கற்க கசடற
தலைப்பைப் பார்த்தவுடன் ‘என்னங்க சின்னப்புள்ளத்தனமா இருக்கு? ஒரு மனுஷனுக்குக் கை கழுவக் கூடவா தெரியாது?’என்று வடிவேல் வாய்ஸில் கொந்தளித்தால், நீங்களும் நம்ம கட்சிதான். ஆனால், மேட்டர் அத்தனை சாதாரணமானதில்லை!
ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகள் எத்தனை அவசியமோ, அந்த அளவுக்கு அவர் சுகாதாரமாக இருப்பதும் அவசியம். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் ஆகியவற்றுடன் 80 சதவிகித தொற்று நோய்கள் ஏற்படுவதற்கும் கைகளின் சுத்தமின்மையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடல் உறுப்புகளில் அதிகம் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ள இடமும் கைகள்தான். ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ் என்ற கிருமிகள்தான் இப்படி கைகளில் தங்கி பல நோய்களை ஏற்படுத்துகிறதாம்.
மேலை நாடுகளில் கரண்டிகள் மூலம் உணவு உட்கொள்வதால், கைகளின் மூலம் பரவும் நோய்கள் அங்கு குறைவு. தனிமனித சுகாதாரம் மிகவும் அதலபாதாளத்தில் இருக்கும் நம் நாட்டிலோ, கைகளின் மூலமே உணவு உண்கிறோம்.
உணவு தயாரிப்பிலும் நேரடியாகக் கைகளைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நகத்தை முறையாக வெட்டி, நகக்கண்களை சுத்தமாகப் பராமரிப்பவர்களும் குறைவுதான். அதனால் கைகளின் சுத்தம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அக்டோபர் 15ம் தேதியை ‘சர்வதேச கை கழுவும் தின’மாகக் கொண்டாடி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
எப்போதெல்லாம் கைகளை சுத்தமாகக் கழுவுவது மிகவும் அவசியம்?
*கழிவறை சென்று வந்த பிறகு...
*குழந்தைகளை சுத்தம் செய்த பிறகு...
*உணவு உண்ணும் முன் அல்லது குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்...
*உணவு சமைக்கும் முன்...
*செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு...
*குழந்தைகள் கைகளை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வார்கள். அதனால் விளையாடிய பிறகு...
*குழந்தைக்கு உடை மாற்றிய பின்...
*நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் முன்...
*மருத்துவமனையில் நோயாளியைப் பார்த்து விட்டுத் திரும்பிய பிறகு...
சாப்பிடப் போகும் முன் தண்ணீரில் கையை நனைத்துவிட்டுச் செல்வதற்கு ‘கை கழுவுவது’ என்று பெயர் இல்லை. கைகளை கழுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் முறை இதுதான்...கால அளவு: 40 முதல் 60 வினாடிகள்2வது கட்டத்திலிருந்து 7வது கட்டம் வரை முக்கியமான கட்டம். 15 முதல் 20 வினாடிகள் இதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்.