“எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையை ‘திடுக்’ என முடித்து வைக்கும் வில்லன் கொழுப்பு. நம் தாத்தாக்களின் தலைமுறையில் 60 வயதுகளில் வந்த மாரடைப்பு, இப்போது இருபதுகளிலேயே வர ஆரம்பித்திருப்பதற்கு கொழுப்பு பிரதான காரணமாக இருக்கிறது. இந்த கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளும் முறைதான் லிபிட் ப்ரொஃபைல் (Lipid profile)’’ என்று அறிமுகம் கொடுக்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான கிருபாகரன்.
லிபிட் ப்ரொஃபைலில் என்னென்ன இருக்கும்?‘‘லிபிட் ப்ரொஃபைலில் பல வகை கொழுப்புகள் அடங்கி யிருக்கும். குறிப்பாக, ஹெச்.டி.எல். (Highdensity lipoprotein) என்கிற நல்ல கொழுப்பு, எல்.டி.எல். (Lowdensity lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பு என 2 வகைகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகைகளில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். லிபிட் ப்ரொஃபைலில் காணப்படும் டிரைகிளிசராய்ட்(Triglycerides) என்பதும் கெட்ட கொழுப்புதான்...’’
லிபிட் பரிசோதனை ஏன் அவசியம்?‘‘பொதுவாக நல்ல கொழுப்பின் அளவு சராசரியாக ஆண்களுக்கு 40 mg/dl என்ற அளவில் இருக்க வேண்டும். பெண்களுக்கு 50 mg/dl என்ற அளவு இருக்க வேண்டும். நம் நாட்டிலோ, இது தலைகீழாக நல்ல கொழுப்பின் அளவு குறைவாகவும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகவும் இருக்கிறது.
இந்தக் கொழுப்பின் அளவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதற்கேற்றாற் போல வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ‘கொழுப்பு இதயத்துக்கு எமன்’ என்பதால் மாரடைப்பு நம் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்குத்தான் லிபிட் ப்ரொஃபைல் சோதனை உதவுகிறது...’’
யார் யார் செய்து கொள்ள வேண்டும்?‘‘பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. பருமன் பிரச்னை உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக இதய நோய் உள்ளவர்கள், தைராய்டு குறைவாக சுரப்பவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு இப்பரிசோதனை கட்டாயம்.
மேற்கத்திய நாடுகளுக்கு வரும் இதயம் தொடர்பான நோய்கள் 10 வருடங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு வந்துவிடுவதாக சமீபத்தில் ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது. அதனால், இதயம் தொடர்பான நோய்கள் வர அதிகம் சாத்தியம் உள்ளவர்கள் முன்னரே லிபிட் பரிசோதனை செய்ய வேண்டும்...’’
இதற்கு என்ன சிகிச்சை?‘‘வாழ்க்கை முறையை மாற்றுவதுதான் முக்கியமான சிகிச்சை. புகைப்பழக்கம், உடல் உழைப்பற்ற வேலை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் கெட்ட கொழுப்பின் அளவு உடலில் அதிகமாகிறது.
அதனால் இந்த காரணிகளைத் தவிர்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நாள் ஒன்றுக்கு 30 நிமிடமாவது நடைப்பயிற்சி ஆகியவை அவசியம். துரித உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், முட்டையின்மஞ்சள்கரு, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடாமல் இருப்பது என, நம் பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும்.
பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்ப்பது எல்லா வகையிலும் நல்லது. இப்போது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால், கொழுப்புப் பிரச்னையை கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...’’
லிபிட் பரொஃபைல் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது? ‘‘வழக்கமான ரத்தப் பரிசோதனை செய்யும் முறையிலேயே இந்தப் பரிசோதனையையும் செய்கிறார்கள். லிபிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்வதற்கு முன் 8 மணி நேரம் எந்த உணவும் சாப்பிட்டிருக்கக் கூடாது. அதனால், இரவு சாப்பிட்ட பிறகு, காலை உணவுக்கு முன் இந்த இடைவெளி தானாகவே கிடைத்து விடும் என்பதால் காலையில்தான் இந்த பரிசோத னையை செய்வார்கள். இதை Fasting lipid profile என்பார்கள்.
ஒரு கப் காபி கூட தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், காலையில் டீ, காபி கூட சாப்பிடக் கூடாது. இந்தப் பரிசோதனையில் கொழுப்பின் அளவோடு, வேறு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு இந்தப் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்.டி.எல். கொழுப்பு சராசரி அளவு இருந்தால் கூட, அதை எந்த அளவு குறைக்கிறோமோ அவ்வளவு நல்லது!’’
எவ்வளவு செலவாகும்?‘‘அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கட்டணம் இருக்கக்கூடும். இந்த மதிப்பு மருத்துவமனைகளைப் பொறுத்தும், பரிசோதனை நிலையங்களைப் பொறுத்தும் மாறும். சராசரியாக 4 மணி நேரத்தில் இந்த முடிவுகளை சொல்லிவிடுவார்கள். இந்தப் பரிசோதனையை பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. தரமான பரிசோதனை நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
பரிசோதனைக்குச் செல்பவர்கள் கொலஸ்ட்ரால் மட்டும் பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டால், இந்த லிபிட் பரிசோதனை செய்து கொடுப்பார்கள். பொதுவாக மற்ற பரிசோதனைகளோடு இதையும் செய்துகொள்ளலாம். நாமாகவே ஒரு பரிசோதனை நிலையத்துக்கு சென்று பரிசோதித்துக் கொள்வதைவிட ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செல்வதே நல்லது!’’
மேற்கத்திய நாடுகளுக்கு வரும் இதயம் தொடர்பான நோய்கள் 10 வருடங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு வந்துவிடுவதாக சமீபத்தில் ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது...
இப்போது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால், கொழுப்புப் பிரச்னையை கவனமாகக் கையாள வேண்டியகட்டாயத்தில் இருக்கிறோம்...
ஜி.ஸ்ரீவித்யா
படம்: ஆர்.கோபால்