கருமுட்டை உறைய செய்தல் யாருக்கு சாதகம்?



சர்ச்சை தொழில்நுட்பம்

‘உயிரை உறையச் செய்கிற விஷயம்' எனக் கேள்விப்பட்டிருப்போம்.
இது நிஜமாகவே ‘உயிரை உறைய  வைக்கிற’ செய்தி!

ஃபேஸ்புக் நிறுவனத்தில் 69 சதவிகிதமும், ஆப்பிள் நிறுவனத்தில் 70 சதவிகிதமும் ஆண் ஊழியர்கள். மிச்சம் இருக்கிற பெண் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், இன்னும் நிறைய பெண்களை ஈர்க்கவும் இந்த இரண்டு நிறுவனங்களும் கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்திருக்கின்றன.‘குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடத் தயார்’ என்கிற பெண்களுக்கான சலுகை அது.

பெண் ஊழியர்களை தங்க முட்டை இடுகிற வாத்துகளாகவே பார்க்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், குழந்தைக்காக வேலையிலிருந்து விலகும் அவர்களை இழக்க தயாராக இல்லை.

பெண் ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்... குழந்தைப்பேற்றை காரணம் காட்டி அவர்கள் வேலையிலிருந்து விலகவும் கூடாது... என்ன வழி?

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வழி சொன்னதோடு, அதற்கு நிதி உதவியும் செய்ய முன்வந்திருக்கின்றன ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள்.தங்களது பெண் ஊழியர்கள் விருப்பப்படும்போது குழந்தை பெற்றுக் கொள்ள வழிகாட்டும் வகையில், அவர்கள் கருமுட்டைகளை உறையச் செய்கிற (Egg Freezing)   மருத்துவத் தொழில்நுட்பத்தை எடுத்துச் சொல்லி, அதற்கு 20 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பின்படி 12 லட்சங்களுக்கும் மேல்) ரூபாயை ஊக்கத் தொகையாக அறிவித்திருக்கின்றன.

‘எங்களது பெண் ஊழியர்கள், குடும்பம் என்கிற இடையூறின்றி, வேலையில் அதிக நேரத்தை சிறப்பாகச் செலவிட வேண்டுமென்பதே எங்கள் ஆசை!’ ‘குடும்பத்தைத் தொடங்குவதற்காக யாரையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதாலேயே நாங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம்!’  என்றெல்லாம் தமது சுயநலத்தை நியாயப்படுத்துகின்றன இந்த பேராசை நிறுவனங்கள்.

அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்களில் மட்டுமல்ல... இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் இந்த சுயநலச் சிந்தனை பரவி இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. குழந்தை பெறாத பெண்களுக்கு வேலையில் முன்னுரிமையையும் அளிக்கின்றன இந்நிறுவனங்கள்.

உலகளவில் பெண்களின் இனப்பெருக்க வயதும் திறனும் குறைந்து கொண்டிருக்கிற நிலையில், இந்த அறிவிப்பால் குழந்தையின்மை பிரச்னை மேலும் தீவிரமாகும். தவிர, உறைய வைக்கப்படுகிற அத்தனை கருமுட்டைகளும், கருவாகும் என்பதற்கு 100 சதவிகிதம் உத்தரவாதமுமில்லை.இந்த சிகிச்சைக்காக கொடுக்கப்படுகிற மருந்துகள், வாந்தி, தலைசுற்றல், மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். வயிற்றில் நீர்த்தேக்கம், உப்புசம், வலி போன்றவையும் ஏற்படலாம். காசுக்கு ஆசைப்பட்டு, காலம் முழுக்க குழந்தையில்லா ஏக்கத்தையும், வலியையும் சுமக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கருமுட்டை உறைதல் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன், இதன் சாதக, பாதகங்களையும் அலசி ஆராய்கிறார் மகப்பேறு மருத்துவர் லட்சுமி ஸ்ரீனிவாசன்.‘‘கருமுட்டைகளை உறையச் செய்கிற இந்தச் செயல்முறையை ஆங்கிலத்தில் Oocyte cryopreservation   அல்லது   Egg freezing என்கிறோம். 1986ல் இந்த செயல்முறையில் பிறந்த முதல் குழந்தையை அடுத்து, இந்தத் துறையில் பெரிய முன்னேற்றங்களைப் பார்க்க முடிகிறது.

