புருவ அசைவுகள்கூட உங்கள் குணத்தை வெளிப்படுத்தும்!



உடல்மொழி-31

நடை உடை பாவனை

நடைமொழி

  Your clothes should be as important as your skin  
- Amit Kalantri

கண்கள் ஆன்மாவின் ஜன்னல். மனதில் உதிக்கும் எண்ணங்கள் முகபாவனைகளாக மாறி கண்களின் வழியே பிரதிபலிக்கின்றன. கண்களைக் கொண்டுதான் எல்லோரும் உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருடைய பார்வை அடுத்தவருடைய கண்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்போதுதான், பேச்சு தொடங்குகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருடைய பேச்சு மொழியும் கண் பார்வையிலிருந்தே  தொடங்குகிறது.

உடல் வெளிப்படுத்தும் மொழியையே உடல்மொழி என்கிறோம். ஆனால் கண்களும் மற்ற முக பாவனைகளும் (குறிப்பாக முகம் சார்ந்தவை) உடல்மொழி பட்டியலில் சேராது என்று சிலர் சொல்வார்கள். முகத்தை ஒரு தனிப் பிரிவாக (Face Langauage) முக மொழியாக, பிரித்து வைத்திருப்பதுதான் காரணம். மருத்துவத் துறையில் Ophthalmology, Dental என்று தனித்தனி துறைகளாக பிரித்து வைத்திருப்பதைப் போலவே உடல்மொழியையும் பிரித்து வைத்திருக்கிறார்கள். அது ஒருபுறம் இருந்தாலும், கண், முகம் எல்லாம் உடலின் ஒரு பகுதி என்பதால் முகம் வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு மொழி உடல்மொழிதான்.

உடல்மொழி வரிசையில் கண்களுக்கு எப்போதும் சிறப்பான இடம் இருக்கிறது.இந்தப் படத்தை சற்று உன்னிப்பாகப் பாருங்கள்.
இவை யாருடைய கண்கள் என்பது பார்த்தவுடன் தெரிந்திருக்கும்.  இப்போது ஒரு முக்கியமான கேள்வி. இந்த இரண்டு படங்களிலும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்ன?ஸ்கிளிரா என்கிற கண்களின் வெள்ளை பாகம்தான் முக்கியமான வித்தியாசம்.

இது மனிதர்களின் கண்களில் மட்டுமே இருக்கக்கூடியது.  குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தபோது மனிதர்களின் கண்களில் ஏற்றபட்ட முக்கியமான மாற்றம் இது. கண்களின் இந்த வெள்ளைப் பகுதிதான் மனிதர்கள் தங்கள் பார்வையை எங்கே திருப்புகிறார்கள் என்பதை அடுத்தவருக்கு சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், கண்களின் வெள்ளைப் பகுதி ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பெண்களின் கண்கள் வசீகரமானதாக, கவர்ச்சியானதாக இருக்கின்றன.
விலங்குகளின் கண்களில் வெள்ளைப் பகுதி இல்லாததால், முழுமையாக கருப்பாக இருப்பதால், விலங்குகளின் கண்கள் அதிக சக்திவாய்ந்தவையாக, இரவிலும் தெளிவாக பார்க்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மனிதர்களில் ஸ்கிளிரா என்கிற கண்களின் வெள்ளைப் பகுதி சிலருக்கு மங்கலான மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதேபோல் கருவிழியும் சிலருக்கு மெல்லிய நீல நிறத்தில் இருப்பதுண்டு. (நம்ம ஊரில் பூணைக்கண் என்பார்கள்). பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு கண்களிலும் கருவிழி ஒரே நிறத்தில்தான் இருக்கும். மிக அபூர்வமாக சிலருக்கு கருவிழிகள் ஒவ்வொரு கண்களிலும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அப்படி ஒரு ஆபூர்வ மனிதர்தான் ஹாலிவுட் நடிகர் டேவிட் போவின், அவருடைய இரண்டு கண்களும் வெவ்வேறு நிறமானவை. ஒன்று நீலம், மற்றொன்று பழுப்பு.  

