பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?



ஓ பாப்பா லாலி

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விளக்குகிறார் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ராதா லஷ்மி செந்தில்.

*குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும்.

*பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

*குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்ற வற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன் படுத்தினாலே போதும்.

*குளிப்பாட்டும் ேபாது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

*தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.

*வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்
படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

*தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும். 

*குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.

*குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின்  ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

*குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள்.  சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

- தேவி மோகன்