அன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: கோட்வேல்யூ டெக்னாலஜி உரிமையாளர்வெற்றிக்கதை

நம் நாட்டின் இன்றைய ஐ.டி. வளர்ச்சியை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் 1990-லேயே அடைந்தன. என்ன, அவர்களுக்கு ஆள்பற்றாக்குறை. எனவே, அறிவுத்திறன் சார்ந்த இந்தியர்களை குறிப்பாக தென்னிந்தியர்களை அதிலும் மதராஸிகளை வளைத்துப்போட்டனர். ஒரு கட்டத்தில் விசா உள்ளிட்ட பிரச்னைகளால் இவர்களை இங்கு வரவழைத்து இருப்பிட வசதி செய்துகொடுத்து லட்சக்கணக்கில் டாலர் சம்பளம் அளிப்பதற்குப் பதில் மாற்றுத்தீர்வு யோசித்தனர்.

எனவே, வளரும் நாடான இந்தியாவை உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் கட்டபாயப்படுத்தி நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) அமைக்க இந்திய அரசை நிர்பந்தித்தனர். அடிபணிந்த அரசு வேறுவழியின்றி நாடு முழுவதும் ஆங்காங்கே ஆயிரம் ஏக்கர் பரப்பில் SEZ அமைத்தது. இதற்காக வெளிநாட்டு கம்பெனிகளுக்க மின்சாரம் தண்ணீர் இலவசம், வரி செலுத்த வேண்டாம் என்றெல்லாம் ரத்தின கம்பளம் விரித்தது.

பிறகென்ன? மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிசென்ட் என ஐ,டி. ஜாம்பவான்கள் வரிந்துகட்டி கோதாவில் குதித்து முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் அடுக்குமாடி ஐ.டி. நிறுவனங்களை உருவாக்கினர்.

இந்த நிறுவனங்களில் ஐ.டி. முடித்த அடுத்த நொடியில் மாதம் ஐம்பதாயிரம், லட்சம் என்றெல்லாம் கொட்டிக்கொடுத்தனர். உடன் படித்தவன்(ள்) ராஜா, ராணி மாதிரி ஏசி பஸ்சில் வேலைக்கு போகிறார்கள் என ஏக்கம்விட்டவர்கள் ஏகப்பட்டபேர். இந்த மாயாஜாலம் சில ஆண்டுகள் தான் நீடித்தது. உலகப் பொருளாதார வீழ்ச்சியில் அரைகுறை சம்பளம் அதிலும் மாதக்கணக்கில் பாக்கி இஎம்ஐ எப்படிக் கட்டுவேன் என்பதே பெரும்பாலான ஐ.டி. ஊழியர்களின் இன்றைய பரிதாப நிலை.

இந்தச் சிக்கலில் சிக்காமல் தப்பித்து ஐ.டி. துறையில் சுயதொழில் தொடங்கி இன்று வெளிநாட்டு நிறுவனங்களின் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சேவையாளர் ஆகியுள்ளவர்தான் முத்துகுமார். அவரது வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘சிவகங்கைச் சீமை காரைக்குடி அடுத்த கண்ட்ற மாணிக்கம் கிராமம்தான் எனது ெசாந்த ஊர். குடும்பச்சூழலால் திருப்பூரில் அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தேன். பொதுவாக அப்போது கம்ப்யூட்டர் அறிமுகமான புதுசு. எட்டாவது படிக்கும்போதே கம்ப்யூட்டரில் சாதிக்க வேண்டும் என மனதுக்குள் நினைப்பு ஓடியது. பிளஸ்2 முடித்தவுடன் டிபேஸ், பாக்ஸ்ப்ரோ போன்ற சாஃப்ட்வேர் மூன்று மாதப் படிப்பு சான்று இருந்தால் டேட்டா என்ட்ரி வேலை கிடைக்கும் என்பதால் அதை முடித்தேன்.

கூடவே ஒரு சிறிய நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணியும் செய்து வந்தேன். அன்றைய காலத்தில் கம்ப்யூட்டரில் பெரிதாகப் படிக்க வேண்டுமென்றால் என்ஐஐடி, அப்டெக், கம்ப்யூட்ர் பாயின்ட் போன்ற மென்பொருள் பயிற்சி நிறுவனங்களில் படிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் வசதி இல்லை. எனவே, அப்டெக் நிறுவனத்தில் ஹையர் டிப்ளமோ இன் சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவு செய்து கோர்ஸ் முடித்தேன். அதன்பிறகு வீடியோகான் நிறுவனத்தின் நெக்ஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ரீடெய்ல் சங்கிலித்தொடர் கடையின் சென்னை கிளையில் கம்ப்யூட்டர் மென்பொருள் நிர்வகிக்கும் பிரிவில் வேலை கிடைத்தது.

அங்கு ஓரிரு ஆண்டுகள் பணி செய்தபின் தலைமை அலுவலம் அமைந்துள்ள மும்பைக்கு மாற்றினர். இதற்கு காரணம் எஸ்ஏபி (SAP) டெவலப்பிங் துறையில் எனது அளவுகடந்த ஈடுபாடுதான். மும்பையில் நெக்ஸ்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலாக்க திறன்களில் எனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினேன். நிறுவனம் என்னை வெகுவாக ஊக்குவித்தது. இதற்கிடையில் எனக்கு திருமணம் நடைபெற்றது. சென்னை மதுரவாயலில் சொந்த வீடு வாங்கினேன். பிறகு சென்னை வாசம்.

அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு இஆர்பி மென்பொருள் பிரிவில் ஆட்கள் தேவை என கோயம்புத்தூர் அட்னா நிறுவனம் அழைத்திருந்ததைப் பார்த்து அங்கு பணியில் சேர்ந்தேன். அட்னா மூலமாக முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம். ஆக 2004-ல் தொடங்கிய எனது கம்ப்யூட்டர் பணி 2014 வரை நீடித்தது. அப்போதுதான் சொந்தமாக தொழில் செய்வது எனத் தீர்மானித்து வேலையை விட்டுவிட்டு எனது மதுரவாயல் வீட்டில் சென்னையில் கோட்வேல்யூ டெக்னாலஜீஸ் எனும் நிறுவனத்தை ஒன்றை ஆளாக தொடங்கினேன்.

இந்தக் காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சி எடுத்திருந்தும் திறமையான மென்பொருள் சேவைக் கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தது. ஏற்கனவே வெளிநாட்டுத் தொடர்பு இருந்ததால் எனது நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் மென்பொருள் சேவை மற்றும் ஆலோசனை வழங்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஏறக்குறைய உலகின் முக்கிய நாடுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இஆர்பி எனும் தொழில்நுட்ப சேவையை வழங்கும் நிறுவனங்களில் கோட்வேல்யூ டெக்னாலஜீஸ் பங்களிப்பு தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது.

ஏஎக்ஸ், டி365, என்ஏவி, சிஆர்எம் போன்ற கடினமான மென்பிரிவுகளில் நுட்பமான ஆலோசனைகள் வழங்கும் சிறப்பான நிறுவனம் என கோட்வேல்யூ பெயரெடுத்தது. இதன்மத்தியில் இத்தனை சேவைகளும் தனிமனிதனாக அல்லும்பகலும் உழைத்தாலும் நிறைவேற்ற முடியாது என்பதால் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகே இருபத்தைந்து பேர் வசதியாக பணிபுரியும் வகையில் நிறுவனத்தை மாற்றினேன். இன்று அந்த நிறுவனத்தில் மேலும் பலரும் பயிற்சியாளர்களாக சேர்ந்து வளம் கண்டு வருகின்றனர்.

இதேகாலகட்டத்தில் செல்போன் செயலிகளும் அதிக அளவில் உருவானதையடுத்து அதிலும் கவனம் செலுத்தினோம். மேலும், சிறு சிறு நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது பொருட்கள் இருப்பு (Stock) பராமரித்தல் போன்ற மென்பொருட்களையும் உருவாக்கினோம். இவை எல்லாமே வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குத்தான் கடந்த ஆண்டு இறுதிவரை செய்து வந்தோம். இந்த ஆண்டு முதல் இந்திய சந்தையில் தடம்பதித்துள்ளோம். ஒரு திறமையான வழிகாட்டி எனக்கு அமையாததால் பதினாறு ஆண்டுகள் கழித்து ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. இது சுயம்புவாக நானே உருவான விதம்.

எனக்கும் வழிகாட்டி அமைந்திருந்தால் இந்த நிறுவனம் இன்று பலமடங்கு விரிவடைந்திருக்கும். எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நூறு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நிறுவனத்தை பெரிதாக்குவது தனி மனிதனாக ஐ.டி. துறையில் எனது மிகப் பெரிய இலக்கு. இதுமட்டுமின்றி தமிழகத்தில் ஐ.டி. அல்லாத டிகிரி முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் 6 மாதங்கள் எனது நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.

இதற்காக சொற்ப கட்டணம் வசூலித்தாலும் அடுத்த மூன்றாண்டுகளில் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறோம். அப்படியிருந்தும் அவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வரை சம்பளம் கிடைக்கவும் வழிவகை செய்கிறோம்். மூன்றாண்டு முடிந்த பின்னர் ஐ.பி.எம்., டிசிஎஸ், காக்னிசென்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களில் என்னிடம் பயிற்சி பெற்ற ஏராளமானபேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா மிரட்டலுக்காக தடை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒர்க் ப்ரம் ஹோம் கான்செப்ட் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வீட்டிலிருந்தே வேலை வாங்கி வருகின்றன. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு அவர்களது கம்ப்யூட்டரை நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வெளிநாட்டு உள்நாட்டு கஸ்டமர்களுடன் இணைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கான செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வருவதால் அந்த செயலியை இங்கு தேவைப்படுவோருக்கு அமல்படுத்தி வருவதில் கோட்வேல்யூ டெக்னாலஜீஸ் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

கோட்வேல்யூ டெக்னாலஜியின் முக்கிய குறிக்ேகாள் ஒரு நிறுவனத்தை தொழில்நுட்ப ரீதியில் வெற்றிகரமாக உருவாக்குவதே ஆகும். ஒரு நிறுவனத்திற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதுதான் எங்களது முக்கிய சேவை. நிறுவனங்கள் சாதிக்கக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகளை செதுக்குவதே எங்களின் தனித்திறமை.

எனவே, நாங்கள் எந்த ஒரு நிறுவனத்துக்குமான வியாபாரிகள் என்றோ, சேவை புரிபவர்கள் என்றோ குறுகிய வட்டத்தில் முடிங்கியிருக்க விரும்பவில்லை. ஒரு நிறுவனத்தின் அசூர வளர்ச்சிக்கான அத்தனை சாத்தியங்களைுயம் அக்குவேறு ஆணிவேறாக அலசி உரிய தீர்வை வழங்குவதுதான்கோட்வேல்யூ டெக்னாலஜீஸ். நீர் உயர, நிலம் உயர எனும் சொலவடைப்போல் ஒரு நிறுவனம் எங்களால் வளரும்போது நாங்களும் வளர்ச்சி அடைகிறோம் என்பதே நிதர்சனம்’’ என்றார் தொழில்முனைவோர் முத்துகுமார்.

- தோ.திருத்துவராஜ்.