மண்டல செயல்திறனும் குறைந்து போகிறது. குடிக்கிறவர்கள் முதல் ஓரிரு பானங்களிலேயே நிறைய பேசத் தொடங்குவதும் ஆக்டிவ் ஆக இருப்பது போல காட்டிக் கொள்வதும் இதன் அறிகுறியே.
ஆல்கஹாலின் விளைவாக மூளையின் செல்களும் சர்க்யூட்களும், அந்த நொடி வரை தம் பிடிக்குள் வைத்திருந்த கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. மூளைக்குள் பயணிக்கும் மதுவானது பலவித நடத்தை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளுக்குப் பல
காரணிகளும் உள்ளன. உதாரணமாக...
*அருந்தப்பட்ட ஆல்கஹால் அளவு
*அருந்தப்பட்ட வேகம்
*வெறும் வயிற்றில் அருந்தப்பட்டதா? அல்லது நார்ச்சத்துமிக்க உணவுகளுக்குப் பிறகு அருந்தப்பட்டதா?
*சிகரெட் அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்களும் மதுவோடு எடுக்கப்பட்டதா?
*குறிப்பிட்ட நபரின் முந்தைய குடி
வரலாறு
*ஆணா? பெண்ணா?
*மரபியல் / பாரம்பரியப் பின்னணி
*குடிப்பவரின் மனநிலை
*மது அருந்தும் இடமும் சூழலும்
இந்த விஷயங்களும் கூட மதுமூளைக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கட்டமைக்கின்றன.
கல்லீரலுக்குள் (Liver) என்ன நடக்கிறது?காலங்காலமாகவே கல்லீரலின் நேரடி எதிரியாக மது அறியப்பட்டிருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த இருவருக்குமான யுத்தம் வரலாற்றில் பதிவாகி வருகிறது. அளவுக்கு அதிகமாக பல ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கம் உள்ள பலர், கல்லீரல் நோயுற்று மரணத்தை எட்டிய பதிவுகள் ஏராளம் உண்டு இங்கு.
மதுவினால் மட்டுமே கல்லீரல் சிதைவதில்லை என சிலர் கூறுவார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாம்தான். ஆனால், மதுவானது நம் உடலில் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) செய்யப்படும் போது உருவாகிற அபாயகரமான பொருட்களால், கல்லீரல் நிச்சயம் பழுதாகிறது. வழக்கமாக வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாக்கப்படும் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு போன்றவற்றுக்கு தடை ஏற்படுகிறது.
அதே வேளையில் அருந்திய ஆல்கஹாலில் இருந்து Acetaldehyde எனும் வேதிப்பொருளும், பெரியஅளவில் வினைபுரியக்கூடிய முடிவுறா மூலக்கூறுகளும் (Free radicals)உருவாகின்றன.
ஏறத்தாழ ஒன்றரை கிலோ எடை உடைய கல்லீரலானது, நம் உடலில் ஏராளமான செயல்களைச் செய்யக்கூடிய பெரிய உறுப்பு. ஒரு கட்டம் வரை, தனக்கு மதுவும் இன்ன பிற வஸ்துகளும் அளிக்கக்கூடிய அநீதிகளைப் பற்றி யாரிடமும் புகார் கூறாது தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ளும். எந்த அறிகுறிகளையும் வழங்காது. அதுவே, காலப்போக்கில் தாள முடியாத வகையில் பாதிப்புகளை அடையும் போது, கண்ணீர் விட்டு அழக்கூட திராணியற்று, சிதைந்து போகும்.
ஒரு பியருக்கு அதிகமாகவோ,3 லார்ஜுக்கு அதிகமாகவோ அடிக்கடி குடிக்கிறவர்களுக்கு இந்த நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. வேறு காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு தனிநபரைப் பொருத்தும் இந்த அளவானதுமாறுபடக்கூடும். பெண்களுக்கு மது விஷயத்திலும் வஞ்சம் உண்டு. அவர்கள் ஆண்களுக்குக் கூறப்பட்ட அளவில் பாதி அருந்தினாலும் கூட பாதிப்புகள் தொடங்கி விடும்.
மதுவினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் பொதுவாக 3 கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கட்டங்களில் சேராத நிலைகளும் உள்ளன.
*கொழுப்பு படிந்த கல்லீரல் நோய் (Fatty liver) இது ஒரே ஒரு முறை குடித்ததாலும் ஏற்படலாம்... அளவு மீறி குடிப்பதாலும் ஏற்படலாம். இதைக் குணப்
படுத்த முடியும்.
*மிகைக்குடி கல்லீரல் அழற்சி (Alcoholic hepatitis)
கல்லீரலின் பெரும்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு சிதைவுறும் நிலையே இக்கட்டம். அதீத குடிகாரர்களில் 50 சதவிகிதத்தினர் இந்த அபாய எல்லைக்குள் சிக்குகிறார்கள். கல்லீரல் திசுக்கள் பாதிப்படைந்து காணப்படும்.
காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி போன்றவை இதன் அறிகுறிகள். இது மிக மோசமான நிலைதான் என்றாலும், ஓரளவு சரிப்படுத்த முடியும். ஆனால், இக்கட்டத்தை எட்டியவர்கள் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மது அடிமையானால், ‘அந்த ஆண்டவனே நெனச்சாலும்...’என்கிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
*சாராய நச்சேற்றக் கரணை நோய் (Alcoholic cirrhosis)இதுவே கல்லீரல் நோயின் இறுதிக்கட்டம். மரபியல் காரணங்களாலும் இந்த நோய் துரிதமாக வந்து சேரும். பெருங்குடிகாரர்களில் 15 முதல் 30 சதவிகிதத்தினரைப் பீடிக்கிற இந்நோய், முற்றிலும் உயிர்ச்சேதத்தையே கொண்டு வரும். ஒரு கட்டத்தில் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, கல்லீரலின் உள்ளமைப்பையே சிதைத்து விடும். மூளை மற்றும் சிறுநீரகத்தையும் தன் கட்டுக்குள் கொணர்ந்து பழுதாக்கும்.
கல்லீரலானது ஒரு கட்டம் வரை, தனக்கு மதுவும் இன்ன பிற வஸ்துகளும் அளிக்கக்கூடிய அநீதிகளைப் பற்றி யாரிடமும் புகார் கூறாது. தன்னைத் தானேசரிப்படுத்திக் கொள்ளும்.கல்லீரல் அழற்சி சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும்மது அடிமையானால், ‘அந்த ஆண்டவனே நெனச்சாலும்...’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அதிர்ச்சி டேட்டா
நமது கல்லீரல் 300 விதமான உயிர் காக்கும் பணிகளைச் செய்கின்றன. இவ்வளவு திறன் படைத்த கல்லீரலை அழிக்க ஒரே ஒரு விஷயம் மட்டுமே போதும்... அது மதுப்பழக்கம்! உலகின் பல நாடுகளில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரின் அகால மரணத்துக்கு 7வது முக்கிய காரணமாக கல்லீரல் நோய்களே காரணமாகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் நபர்கள் மதுப்பழக்கத்தால் கல்லீரலை இழந்து இறக்கின்றனர். இந்தியாவில் / தமிழ்நாட்டில் இது குறித்த தெளிவான புள்ளிவிவரம் இல்லை. எனினும் கல்லீரல் நோய்களால் உயிர் துறப்போர் எண்ணிக்கை வேறு பல நாடுகளை விடவும் இங்கு மிக அதிகமே.
(தகவல்களைப் பருகுவோம்!)
டாக்டர் ஷாம்