ஆச்சர்யமாக இருக்கிறதா? உடனே உங்களை அறியாமல் புருவத்தை உயர்த்தி இருப்பீர்களே? உலகம் முழுக்க இப்படித்தான். எந்த ஒரு ஆச்சர்யமான தகவலைக் கேட்டதும் ‘அட‘ என வியந்தபடி புருவம் உயர்ந்தே நிற்கும். இதுவும் ஒரு உடல்மொழியின் செயல்பாடுதான். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், ஆச்சர்யப்படும்போது இரண்டு புருவங்களும் ஒருசேரத்தான் உயரும். நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல் ஒரு சிலர் மட்டும் ஒற்றைப் புருவத்தை உயர்த்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இதேபோல் மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் ‘ரோவன் அட்கின்சன்‘ தன் காது மடல்களை தனியே அசைப்பார். இது பயிற்சியால் சாத்தியம் என்றாலும், இயற்கையான உடல்மொழி வெளிப்பாடுகள் எப்போதும் தன்னிச்சையாக இணைந்தே வெளிப்படும்.

புருவத் துடிப்பு

நீண்ட நாட்கள் கழித்து உங்களுடன் பள்ளி/கல்லூரியில் படித்த நண்பரை சந்திக்கும் போது, ஆச்சர்யத்திலும், பரவசத்திலும் ‘ஹாய்‘ என்று அகமகிழ்ந்து எதிர்கொள்ளும்போது, முகத்தில் சந்தோஷமான பாவனை உதித்து புருவத்தை லேசாக மேலே உயர்த்தி இறக்கும். இது ஒரு சமிக்ஞையைப் போன்றது. உடல்மொழியின் இந்த வெளிப்பாடு குரங்குகளிடமிருந்து உருவாகி வந்திருக்கிறது.

உடல்மொழியின் புருவத் துடிப்பான சைகை எதிராளிக்கு சாதகமான தகவல்களை பரிமாறுகிறது. ‘இவர் நம்மை சந்தோஷமாக எதிர்கொள்கிறார்‘ என்பதை தெளிவாகப் புரியவைக்கிறது. அடுத்தவர் வந்திருப்பதை அங்கிகரிக்கும் உணர்வற்ற சமிக்ஞை நிமிட நேரத்தில் நிகழ்ந்து முடிவதைப் பார்த்த பிறகே வந்தவர் புன்னகையோடு எதிர்கொள்கிறார். மனதிற்குள் நிஜமான அன்போடு சக மனிதரை விருப்பத்துடன் எதிர்கொள்ளும்போது அவர்களும் பதிலுக்கு அன்புடனேயே அணுகுவார்கள். உடல் மொழியின் இந்த பாவனை ஒரு தங்க விதி என்றே சொல்லலாம்.

புருவத்தை மேலே உயர்த்துவது அன்பை வெளிப்படுத்துவதைப் போல், புருவத்தைச் சுறுக்கி கீழே இறக்குவது அதற்கு நேர் எதிராக குணத்தை வெளிப்படுத்தும். புருவத்தைச் சற்றே சுறுக்கி நெரித்து கீழே இறக்கிப் பாருங்கள், உங்களையும் அறியாமல் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பும், கோபமும், மெல்லிய முரட்டுத்தனமும் எட்டிப்பார்ப்பது தெரியும்.

உடலியல் ரீதியாக சிலருக்கு இயற்கையாகவே உயரமான புருவங்களும், இறங்கிய புருவங்களும் அமைந்திருக்கும். உயரமான புருவங்களை உடையவர்கள் அன்பானவர்களாகவும், இறங்கிய நிலையிலான புருவங்களை உடையவர்கள் முரட்டுத்தனமானவர்களாகவும், சிடுமூஞ்சிக்காரர்களாகவும் இருப்பார்கள் என்பது பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் இயற்கையாக எழும் கருத்து.

