1 நீரிழிவைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
இனிப்பானவர்களே... இனியவர்களே!
‘‘டயாபடீஸ் வந்துவிட்டதால் மட்டுமே வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. இன்னமும் நாம் அனுபவிப்பதற்கு ஏராளமான சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அதற்காக நன்றியுடன் இருப்போம்!’’
டேல் இவான்ஸ் என்ற அமெரிக்க நடிகை கூறிய இவ்வாசகம் முழுக்க முழுக்க உண்மையானது. அதற்கு ஒட்டுமொத்த உதாரணமாகவும் அவரே வாழ்ந்தார் என்பது இன்னும் சுவாரஸ்யம். நடிகையாக மட்டுமல்ல... எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் சாதனைகள் புரிந்தவர். இவரை நாயகியாகக் கொண்ட ‘டேல் இவான்ஸ் காமிக்ஸ்’ புத்தகங்களும் புகழ்பெற்றவை. 41 திரைப்படங்களும், 4 தொலைக்காட்சித் தொடர்களும் இன்றும் டேலின் பெயர் சொல்கின்றன.
4 முறை திருமணம் செய்திருந்தாலும், ‘கிங் ஆஃப் கௌபாய்ஸ்’ என்ற புகழுக்குரிய பாடகரும் நடிகருமான ராய் ரோஜர்ஸின் 51 ஆண்டுகால ப்ரிய மனைவியாக, டேல் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து பெற்றதும் பெறாததுமாக 9 குழந்தைகளை வளர்த்தார்கள்.
நோய்வாய்ப்பட்ட குழந்தை, ‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்புக்கு உள்ளான இன்னொரு குழந்தை, வாலிப வயதை எட்டாமலே இவ்வுலகை விட்டுப் பிரிந்த குழந்தைகள் என ஏராளமான துயரங்களையும் டேல் சுமக்க வேண்டியிருந்தது. சர்ச் பஸ் விபத்தில், டேலின் தத்துக் குழந்தை இறந்துபோன அடுத்த நாளே, மற்றொரு அதிர்ச்சியாக அவரைத் தாக்கியது நீரிழிவு.
‘‘எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் டயாபடீஸ் கால்பந்து போல உதைத்துக் கொண்டே இருந்தது’’ என்று, பின்னர் ஒருமுறை வேடிக்கையாகச் சொன்னார் டேல். உண்மைதான்... அவரது அம்மா, அம்மாவின் இரு சகோதரிகள், மகன், பேரன் (14 வயதில்) என ஏகப்பட்ட பேருக்கு டயாபடீஸ்!ஒரு கட்டத்தில் அவர் மாத்திரைகளிலிருந்து இன்சுலினுக்கு மாற வேண்டி வந்தது. இப்போது இருப்பதைப் போன்ற மெல்லிய, வலியற்ற ‘இன்சுலின் பென்’ அப்போது கிடையாதே...
ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி போடுவது என்றாலே கசப்பாக இருந்திருக்கிறது டேலுக்கு. பிறகு அதுவும் கைப்பழக்கமாக, டயட்டிலும் கவனம் செலுத்தினார். சர்க்கரை மற்றும் உப்பு உபயோகத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார். அதனால்தான், அவரது 80 வயதுக்குப் பிறகும் ஃபாஸ்ட்டிங் குளுக்கோஸ் அளவை 150 160 எம்.ஜி./டி.எல். என்ற மேஜிக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது!
மூப்பு காரணமாக ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற சிக்கல்களையும் அவர் சந்தித்தார். இருப்பினும், இறுதி வரை இன்சுலின், டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை விட்டு விடவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஸ்ட்ரோக் தாக்கிய பிறகுதான், அவர் Rainbow on a Hard Trail என்ற நூலையே எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. அதன் பிறகு, 88வது வயதில் (2001), அவர் இயற்கை எய்தும் வரை நீரிழிவை வெற்றிகரமாகவே எதிர்கொண்டார்!
‘‘நீரிழிவைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் கொள்ளுங்கள்... மாத்திரைகளோ, இன்சுலினோ மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அவ்வளவுதான்!’’ இதுதான் டேல் இவான்ஸ், அவரது அனுபவத்திலிருந்து நமக்குச் சொல்லிச் சென்ற இனிப்பான வார்த்தைகள்!
எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் டயாபடீஸ் கால்பந்து போல உதைத்துக் கொண்டே இருந்தது!
ஸ்வீட் டேட்டா
2 விழிப்புணர்வே முக்கியம்!1 நீரிழிவாளர்களில் டைப்2 டயாபடீஸால் பாதிக்கப்பட்டிருப்போர் உலக அளவில் 90%
‘‘நீரிழிவு என்பது ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதுதான். நாம் சாப்பிடுகிற உணவு ரத்தத்தில் சர்க்கரையாகத்தான் (குளுக்கோஸ்) மாறுகிறது. அது செல்களுக்குச் சென்று எரிக்கப்பட்டு சக்தியாக மாறுகிறது. அது செல்களுக்கு எடுத்துச் செல்லப்பட இன்சுலின் தேவை. நம் உடலிலுள்ள கணையம் (பான்கிரியா) என்ற உறுப்பு மூலமே இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்கிறது.
இன்சுலின் இல்லையென்றால் செல்களுக்கு ரத்தத்திலிருந்து சர்க்கரை போய் சேராது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். செல்களுக்கு சக்தி கிடைக்காது. உறுப்புகளுக்கும் சக்தி இல்லாமல் பழுதடையும். இப்படியொரு இக்கட்டான இன்சுலின் குறைபாடுதான் சர்க்கரை நோயின் மூலாதாரம்!’’ என அடிப்படையிலிருந்து ஆழமாகத் தொடங்குகிறார் டயாபடாலஜிஸ்ட் மனோன்மணி.
‘‘நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. சர்க்கரை வந்தவர்களும் நோயாளிகள் அல்ல. இன்சுலின் என்னும் இயக்க நீர் குறைபாட்டால் ஏற்படும் மாற்றமே இது. ஆகவே, இதை குறைபாடு என்றே கூறுவோம்.
*இரண்டாவது வகை (டைப் 2) நீரிழிவானது, பொதுவாக 30 வயதுக்கு மேல்தான் வரும். பாரம்பரியம் ஒரு காரணம். எடை அதிகமாக இருப்பது, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அதீத மன அழுத்தம், மன அமைதியின்மை இவை எல்லாம் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்குக் காரணமாகலாம். இதற்கு ‘டயாபடீஸ் மெலிட்டஸ்’ என்று பெயர்.சாப்பிடும் முன்: 80 110 mg/dl சாப்பிட்டு, 2 மணி நேரம் கழித்து: 120 140 mg/dl இதுதான் ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பான அளவு
*நம் உடலில் இன்சுலின் என்ற இயக்க நீர் சுரக்காமல் இருந்தாலும், குறைவாக சுரப்பதாலும், அதன் வேலையை சரிவர செய்யாததினாலும் இயல்பான அளவைவிட கூடுகிறது. இதன் அறிகுறிகள்... சோர்வு, அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எடை குறைதல், மூட்டு வலி, கைகால் அசதி, அடிபட்ட காயம் ஆறாமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும் உறுப்பில் அரிப்பு, பார்வைக் கோளாறு ஆகியவை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் மருத்துவ பரிசோதனை மூலமும் டைப் 2 நீரிழிவு தெரிய வரலாம்.
*கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையானது கண், சிறுநீரகம், கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள், இதயம், மூளை மற்றும் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும். நினைவிழந்த நிலையும் ஏற்படலாம்.
*இது ஒரு தொடர் குறைபாடு. அதனால் பரிசோதனையும் தொடர் சிகிச்சையும் அவசியம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், பரிசோதனை, விழிப்புணர்வு... இவை மிகவும் அவசியம்.
* எப்போதும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
காலை உணவு : 8 - 9 மணி.
இடைவேளை : 11 மணி
மதிய உணவு : 1 - 1:30 மணி
இடைவேளை : 4 மணி
இரவு : 7 -8 மணி
* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உப்பு குறைவாக உபயோகிக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்க்கக் கூடாது. இனிப்பு வகைகள் அறவே கூடாது. விரதமும் விருந்தும் தவிர்க்க வேண்டியவை.