குறைவான வெற்றி வாய்ப்பும், கருமுட்டைகளுக்கு ஏற்படுகிற சேதமும்தான் பெரிய பிரச்னைகளாக ஆரம்ப காலத்தில் இருந்தன. அல்ட்ரா ராபிட் ஃப்ரீசிங்   (Ultra rapid freezing)  மற்றும் இக்ஸி (ICSI) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவால், கருமுட்டைகளை வெற்றிகரமாக உறையச் செய்கிற வாய்ப்பு 90 சதவிகிதமாகவும், அந்த முட்டைகள் கருவாகும் வெற்றி வாய்ப்பு 45 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது.

இந்த செயல்முறையானது, ஆரம்ப காலத்தில், புற்றுநோய் உள்ள பெண்களுக்கும், குடும்பப் பின்னணியில் தாய்வழியில் யாருக்கேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் பலர் இன்று புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் கீமோதெரபியும், ரேடியேஷனும் தவிர்க்க முடியாதவை. இதனால் அவர்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் அழிந்து போகும் அபாயம் அதிகம்.

தவிர, இயற்கையாக கருமுட்டை உருவாவதிலும் அவர்களுக்கு சிரமம் இருக்கும். புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதுமே அவர்களது கருமுட்டைகளை சேகரித்து, பத்திரப்படுத்தி வைக்கலாம். புற்றுநோய் சிகிச்சை முடிந்ததும், சேகரித்து வைத்துள்ள கருமுட்டைகளைப் பயன்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் தெரிந்ததும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், பிரபலங்களும்கூட இம்முறையில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட ஆரம்பித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் வேலை, லட்சியத்தை அடைகிற ஓட்டம் போன்ற காரணங்களால் பெண்கள், 30 முதல் 40 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போட நினைக்கிறார்கள். கருமுட்டையை உறையச் செய்கிற செயல்முறையின் மூலம் இத்தகைய பெண்கள், தங்களது உயிரியல் கடிகாரத்தையே தம் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.

ஒவ்வொரு பெண்ணும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகளுடன்தான் பிறப்பாள். அவளது 30 வயதில் அந்த முட்டைகளில் 80 சதவிகிதம் குறைந்திருக்கும். 40 வயதில் அவளிடம் வெறும் 3 சதவிகித முட்டை இருப்புதான் மிஞ்சும்.

கருத்தரிக்கிற வாய்ப்பானது ஒவ்வொரு மாதமும் சிறுகச் சிறுக குறைந்து கொண்டே வருவதுடன், 35 வயதுக்குப் பிறகு கருமுட்டைகளின் தரமும் குறையத் தொடங்கும். இதன் விளைவால் தாமதமாகக் குழந்தை உண்டாகும்போது, கருக்கலையவும் டவுன் சிண்ட்ரோம் மாதிரியான மரபணுக் கோளாறுகளுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

கருமுட்டையை உறையச் செய்ய, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதிகளவில் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு, முட்டை உற்பத்தியானது தூண்டப்படும்.  அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அட்மிட் செய்து, மயக்க மருந்து கொடுத்து, உருவான அந்த முட்டைகள் சேகரிக்கப்படும். அந்த முட்டைகள் எதிர்காலத் தேவைக்காக நைட்ரஜன் திரவக் கலவையில் உறைய வைக்கப்படும். இந்த மொத்த செயல்களுக்கும் 2 முதல் 3 லட்ச ரூபாயும், முட்டைகளை உறையச் செய்ய வருடத்துக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாயும் செலவாகும்.

கருமுட்டைகளை உறையச் செய்கிற சிகிச்சையில் உண்டாகிற பாதகங்களை சம்பந்தப்பட்ட பெண்கள் உணர வேண்டும். அதிகளவிலான ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுவதன் விளைவாக அவர்களது சினைப்பை தற்காலிகமாக வீங்கி, வலியுடன் காணப்படும். ஓ.ஹெச்.எஸ்.எஸ்  (Ovarian hyperstimulation syndrome)    எனப்படுகிற பாதிப்பும் வரலாம்.

தற்கால நிர்ப்பந்தங்களுக்காக குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட நினைத்து, கருமுட்டையை உறையச் செய்யத் துணிந்தாலும், குழந்தை வேண்டும் என நினைக்கிறபோது, இவர்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு சாத்தியமாகாது. ஏ.ஆர்.டி ( ART) எனப்படுகிற செயற்கை கருத்தரிப்பு முறையைத்தான் நாட வேண்டும்.

