நியூஸ் கார்னர்செய்தித் தொகுப்பு

RBI உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு ஒத்திவைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த மார்ச்
3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு எழுத உள்ளனர். கடந்த மார்ச் 29-ம் தேதி RBI Assistant Main Exam நடைபெற இருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, ரிசர்வ் வங்கி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org.in பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,‘கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 29-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு எழுதுவோர், இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நன்றாக படித்து தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.

நியூசிலாந்து அரசு வழங்கும் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்!

இந்தியா போன்று வளர்ந்து வரும் காமன்வெல்த் நாடுகளில் உள்ள சிறந்த மாணவர்களுக்கு, நியூசிலாந்து அரசின் வெளியுறவு விவகாரம் மற்றும் வணிகத் துறை சார்பில் நியூசிலாந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது. 2020-ம் கல்வியாண்டுக்கான ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவு, திறமை மற்றும் தகுதிகளைக் கொண்டு, வளரும் நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களில் பங்குபெற விரும்புபவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

துறைகள்: கிளைமேட் சேஞ்ச், கிளைமேட் சேஞ்ச் சயின்ஸ், ரூரல் டெவெலப்மென்ட், வாட்டர் மேனேஜ்மென்ட், நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், டிசாஸ்ட்டர் மேனெஜ்மென்ட், எமர்ஜென்சி மேனெஜ்மென்ட், ஜியோலஜி, ஜியோடெக்னிக்கல் எஞ்சினியரிங், அக்ரிகல்ச்சுரல் டெக்னாலஜி, அக்ரி பிசினஸ், அக்ரிகாமர்ஸ், அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ், பயோசெக்யூரிட்டி, பார்ம் மேனெஜ்மென்ட், ஹார்ட்டிகல்ச்சர், ஃபுட் டெக்னாலஜி, சப்ளை சயின்ஸ் மேனெஜ்மென்ட், சோலார், ஹைட்ரோ-எலக்ட்ரிக் அண்டு விண்ட் எனர்ஜி, எனர்ஜி எஞ்சினியரிங், ரினீவபில் எனர்ஜி, டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம்ஸ், எனர்ஜி எக்கனாமிக்ஸ், எனர்ஜி எபீசியன்சி, எனர்ஜி செக்டார் ரிஃபார்ம்ஸ் அண்டு மேனெஜ்மென்ட், கவர்னன்ஸ், பப்ளிக் செக்டார் ஆடிட்டிங், பப்ளிக் பினான்சியல் மேனெஜ்மென்ட், பப்ளிக் மேனெஜ்மென்ட், பப்ளிக் பாலிசி மற்றும் ஸ்டேடிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

தகுதிகள்: இந்திய குடிமகனாக இருப்பதோடு, விண்ணப்பிக்கும் படிப்பிற்கு ஏற்ப உரிய கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழ். பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உதவித்தொகை பெற http://proposal.sakshat.ac.in/scholarship   எனும் இந்தியாவின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக இணையதளம் வாயிலாக இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.4.2020.
மேலும் விவரங்களுக்கு https://mhrd.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

தேதி அறிவிக்காமல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27.3.2020 முதல் 13.4. 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், ‘அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27.3.2020 முதல் 13.4.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்தவிவரம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள விவரத்தினை, அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும், அனைவரும் அறியும்வண்ணம் ஒட்டிவைக்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பத்தாம் வகுப்பு வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விவரத்தினை தெரிவித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.