நோ சொல்லுங்க!
ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்... சில மணித் துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ, பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்தப் பழக்கத்தை மிகத் தவறானதென எச்சரிக்கிறது அமெரிக்காவின் ஆய்விதழ் ஒன்று.
53 சதவிகிதம் பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை. இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் முழுமையாகத் தூங்குவதே இல்லையாம். யாருக்காவது குறுஞ் செய்தி அனுப்பியே, தங்களது இரவைக் கழிப்பவர்கள் 2 சதவிகிதமாம்.
ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டோனின் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் இன்றியமையாதது. மெலட்டோனின் இரவில்தான் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி லைட் நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றிவிடுகிறது. இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படைகிறது.
உறக்கம் அவர்களை விட்டு மெதுவாக நழுவும். இந்த செயல்பாடு தொடர்ந்தால் ‘இன்சோம்னியா’ என்னும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்இடி டி.வி. போன்றவற்றைப் படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது அந்த ஆய்வு.
ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை படுக்கையில் வைத்துக் கொள்வதால் வேறு சில பயங்கர விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை.
*எல்இடி லைட் வெளிச்சம் உங்களது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படும்.
*மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல... பெண்களுக்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
*லெப்டின் என்னும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது. உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை. இது குறைவதால் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிகம் சாப்பிடத் தூண்டி, பருமன் நோய்க்கு வழி வகுக்கும்.
*சரியான நேரத்துக்கு உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.