புலிமியா பயங்கரம் சிறுநீரகத்தையே பாதிக்கும் ஒல்லி ஆசை!



சென்ற இதழில் புலிமியாவை அறிமுகப்படுத்தி, அதன் அறிகுறிகளை விளக்கிய டாக்டர் நிவேதிதா, அது  உண்டாக்கும் ஆபத்துகளையும், எச்சரிக்கை நடவடிக்கை களையும் இந்த இதழில் தொடர்கிறார்.

சிறுவர்களையும் ஆண்களையும் விட, சிறுமிகளும் பெண்களுமே புலிமியா பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். விடலைப் பருவத்திலேயே இந்தப் பிரச்னை பெரும்பாலும் தலைதூக்குகிறது. புலிமியாவுக்கும் பரம்பரைத் தன்மைக்கும் சிறியதாக ஒரு தொடர்பு இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி, மூளையின் முக்கிய கெமிக்கலான செரட்டோனின் சுரப்பில் குறைபாடு இருப்பதும் இதற்கொரு காரணம் என்கிறார்கள்.

உளவியல் ரீதியாக பாதிக்கிற சில பிரச்னைகளையும் இதனுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு... தன்னம்பிக்கை குறைவானவர்கள், எதிலும் ஒழுங்கை எதிர்பார்க்கிற பர்ஃபெக்ஷனிஸ்ட்ஸ், கோபத்தைக் கையாளத் தெரியாதவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், படபடப்பும் பதற்றமும் கொண்டவர்கள், ஓசிடி எனப்படுகிற எண்ணம் மற்றும் செயல் சுழற்சி பிரச்னை உள்ளவர்கள், தாங்க முடியாத ஓர் அதிர்ச்சியை திடீரென சந்தித்தவர்கள் ஆகியோர் புலிமியாவுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

தங்களது ஆஸ்தான நடிகை அல்லது மாடல்களின் ஒல்லிக்குச்சி உடல்வாகும், அது ஏற்படுத்துகிற கவர்ச்சியும் இளம்பெண்களை புலிமியாவுக்குள் இழுக்கும் மிக முக்கியமான விஷயங்கள். ‘ஒல்லியான உடல்வாகுதான் அழகு’ என்கிற மாயையில் உண்ணும் ஒழுங்கீனத்தை வலிய வளர்த்துக் கொள்கிறார்கள்.

புலிமியா பிரச்னை விளையாட்டு வீரர்களிடையே மிகவும் சகஜம். விளையாட்டில் ஈடுபடுவோர் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பெற்றோரும் பயிற்சியாளர்களும் அதைத் தொடர்ந்து வலியுறுத்த, விளையாட்டு வீரர்களுக்கு எடைக் குறைப்பு முயற்சியாக புலிமியாவைக் கையாள்வது எளிதாகிறது.சரி... இந்தப் பிரச்னை அப்படி என்னதான் செய்யும்?

* முதல் வேலையாக உடலில் உள்ள நீர் சத்தெல்லாம் வற்றிப் போய், அது தொடரும் பட்சத்தில் சிறுநீரகங்கள் செயலிழந்து போகும்.

* முறையற்ற இதயத் துடிப்பு ஏற்படும். தொடர்ந்து இதயம் செயலிழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

* பற்கள் பலமிழப்பதும், ஈறுகளின் ஆரோக்கியம் கெட்டுப் போவதும் இந்தப் பிரச்னையில் மிகவும் சகஜம்.

* பெண்களுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறை தவறும்.

* சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்வதைத் தவிர்ப்பதால் இவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும். பேதி மாத்திரைகளை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தமும் ஏற்படலாம்.

* எப்போதும் மனநிலையில் ஒருவித தடுமாற்றமும் எரிச்சல் உணர்வும் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாவதும்
நடக்கலாம்.

புலிமியாவின் அறிகுறிகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் உணர்கிற ஒருவர், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து சோதனைகளையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டாக வேண்டும். பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப ஒட்டுமொத்த உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அறிவுறுத்தப்படலாம். தேவைப்பட்டால் எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கண்டறிய எக்ஸ்ரேவும், இதயத்தின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் இசிஜியும் கூட அறிவுறுத்தப்படலாம்.

மீள்வதற்கான வழிகள்...

*மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை தவறாமல் மேற்கொள்வதுடன், சிகிச்சைகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டியது முதல் விஷயம்.

*சோதனைகளின் முடிவை வைத்து எந்தெந்த சத்துகளில் குறைபாடுகள் உள்ளன என்றும், அவற்றை சரி செய்யும் உணவுகள் மற்றும் சப்ளிமென்ட்டுகள் பற்றியும் கேட்டு அறிந்து பின்பற்ற வேண்டும்.

*புலிமியா பாதித்தவர்கள் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அதிலிருந்து வெளியே வரத் துடிப்பவர்கள் தனிமையைத் தவிர்த்து குடும்பத்தாரின் அருகாமையையும் அன்பையும் தக்க வைத்துக் கொள்வது மனரீதியாக ஒருவித தெம்பைத் தரும்.

* ‘ஒல்லியான உடம்புதான் அழகானது’ என்கிற மாயையை மாற்றிக் கொள்ள வேண்டும். பி.எம்.ஐ. எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸின் கணக்குப்படி அவரவர் உயரத்துக்கேற்ற எடையைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.

*தினமும் கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பதும், எடையைப் பரிசோதிப்பதும், சில கிராம்கள் கூடியிருந்தாலும் பதறிப்போய் பட்டினி இருப்பதும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடற்பயிற்சிகளின் பங்கும் முக்கியம். ஆனாலும், அதீத உடற்பயிற்சியும் ஆபத்தானதுதான். எந்த வித உடற்பயிற்சியையும் சரியான நிபுணரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இன்றி ஆரம்பிப்பது தவறு.

பெற்றோருக்கு...

* சிறுவயது முதல் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகளின் மகத்துவத்தைப் புரிய வைத்துப் பழக்க வேண்டும். சமையலில் சேர்க்கிற ஒவ்வொரு பொருளின் அவசியத்தையும் சொல்லி, அவற்றை ஒதுக்காமல் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

*குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் திடீரென மாற்றங்களை உணர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். புலிமியாவுக்கான முன் தயாரிப்பு முயற்சிகளாக இருந்தால் மருத்துவர் கண்டுபிடித்து எச்சரிப்பார்.

*குழந்தைகளின் உடல் தோற்றத்தை கிண்டல் செய்வதோ, விமர்சனம் செய்வதோ வேண்டாம்.

‘ஒல்லியான உடம்புதான் அழகானது’ என்கிற மாயையை மாற்றிக் கொள்ள வேண்டும். பி.எம்.ஐ. எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸின் கணக்குப்படி அவரவர் உயரத்துக்கேற்ற எடையைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.

வி.லஷ்மி