கைத்தறி தொழில்நுட்பப் படிப்புகளும் கல்வி நிறுவனங்களும்..!



வழிகாட்டல்

இந்தியாவின் மரபார்ந்த கைத்தறி துணிகளுக்கு இன்றளவும் உலக சந்தையில்  பெரும் வரவேற்பு உள்ளது. வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனி மிளகு ஏலக்காய் போன்ற உணவுப் பொருட்களுக்கு அடுத்தபடியாக பட்டு, மஸ்லின், காலிகோ போன்ற இந்திய துணி வகைகளைத்தான் அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதனால்தான் இந்தியாவின் அதிக வேலைவாய்ப்பு தரும் துறையாகவும், விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதரம் வழங்கும் துறையாகவும் கைத்தறி தொழில்துறை (Handloom industry) கருதப்படுகிறது.

இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் என்பதால் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது கைத்தறி தொழில்துறை. சுமார் 35 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால் இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கும் இரண்டாவது முக்கிய துறையாகவும் இத்துறை கருதப் படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 1,90 லட்சம் நெசவு குடும்பங்கள் இருப்பதோடு, இத்தொழில் 3,19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உபதொழில்புரிவோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது.

2017-18ஆம் ஆண்டின் ஆய்வின்படி சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் 39.2 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலும்,  காட்டன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலும் சீனாவிற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்திய ஜவுளி துறை. அதுமட்டுமில்லாமல் மொத்த உலக பட்டு உற்பத்தியில் 18% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆடை வடிவமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தும் இன்றைய நவீன தலைமுறையினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் துறையாக விளங்குகிறது கைத்தறித்துறை. இத்தகைய சிறப்பு மிக்க கைத்தறி துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப கைத்தறித் துறை வல்லுநர்களின் தேவை அதிகமாக வாய்ப்புள்ளது.

அத்தகைய தொழில் வல்லுநர்களை உருவாக்கவே நவீன கைத்தறி தொழில்நுட்ப படிப்புகளை உருவாக்கப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அத்தகைய படிப்புகளை வழங்கி வருகிறது. கைத்தறி தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வி படிப்புகளான மூன்று வருட டிப்ளோமா படிப்புகள், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

கைத்தறி துணிகளின் சிறப்பையும், தனித்தன்மையையும், அதற்கு உலக அளவில் இருக்கும் வரவேற்பையும் கருத்தில் கொண்டு கைத்தறி தொழில்துறையை நவீன படுத்துவதற்கும், தொழில்நுட்பரீதியில் பலப்படுத்துவதற்கும் 1957ம் ஆண்டு அகில இந்திய கைத்தறி போர்டை உருவாக்கியது இந்திய அரசு. மேலும் கைத்தறி தொழில்துறையை மேம்படுத்துவதற்காக பருத்தி, கைவினை, விசைத்தறி முதலான ஐந்துவகை போர்டை உருவாக்கியது இந்திய ஜவுளி அமைச்சகம்.

இவற்றின் பரிந்துரைகளின்படி வட இந்தியாவில் வாரணாசியிலும் தென்னிந்தியாவில் சேலத்திலும் என கைத்தறி தொழில்நுட்ப கல்விநிறுவனம் (The Indian Institute of Handloom Technology) 1960ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பத்து கல்விநிறுவனங்கள் தற்போது உள்ளன.

அவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆறு கல்வி நிறுவனங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நான்கு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, தமிழ்நாட்டில் சேலம், அஸ்ஸாமில் கவுஹாத்தி, ராஜஸ்தானில் ஜோத்பூர், ஒடிசாவில் பாரகார்ஹ், மேற்குவங்கத்தில் ஃபுலியா-சண்டிப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.

மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் ஆந்திராவில் வெங்கடகிரி, கர்நாடகாவில் கட்டாக், சதிஸ்கரில் சம்பா, கேரளாவில் கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ளன.

*சேலத்தில் வழங்கப்படும் படிப்புகள்
*B.Tech - Handloom & textile Technology (4 Yrs)
*Post Diploma in Textile Processing
*Diploma - Handloom & Textile Technology (3 yrs)
*Handloom Entrepreneur (Certificate Course)
* கேரளாவில் வழங்கப்படும் படிப்புகள்
*Clothing and Fashion Technology (CFT)
*Computer Aided Fashion Designing (CAFD)
*Computer Aided Textile Designing (CATD)
*Diploma in Handloom and Textile Technology (DHTT)
*Pattern Cutting Master Course (PCMC)
*Post Diploma in Home Textile Management (PDHTM)
*வாரணாசியில் வழங்கப்படும் படிப்புகள்
*Diploma in Handloom & Textile Technology (3 yrs)
*Post Diploma in Textile Processing  (18 months)

ஆந்திரா, கவுகாத்தி, ஜோத்பூர், கர்நாடக என அனைத்து கல்விநிறுவனங்களிலும் மூன்று வருட படிப்பான டிப்ளோமா இன் ஹேண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் வாரணாசி மற்றும் சேலம் நிறுவனங்கள் 18 மாத கால அளவிலான போஸ்ட் டிப்ளோமா இன் ஹோம் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்குகிறது. வித்தியாசமான துறையை தேர்வு செய்து படித்து சாதிக்க விரும்புவோருக்கு கைத்தறி தொழில்நுட்ப படிப்பு நிச்சயம் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.

- வெங்கட்