* காய்கறிகள்: எல்லாம் சாப்பிடலாம். கிழங்குகள் தவிர்க்கவும். கீரை வகைகள் மிக நல்லது.
பழங்கள்: ஆப்பிள், சாத்துகுடி, தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாதுளை சாப்பிடலாம்.
* சரிவிகித சம உணவு:1. பயறு, பருப்பு வகைகள், 2. தானிய வகைகள், 3. காய்கறிகள், 4. கீரை வகைகள், 5 பழங்கள், 6. கொட்டை வகைகள்.
* கசகசா, வெந்தயம், பூண்டு, சீரகம், சோம்பு, எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
* பழங்களை சாறு பிழிந்து சாப்பிடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஓட்ஸ், ராகி முதலியவற்றை கஞ்சியாக செய்யாமல் களி மாதிரி செய்து சாப்பிடவும். எண்ணெயில் பொரித்த உணவு தவிர்க்கவும்.
* உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அளவைக் குறைத்து, தேவையானவற்றை மட்டும் நேரம் தவறாமல் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுப்பாடாக இருக்கும்.
* உடற்பயிற்சி...காற்றோட்டமான பசுமையான மரங்கள் நிறைந்த இடத்தில், காலையில் 3045 நிமிடம் வேகமாக நடப்பது மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுவது நல்லது. நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது. வயது, அவரவர் ஆரோக்கிய அடிப்படையில் பயிற்சி பெற்று யோகா செய்யலாம். பொதுவாக காலையிலிருந்து சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் நல்ல உடற்பயிற்சிகளே!
* பரிசோதனைகள்...
சாப்பிடும் முன், சாப்பிட்ட பின் ஒன்றரை முதல் 2 மணி நேரத்துக்குள் ரத்த சர்க்கரை அளவு பார்க்க வேண்டும். குளுக்கோ மீட்டர் மூலம் பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவையும் அவ்வப்போது பார்க்க வேண்டும்.3 மாதத்துக்கு ஒருமுறை பிஙிகி1சி பார்க்க வேண்டும். அதில் 3 மாதத்தின் சராசரி அளவு தெரியும். அது 7 சதவிகிதத்துக்குக் கீழே இருக்க வேண்டும். சிறுநீரக பரிசோதனை (யூரியா, கிரியட்டினன்) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை, இதயம், ரத்தக்குழாய்கள், சிறுநீரகக்கல் பரிசோதனை செய்ய வேண்டும்.
* மருந்துகள்... மருத்துவர் ஆலோசனையின் பேரில் மாத்திரை (அ) இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். வெளியூர் சென்றாலும் மருந்து, மாத்திரை பெயர் விவரம் ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொள்ளவும். போகும் வழியில் சாப்பிட வழி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாழ்நிலை சர்க்கரை வர வாய்ப்புண்டு.
* மன அமைதி மிகவும் முக்கியம். சின்னச் சின்ன காரணங்களுக்கு எல்லாம் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், நம்முடைய கடமையை மனமகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் செய்ய முடியும். ஆரோக்கியமாக பிறரைப் போலவே பல ஆண்டுகள் வாழ முடியும்.நீரிழிவுக்கு விழிப்புணர்வே மிகவும் முக்கியம். இந்த குறைபாட்டை நிறைவாக்கி நலமாக வாழ்வது உங்கள் கையில்தான் உள்ளது!’’
ஒரு சாம்பிள் மெனு காலை உணவு: இட்லி (அ) தோசை 2 (அ) மூன்று. புதினா சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், சுண்டல் காய்கறி.
இடைவேளை: மோர், வெள்ளரிக்காய், எதாவது பழம்.
மதியம்: ஒன்றரை கப் கைக்குத்தல் அரிசி (அ) ஹைஃபைபர் அரிசி சாதம், சுண்டல், காய்கறி பொரியல் (அ) கூட்டு, சாம்பார், ரசம்.
இடைவேளை: காபி (அ) டீ சர்க்கரையின்றி, காய்கறி சாலட் (அ) பழம் (அ) சுண்டல்.
இரவு: இரண்டு சப்பாத்தி, காய்கறி குருமா, சுண்டல்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து பால் சாப்பிடலாம்.
(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)
தாஸ்