வயதான பிறகு கருத்தரிக்கும் பெண்களுக்கு, அந்த வயதுக்கே உரித்தான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியாது. சேகரிக்கப்பட்ட முட்டைகள் வேண்டுமானால் இளமையுடன் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் அணுக்களின் கூடுதல் வயது காரணமாக, பிறக்கும் குழந்தை ஆட்டிசம் மற்றும் சில மனநலக் கோளாறுகளுடன் பிறக்க வழி வகுக்கலாம்.

இவையெல்லாம் போக, தாமதமாகக் குழந்தை பெறுகிற பெண்கள் சந்திக்கிற தலைமுறை இடைவெளிப் பிரச்னையையும் இவர்கள் சந்தித்தாக வேண்டும். பெரும்பாலும் இந்தப் பெண்கள் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்வார்கள். ஒற்றைக் குழந்தையாக வளரும் பிள்ளைகள் சந்திக்கிற உளவியல் பிரச்னைகள் எல்லோரும் அறிந்ததே. அம்மா மாதிரி காட்சியளிக்க வேண்டிய பெண், பெற்ற குழந்தைக்கு பாட்டி மாதிரித் தோற்றமளிப்பது இவை எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை.

கருமுட்டை உறைதல் தொழில்நுட்பம் மூலம் தாமதமாக குழந்தை பெறுவதில் சில பாதகங்களும் உண்டு.வயதான அம்மாக்கள் வேலையில் கட்டளையிடுகிற பொறுப்பான பதவிகளையும் அதற்கேற்ற ஊதியத்தையும் கேட்டுப் பெற முடியும். உயர்ந்த பதவியில் இருப்பதால் சிறந்த மருத்துவப் பராமரிப்பைப் பெறக் கூடும்.

இளவயது அம்மாக்களைவிட, 40 வயதில் குழந்தை பெறுகிற பெண்கள் நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வாய்மொழித் திறமை  மற்றும் அறிவுசார் விஷயங்களில் அதிக புத்திசாலிகளாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட சில நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தச் சலுகைகள், பொருளாதார ரீதியாக பெண்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். தாய்மை என்கிற விஷயத்துக்காக திறமையான பெண்கள் வேலையை விட்டுச் செல்வதாக நினைக்கிற நிறுவனங்களுக்கு, தாய்மைப் பேற்றைத் தள்ளிப் போடச் செய்கிற இந்த விஞ்ஞானம் நிச்சயம் சரியான தீர்வு அல்ல.

ஆனாலும், இந்தத் தீர்வை நிறுவனங்கள், தமது பெண் ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பாக அறிவிக்கலாமே தவிர கட்டாயமாக்கக் கூடாது. நிதி உதவி அறிவிப்புகள், சம்பந்தப்பட்ட பெண்ணை விருப்பத்துக்கு மீறி இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தூண்டலாம்.

பெண்ணின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற நிறுவனங்கள், குழந்தைப் பேற்றைக் காரணம் காட்டி அதைத் தள்ளிப் போடச் செய்வதற்குப் பதில், அவளது வேலை நேரத்தை வசதியாக மாற்றிக் கொடுக்கலாம்.

இந்த வயதில்தான் குழந்தை பெற வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான, எழுதப்படாத சட்டங்களுக்குள் சிக்காமல், தனக்கு விருப்பமான, தனக்கு சரியெனப்படுகிறபோது குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிற படித்த, பொறுப்பான பெண்களுக்கு இந்தச் சலுகையும், தொழில்நுட்பமும் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

தன் குடும்ப, சமுதாய சூழல்களுக்கேற்ப, கருவைச் சுமப்பதா, தள்ளிப் போடுவதா என்பதை முடிவு செய்வதும், அதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும், தன் மீது சுமத்தப்படுகிற சுமைகளுக்கு பலியாகாமல் தன்னைக் காத்துக் கொள்வதும் ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பமும் உரிமையும்... பொறுப்பான மருத்துவராகவும், மனுஷியாகவும் சொல்கிறார் லட்சுமி.

குழந்தைப் பேறு என்பது அதைச் சுமக்கப் போகிற பெண்ணின் உரிமை. அதில் தலையிட கணவனுக்குக் கூட உரிமையில்லை என வாதம் செய்கிற பெண்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சிக்கு விலை போகலாமா?

