பெரியவர்களுக்கும் உண்டு தடுப்பூசி!



வருமுன் தடுப்போம்

தடுப்பூசி என்பது பிறந்த குழந்தைகளுக்கானது என்பதும்,  மருத்துவர் கொடுக்கும் அட்டவணைப்படி, குறிப்பிட்ட இடைவேளைகளில் குறிப்பிட்ட வயது வரை போடப்படுபவை என்பதும் பரவலான நம்பிக்கை. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் அவசியம் என்கிறார் பொது மருத்துவர்  ராமநாதன் ராம்குமார். ‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளால் மாதம் ஒரு புதிய நோய் அறிமுகமாகும் இன்றைய சூழலில் வயது பாகுபாடில்லாமல் பெரியவர்களும் தக்க நேரத்தில் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் அவர்.

‘‘குறிப்பிட்ட நோய் வராமல் தடுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் தடுப்பு மருந்துதான் தடுப்பூசி. இதை ஊசி மூலமோ, வாய்வழி (Oral vaccination)  மருந்தாகவோ எடுக்கலாம். குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன வாக்ஸின்கள் தர வேண்டும் என்று அட்டவணையே உண்டு. பெரியவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை.

ஒரு நோய் வர வாய்ப்புண்டு என்றால், அதற்கு முன்பே தடுப்பு வாக்ஸினை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த பாக்டீரியா அல்லது வைரஸ் அந்த நோயை ஏற்படுத்துமோ, அவை பலமுறை செல்வளர்ப்பு செய்யப்பட்டு வாக்ஸினாக மாற்றப்படும். இதை செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தி உருவாகி, குறிப்பிட்ட நோய் வராமல் செய்துவிடும். பெரியவர்களுக்கான தடுப்பூசிகள்...

*ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று வராமல் தடுக்கும், ஹெபடைடிஸ் பி வாக்ஸினை குழந்தைப் பருவத்திலேயே இப்போது கொடுத்துவிடுகிறோம். சிறு வயதில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள், இப்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*நிமோகாக்கல் வாக்ஸினை எடுத்துக்கொள்வதன் மூலம் நிமோனியாவை தடுக்கலாம். நுரையீரல் நோய்த்தொற்று உள்ளவர்கள், இதயநோய், கல்லீரல் நோய், நீரிழிவு உள்ளவர்களுக்கு இது அவசியம்.

*கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ‘ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ்’ வாக்ஸினை 18 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

*இன்ஃப்ளுயன்சா வைரஸ் வாக்ஸினை ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் ஃப்ளு காய்ச்சலை தடுக்கலாம்.

*எம்எம்ஆர் (Measles, mumps, rubella) வாக்ஸின் மற்றும் சிக்கன் பாக்ஸ் வாக்ஸினை குழந்தைப் பருவத்தில் எடுக்காதவர்கள், அம்மை நோய் தாக்காதவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் வரும் காலத்தில் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

*ஜோஸ்டர் வாக்ஸினை 65 வயதை தாண்டியவர்கள் எடுத்துக்கொண்டால் அக்கி நோய் (Herpes zoster) வராமல் தப்பிக்கலாம்.

*மண்ணீரலை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள், அதற்கு முன் நிமோகாக்கல், மெனிஞ்சோகாக்கல்,  ஹச்.இன்ஃப்ளுயன்சா என 3 வகை வாக்ஸின்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*டைபாய்டு வாக்ஸினை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வதன் மூலம், டைபாய்டு காய்ச்சல் வராமல் தப்பிக்கலாம்.

*ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் யெல்லோ ஃபீவர் வாக்ஸின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*மெனிஞ்சோகாக்கல் வாக்ஸின் எடுத்துக்கொண்டால் மூளைக்காய்ச்சல் தாக்காது.

விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்