சிலருக்கு புருவம் நேர்கோடு போல் இருக்கும். இது பார்ப்பவர்களுக்கு அவர் அக்கறையான மனிதர் என்ற பிம்பத்தை தரும். இதனாலேயே அவர் நம்பத் தகுந்தவர் என்ற ஈமேஜை பெற்றுத்தரும். இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடி. கென்னடியின் புருவ அமைப்புதான் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்ததோடு அவரை தேர்தலில் வெற்றி பெறவும் செய்தது.எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பார்கள். பார்க்கும் பார்வையில் அப்படி என்ன இருக்கிறது? அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

உடை வழி - நிட்டட் கேப் - Knitted Cap

மனிதர்களின் அடையாளம் அவர்கள் முகத்தில்தான் இருக்கிறது. நிட்டப் கேப் உல்லன் இழைகளால் தயாரிக்கப்பட்டது. இதன் வடிவம் மெல்ல மெல்ல கண், மூக்கு பகுதிகளில் மட்டும் லேசான திறப்புகளைக் கொண்டிருப்பதாக மாறி தலை முழுவதையும் மூடுவதாக வடிவம் பூண்டது. அது குளிருக்கு மிக இதமாக இருக்க, குளிர்ப்பிரதேச மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதேநேரம் அதன் வடிவம் வெப்பப் பிரதேச மக்களுக்கும் பிடித்தமானதாக இருந்தது. கூடவே தூசு, புழுதி, அனல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதாக இருக்க பெரிய வரவேற்பைப் பெற்றது.

19ம் நூற்றாண்டில் Ullan cap - Templar cap  என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டது. 1854ல் Crimean War-ல் கைகளால் பின்னப்பட்ட நிட்டட் கேப்கள் மிதமிஞ்சிய குளிரிலிருந்து பிரிட்டிஷ் படையினரை காப்பதற்காக தயாரித்து வழங்கப்பட்டது. போரில் பயன்படுத்தப்படும் எதுவும் பிற்பாடு விளையாட்டிலும், வியாபாரத்திலும் பயன்படுவதைப்போல் கிரிமியன் போரில் பயன்பட்ட நிட்டட் கேப்கள் குளிர் சார்ந்த விளையாட்டுகளான Skiing, Snowboarding, Snow Mobiling-களில் விளையாட்டு வீரர்கள் குளிர், பனியிலிருந்து முகத்தைத் தற்காத்துக்கொள்ளவும், Motorcycling, Bicycling  போன் விளையாட்டுகளில் காற்று முகத்தில் அறைந்து சுவாசச் சிக்கல் ஏற்படாமல் இருக்கவும், விபத்தில் முகத்தில் சிராய்ப்புகள் காயம் ஏற்படாதவண்ணம் இருக்கவும் பயன்படுத்தப்பட்டது.

1900-களில் சோவியத் ரஷ்யாவில் முகம் முழுமைக்கும் மூடிய (கண் மூக்கு திறப்புகள் உண்டு) நிட்டட் கேப்புகள் காவல் துறையின் சிறப்புப் படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. குற்றவாளிகளை விசாரிக்கும்போது, விசாரணை அதிகாரியின் அடையாளம் என்பது தெரியாமல் இருக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத் தீர்ப்பு தரும் வரை வெளி உலகிற்கு அவர் முகம் மறைத்தபடி இருக்கவும் நிட்டட் கேப் பயன்படுத்தப்பட்டது.

(இந்த நடைமுறை இன்றளவும் நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கிறது) உருவத்தில் மாற்றத்தைக் கண்ட நிட்டட் கேப் பின்னர் மக்கள் தலையிலிருந்து தீவிரவாதிகள் தலைக்கு மாறியதுதான் விசித்திரம். நிட்டட் கேப்பின் நவீன வடிவம் முக அடையாளத்தை மறைப்பதுபோல் இருக்க, அதை தீவிரவாதிகள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

இன்றளவும் தீவிரவாதி என்ற பெயரைச் சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருவது… ஒரு மனிதன் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களோடு அவன் முகத்தை மறைத்துக்கொண்டபடியாக அணிந்திருக்கும் நிட்டட் கேப்தான்.

-  தொடரும்