மருத்துவ நிறுவனங்களின் சூழ்ச்சி கருமுட்டைகளை உறைய வைத்துப் பாதுகாக்கிற நிறுவனங்களின் மாபெரும் சூழ்ச்சியும் இதன் பின்னணியில் பெரும் பங்கை வகிப்பது தெரிகிறது. ஒருமுறை கருமுட்டை உறைவுக்கு கிட்டத்தட்ட 3  லட்சம்... பிறகு வருட வாடகை... மருந்துகளுக்கான செலவு... ஹார்மோன் ஊசிகளின் தாக்கம் ஏற்படுத்திய பிரச்னைகளை சமாளிக்க தனியே மருத்துவச் செலவு... என பட்ஜெட் எங்கேயோ போய் நிற்கும்.

கருமுட்டை உறைதலைப் பரிந்துரைத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிற மருத்துவர்களுக்கு ஸ்பெஷல் கமிஷன், கவனிப்பு எல்லாம் உண்டு. குழந்தை வேண்டும் என விரும்பும் போது, மறுபடி செயற்கை முறை கருத்தரிப்பு, அதற்கான மருத்துவச் செலவுகள்... இத்தனைக்குப் பிறகும் உறைய வைத்த முட்டை உயிர் பெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!கருத்தரிக்கிற வாய்ப்பானது ஒவ்வொரு மாதமும் சிறுகச் சிறுக குறைந்து கொண்டே வருவதுடன் 35 வயதுக்குப் பிறகு கருமுட்டைகளின் தரமும் குறையத் தொடங்கும்...

எப்படி நடக்கிறது கருமுட்டை உறைதல்?

*கருமுட்டைகளை உறையச் செய்வதென முடிவெடுத்துவிட்ட பெண்ணுக்கு, முதலில் அதன் சாதக, பாதகங்களையும், கருமுட்டைகளை உறையச் செய்வதன் பின்னணியில் உள்ள அறிவியலையும் மருத்துவர் விளக்குவார்.

*ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுக்கான சோதனைகள் செய்யப்படும்.

*கருமுட்டைகளை உறையச் செய்கிற உங்கள் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.

*முட்டைப் பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் சோதிக்கப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு  ஐ.வி.எஃப் மருந்துகள் கொடுக்கப்படும். இது சினைப்பையைத் தூண்டி, முட்டை வளர்ச்சியையும் தூண்டும்.

*அதன் பிறகு ஒரு ஹார்மோன் மருந்து கொடுக்கப்பட்டு, கருமுட்டைகள் வெளியே எடுக்கப்படும். இந்த முறையில் 10 முதல் 12 முட்டைகள் எடுக்கப்படும்.

*அந்த முட்டைகள் திரவ நைட்ரஜனில் 196 டிகிரி சென்டிகிரேடில் உறைய வைக்கப்படும். 10 வருடங்கள் வரை இப்படிப் பத்திரப்படுத்தலாம் என்கிறார்கள்.

*சம்பந்தப்பட்ட பெண் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராகும் போது, உறைய வைக்கப்பட்டுள்ள முட்டைகள் எடுக்கப்பட்டு, உறைநிலை போனதும், விந்தணுவுடன் சேர்த்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.

இந்த சிகிச்சை யாருக்கெல்லாம் பயன்படும்?

* வாத நோய்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்கிற பெண்களுக்கு.

* திருமணமாகாமல் தனித்து வாழ்கிற பெண்களுக்கு அல்லது ஸ்திரமற்ற திருமண உறவினால், குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட நினைப்பவர்களுக்கு.

* மரபு ரீதியாகத் தாக்கும் Turner’s or fragile X syndrome   நோய்கள் உள்ளவர்களுக்கு. இவர்களுக்கு சினைப் பையில் முட்டைகளின் இருப்பு ஆரம்பத்திலிருந்தே
குறைவாகத்தான் இருக்கும்.

* சினைப்பையில் எண்டோமெட்ரியாசிஸ் என்கிற பிரச்னையோ, கட்டிகளோ உள்ளவர்களுக்கு.

* கருவை உறையச் செய்கிற ‘Embryo freezing’ என்கிற தொழில்நுட்பத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிற பெண்களுக்கு... அதாவது, தேவைக்கதிகமாக உறைய வைக்கப்படுகிற கருக்களை வீணாக்குவது என்பது சில மதங்களில் கருக்கலைப்புக்கு சமமாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு கருமுட்டை உறைதல் (Egg freezing) என்பது சரியான மாற்றாக இருக்கும்.

 மனஸ்வினி