சுற்றுச்சூழல்
இயற்கையை புறந்தள்ளி விட்டு மனிதனின் ஆறாம் அறிவின் மூலம் விளைந்த தொழில்நுட்பங்கள் என்றைக்குமே இயற்கைக்கு விரோதமானவைதான். அதற்காக மனித வாழ்வின் அத்தியாவசிய தேவைகளோடு கலந்து விட்ட தொழில்நுட்பங்களை நாம் புறக்கணித்து விட்டு வாழ முடியாது. அவற்றுள், மனிதர்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை பகுத்துப் பார்த்து பயன்படுத்துவது அவசியம்.
நாம் பல ஆண்டுகளாக குண்டு பல்ப் என்று சொல்லக்கூடிய Incandescent Bulps மற்றும் ட்யூப் லைட்டுகளையே பயன்படுத்தி வந்தோம். புவி வெப்பமடைதல் என்னும் முக்கியமான சூழலியல் பிரச்னை மற்றும் மின் விரயத்தைக் குறைப்பதற்கென இவ்விரு பல்புகளை காட்டிலும், சி.எஃப்.எல். என்று சொல்லக்கூடிய Compact Fluorescent Lamp சிறந்தது எனும் பிரசாரம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்போதோ சி.எஃப்.எல். பல்புகளால் மனிதர்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு என்பதால் அதனை புறக்கணிக்கவும், அதற்கு மாற்றாக எல்.இ.டி. (Light Emitting Diode) பல்ப் பயன்படுத்தும்படியும் வலியுறுத்தப்படுகிறது.
சி.எஃப்.எல். பல்பால் மனிதர்களுக்கு என்ன கேடு நேரும்? சரும நல நிபுணர் ரதியிடம் கேட்டோம்.“சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் ஓசோன் போன்ற வாயு மண்டலங்களால் வடிகட்டப்படாமல் நேரடியாக தாக்கினால் தோல் நோய்கள் ஏற்படும். சி.எஃப்.எல். பல்பி லிருந்தும் அதே புற ஊதாக்கதிர்கள்தான் வெளிப்படுகின்றன. 30 செ.மீ. இடைவெளிக்குள் நாம் சி.எஃப்.எல். பல்பின் வெளிச்சத்தை வாங்கினால் அந்த புற ஊதாக்கதிர்களின் தாக்கம், நமக்கு சரும நோய்களுக்கு வழி வகுக்கும்.
சரும அலர்ஜி ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தோல், மூட்டு, சிறுநீரகம் தொடர்பான Systemic Lupus Erthematosus எனும் நோய் உள்ளவர்கள் கட்டாயம் சி.எஃப்.எல். பல்பை தவிர்ப்பது நல்லது. சிவப்பாக இருப்பவர்களுக்கு மெலனின் அளவு குறைவாக இருப்பதால் சி.எஃப்.எல். கதிர்களால் எளிதில் சருமப் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சி.எஃப்.எல்லின் ஒளிக்கற்றைகளில் Flickers அதிக அளவில் இருப்பதால் ஒற்றைத்தலைவலி ஏற்படலாம்.
சி.எஃப்.எல். பல்ப் உடைந்து விட்டால் அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். ஏனெனில், அதிலுள்ள பாதரசம் வாயுவோடு கலந்து அதை சுவாசிக்கும் போது பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
பாதுகாப்பான முறையில் உடைந்த பல்பின் துகள்களை அப்புறப்படுத்த வேண்டும். எக்காரணத்திலும் கர்ப்பிணிகளும் குழந்தைகளும் சி.எஃப்.எல். பல்பை கையாளாமல் இருப்பது நல்லது. அரிதாக சருமப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது” என்கிறார்.
சூழலியலை எந்தளவு சீர்குலைக்கிறது சி.எஃப்.எல்? விளக்குகிறார் ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன். “குண்டு பல்பை காட்டிலும் சி.எஃப்.எல். பல்ப் 5 மடங்கு குறைவாகவே மின்சாரத்தை உட்கொள்கிறது. மின்சாரத்தை சேமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ள நமக்கு, சி.எஃப்.எல். சிறந்ததொரு மின் சேமிப்பான். நீண்ட நாள் நீடித்த பயன்பாட்டையும் அளிக்கிறது. இருந்தும் இதற்காக மட்டும் நாம் இந்த பல்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனுள் 68 மில்லி கிராம் பாதரசம் இருக்கிறது.
இதனால் வெளியேறும் பாதரச வாயு வளிமண்டலத்தில் கலந்து சூழலியலை சீர்குலைக்கிறது. இதன் பயன்பாடு முடிந்த பிறகு எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கைகளுமின்றி சாதாரணமாக அப்புறப்படுத்தப்படுகிறது.
அதிலுள்ள பாதரசம் நிலம், நீர் நிலைகளில் கலந்து இயற்கை வளத்தை நாசமாக்குகிறது. இதனால் உலகின் பல நாடுகளில் சி.எஃப்.எல். பல்பை பயன்படுத்த வேண்டாம் என்கிற பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. குண்டு பல்புகளால் மின் விரயம் மற்றும் புவி வெப்பமடைகிறது. சி.எஃப்.எல். பாதரச வாயுவை வெளியிட்டு சூழலியலை சீர்குலைக்கிறது. இதற்கு மாற்று என்ன? அதுதான் எல்.இ.டி. பல்புகள்.
சி.எஃப்.எல். பல்போடு ஒப்பிடுகையில் குறைந்த மின் சக்தியில் அதிக வெளிச்சமும் குறைவான வெப்பமும் உருவாகிறது. மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் எல்.இ.டி. பல்புகளால் ஆபத்து இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அதனால், எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவது நமக்கும் நம் சுற்றுப்புறத்துக்கும் செய்யும் பேறு” என்கிறார் சுந்தரராஜன். நமக்குத் தேவை ஒளிதானே தவிர, பாதரச வாயுவோ, புவியை வெப்பமடையச் செய்யும் சூடோ அல்லவே!
சி.எஃப்.எல். பல்பிலிருந்து வெளியேறும் பாதரச வாயு வளிமண்டலத்தில் கலந்து சூழலியலை சீர்குலைக்கிறது. இதன் பயன்பாடு முடிந்து அப்புறப்படுத்தப்படும்போது, அதிலுள்ள பாதரசம் நிலம், நீர் நிலைகளில் கலந்து இயற்கை வளத்தை நாசமாக்குகிறது...சிவப்பாக இருப்பவர்களுக்கு மெலனின் அளவு குறைவாக இருப்பதால் சி.எஃப்.எல். கதிர்களால் எளிதில் தோல் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்...
கி.ச.திலீபன்
படம்: ஆர்.கோபால்