டியர் டாக்டர்



நான் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 15 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறேன். இப்போது (குங்குமம்) டாக்டர் இதழ் எனக்கும், என்னோடு பணியாற்றி வரும் உதவி செவிலியருக்கும் பெரும் பயனுள்ளதாக உள்ளது.

ச.ஜெனோவாசந்தோஷ், கோவை.

முற்றிலும் வித்தியாசமான பார்வைக் கோணத்தில் மருத்துவக் குறிப்புகளையும் வருமுன் காத்திட உதவும் வகையில் ஆபத்துகளையும் எளிதாக எடுத்துரைத்து வருகிறது நம் ‘குங்குமம் டாக்டர்!’ இந்த இதழின் ‘மருந்துக்கடை மர்மங்கள்’ எல்லோருக்குமான ஒரு எச்சரிக்கை!

பாப்பாக்குடி. இரா.செல்வமணி, திருநெல்வேலி  11

மருத்துவரின் கையெழுத்து புரியாமல், மருந்து சீட்டில் இருக்கும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, ‘இந்த நோயாளிக்கு இந்த மருந்துதானா’ என கேட்பவர் யாருமே இல்லை. ‘இந்த கம்பெனி இல்லை... வேறு கம்பெனி உண்டு... அதே வீரியம்தான்’ என்று சொன்னால் நாமும் கடைக்காரர் தரும் மருந்தை வாங்கிப் போகிறோம். இது தவறு என தெரிந்து கொண்டோம்.

குழந்தைகளை எப்படி குளிக்க வைப்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் பத்மநாபராவ் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ‘சுகர் டைப் மி, சுகர் டைப் மிமி   என்று படிக்கும்போதே நானே ஒரு டைப்பாகி விட்டேன், சுகர் என்றால் இனிப்பு என்று நினைத்தால், அதுவே உடலுக்குச் சென்று கசப்பாகி விடுகிறதே. எதற்கும் நாம் கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!

எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை.


பிரசவ வேதனையோடுதான் பால் தருகிறது பசு என்றவுடன், பாவம் வாயில்லா பிராணி என்ன கஷ்டப்படுகிறது என தெரிகிறது. 9 வயது குழந்தைகள் கூட பூப்பெய்துவார்கள் என்ற செய்தியும் மனதைப் பிழிகிறது.

‘பால்’ என்றவுடன் பாலை குடிப்பதற்கு பயமாக உள்ளது. எக்ஸ்ரேயை கண்டுபிடித்த வில்ஹேம் ரான்ட் ஜென்னிக்கு வழங்கிய பரிசுத்தொகையை பல்கலைக்கழகத்துக்கே வழங்கியும், தன் கண்டுபிடிப்புக்காக வழங்கும் பேடன்ட் உரிமையையும் வாங்காமல் இருந்த அந்த நல்லவரை, அவர் கண்டுபிடித்த கதிர்வீச்சே மரணமாகத் தழுவிக்கொண்டதே... படிக்கும்போதே கண்களில் கண்ணீர் பெருகியது.

மனிதர் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர் கழிவுநீர்தானே என எண்ணுகிறோம். ஆஹா... கட்டுரையை படித்தபின்தான், அதன் செயல்பாடு, சிறுநீரை வைத்து எத்தனை சோதனைகள்
செய்யலாம் என தெரிந்துகொள்ள முடிந்தது.

செ.பிரியதர்ஷினி செல்லதுரை, கோவை.

‘கம்பு’  ‘வம்பு’ இல்லாதது. அதை ‘நம்பு’ங்கள் என சிறுதானியத்துக்கு மதிப்பு கொடுத்து அதன் மகத்துவமும் உணர்த்தியது புது ‘தெம்பு’ தருகிறது.டயாபடீஸ் (சுகர்) பற்றி மிகவும் ‘ஸ்மார்ட்’டாகவே பேசி, சில இடங்களில் ‘பஞ்ச்’ டயலாக்கால்பயமுறுத்தியும் இருக்கீங்க... நல்லமுறையில் உஷார்படுத்தியதை வரவேற்றுத்தான் ஆகணும்!மெட்ராஸ் ‘ஐ’ சப்ஜெக்ட்டை மிக நேர்த்தியாக கையாண்டது கண்களை குளிர வைத்தது.ஒரு நல்ல ‘சர்ச்சை’ மூலம் வயிற்றில் ‘பால்’ வார்த்து காப்பாத்தி யிருக்கீங்க. காலத்துக்கு ஏற்ற விஷயம்!

 சிம்மவாஹினி, வியாசர்பாடி.