எப்படி?
‘உண்பதற்கு ஒன்றுமே இல்லாத போது உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிப்பதே மிகச் சிறந்த வழி’ என ஆங்கிலத்தில் வேடிக்கையான பொன்மொழி சொல்வதுண்டு. உடல் இளைப்பதில் தொடங்கி, லட்சியத்தை வெல்வது, பக்தி என விரதமிருப்பவர் ஒவ்வொரு வருக்கும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு காரணம்.உணவும் நீரும் உயிரின் அவசியம். அதைப் புறக்கணிப்பது நல்லதா?
உண்ணாவிரதம் இருப்பதற்கான நிபந்தனைகள் என்னென்ன? விளக்குகிறார் வயது மற்றும் வாழ்க்கை மேலாண்மை சிறப்பு மருத்துவர் கௌசல்யா நாதன்.‘‘விரதம் (Fasting) என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது.
மாதம் ஒரு முறை உபவாசம் இருப்பதால் நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் உபவாசம் இருப்பதை எதுவும்உண்ணாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். அது தவறு. காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்தால் கோபம் வரும். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எரிச்சல் படுவார்கள்.
எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) ஏற்படும். உபவாசத்தின் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு (introspection) செய்து கொள்ளவும் நேர்மறை எண்ணங்களை (Positive thoughts) வளர்த்துக் கொள்ளவும் மனதைப் புதுப்பிக்கவும்தான்.
செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன்பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை மாதத்தின் ஒருநாள் முற்றிலும் தவிர்த்து விட்டு, மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும். பட்டினி கூடாது. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம்.
வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், சோயா பீன்ஸ், சுண்டல், நவதானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் தானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். இது உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும். வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முகப்பொலிவையும் பாதிக்கும். முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும். ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும்.
உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத் தொல்லை, குடல் சம்பந்த மான பிரச்னைகள் ஏற்படாது. சருமம் மெருகேறும். பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம். எதையும் முழுமையாக உணர்ந்து செய்தால் முழு பலன் தரும்’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா நாதன்.
‘‘மதம் சம்பந்தமாக விரதம் இருப்பவர்கள், மருத்துவ ரீதியிலான விஷயங்களுக்கு சாப்பிடா மல் இருப்பவர்கள், டிடாக்ஸ் (பீமீtஷீஜ்) முறையில் எடை குறைப்பவர்கள் என 3 வகையாக விரதம் இருப்பவர்களை பிரிக்கலாம்...’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா ராஜன். தவறான விரதம் தருகிற பாதக விளைவுகளையும் விளக்குகிறார் அவர்.
‘‘அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் சாப்பிடாமல் இருக்க வேண்டும். எடை குறைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாகவும் டிடாக்ஸ் முறையில் எடையை குறைக்க முடியும். பழங்கள், காய்கறிகள், போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி 24 முதல் 48 மணி நேரம் எடுப்பதால் உடலில் உள்ள கொழுப்புச்சத்துகள் கரையத் தொடங்கும். முறையான விரதம் மூலமே எடை குறைப்பை செய்ய வேண்டும். உடலுக்குத் தேவையான உணவு கிடைக்கவில்லை என்றால், கல்லீரலில் கிளைக்கோஜனாக இருக்கும் குளுக்கோஸை எடுத்து கார்போஹைட்ரேட்டாக மாற்றி, உடல் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளும்.
துவும் தீர்ந்துபோய் விட்டால் உடலில் உள்ள கொழுப்புகளில் இருந்து சக்தியை எடுக்கும். இதுவும் தீர்ந்துபோகும் போது, தசைகளில் உள்ள புரதங்களில் இருந்து சக்தியை எடுக்கத் தொடங்கும். இது ஆபத்தான நிலை ஆகும். Starvation stage என்று இதைக் குறிப்பிடலாம். இதற்கு மேலும் சாப்பிடாமல் இருந்தால் இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படைய ஆரம்பிக்கும். அதனால், விரதம் இருப்பவர்கள் அதை முறையாகக் கடைப்பிடிப்பது அவசியம்.
இஸ்லாமியர் ரம்ஜானின் போது 30 நாட்கள் விரதம் இருப்பார்கள். சூரியன் மறையும் வரை உணவு உட்கொள்ளாமல், இரவில் சமச்சீர் உணவு எடுத்துக் கொள்வார்கள். இதனால் அடுத்த நாளுக்கு தேவையான சக்தி,கல்லீரலில் கிளைக்கோஜென் ஆக சேர்ந்து விடுகிறது. அடுத்த நாள் அது குளுக்கோஸ் ஆக மாறி செயல் புரியத் தொடங்கி விடுகிறது. இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
விரதம் இருக்கும் போது நீர்ச்சத்து உள்ள பானங்களை நிறைய எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் அப்படியே தங்கி நோய்களை ஏற்படுத்தும். விரதத்தின் போது குளுக்கோஸ் தண்ணீர், கிரீன் டீ, சூப் போன்றவையும் பருகலாம். கிரீன் டீ ‘ஆன்டிஆக்ஸிடென்ட்’ ஆகச் செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்யும். போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் கிடைக்க வழி செய்கிறது.
முறையான விரதத்தில் 5 வகைகாய்கறிகள், 5 வகை பழங்கள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரைமணி நேரம் நடைப்பயிற்சியோடு,8 மணி நேர தூக்கமும் பெற்றால், உடல் புத்துணர்வு பெறும். Endorphins எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகமாவதால் உணர்வுகள் நல்ல நிலையில் இருக்கும்.
கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவுக்காரர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், நீண்ட நாட்களாக மருந்து உட்கொண்டு வருபவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் விரதம் இருக்கக் கூடாது...’’ முறையான விரதத்தில் கடினமான உணவுகளை தவிர்த்துவிட்டு, 5 வகை காய்கறிகள், பழங்கள், தேவையான அளவு தண்ணீர், அரைமணி நேரம் நடைப்பயிற்சியோடு, 8 மணி நேர தூக்கமும் பெற்றால், உடல் புத்துணர்வு பெறும்...
இதெல்லாம் கூடாது! சிலர் விரதம் இருக்கிறேன் என சோறு சாப்பிடாமல் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பார்கள். இது தவறான முறை. ‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கிறேன்’ என்பதும் சரியானது அல்ல. இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும். பல நோய்கள் வரக் காரணமாக அமையும். விரதம் இருக்கும் நாளில் எண்ணெயில் செய்யப்படும் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது.
காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துவிட்டு விரதத்தை முடிக்கும்போது பழச்சாறு அருந்தினாலும் பெரிய பயன் இருக்காது. மலச்சிக்கல், வயிற்றுப்புண், தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படக் கூடும்.
விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்