பார்வையை பறிக்கும் வைரஸ்!



கண்ணே கவனி

பருவநிலை மாற்றங்களின் போது நோய்கள் பரவத் தொடங்குவதுசகஜம். கோடைக்காலத்தின் அதிக வெப்பத்துக்கு கண் சார்ந்த நோய்கள் அதிகமாகவே பரவுகின்றன. அஜாக்கிரதையாக இருந்தால் இவை பார்வையையே மங்கச் செய்ய லாம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கோடைக்காலத்தில் பரவக்கூடிய கண் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றிப் பேசுகிறார் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் நமிதா புவனேஸ்வரி.``பாக்டீரியாவால் உண்டாவது, வைரஸ் கிருமிகளால் உண்டாவது, பூஞ்சைகளால் உண்டாவது, ஒவ்வாமையால் உண்டாவது  என 4 வகை கண் நோய்கள் மக்களைத் தாக்குகின்றன.

கோடைக்காலத்தில் பரவும் கண்நோய் பெரும்பாலும் அடினோ வைரஸ் கிருமியால்தான் வருகிறது. இது காற்றில் எளிதாக பரவக்கூடியது. இதனால் வருவதுதான் ‘மெட்ராஸ் ஐ’. இதன் மருத்துவப்பெயர் `அக்யூட் கேட்டாரல் கன்ஜெக்டிவிட்டிஸ்’.  பாக்டீரியாவால் கூட சிலவகை கன்ஜெக்டி விட்டிஸ் வருகிறது.

 சிலருக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாகி கண்களின் கருவிழியைக் கூட தாக்கி பார்வையை மங்கச் செய்துவிடும். இதற்கு `சூப்பர்ஃபிஷியல் கெராடி டிஸ்’ என்று பெயர். எனவே வைரஸ் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது எனப்பார்த்து அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க முடியும். கன்ஜெக்டி விட்டிஸ் வந்தவர்களுக்கு கண்களில் மண் விழுந்தது போல உறுத்தும். கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும். நீரும் அழுக்கும் வெளியேறும். இமைப் பகுதிகள்வீங்கிவிடும்.

கண் நோய் வந்தவர்கள் மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்கி கண்களில் விட்டுக்கொள்ளக் கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. கண் மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கண்களையும் முகத்தையும் கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  தனி கைக்குட்டை, தலையணை உறை பயன்படுத்த வேண்டும். கூட்டம் உள்ள இடங்களுக்கு போகாமல் இருப்பது நல்லது. அக்யூட் கன்ஜெக்டிவிட்டிஸ் அதிகபட்சம் 3 நாட்களில் சரியாகிவிடும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கூட இருக்கும்.’’

- சேரக்கதிர்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்