வாட்ஸ்அப் மூலம் ஆங்கில மொழி பயிற்சி!புது முயற்சி

நாம் எல்லோருமே அடிக்கடி, ஏன் பன்னிரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை போனை எடுத்துப் பார்க்கின்றோம். அதிலும் அதிகமாகப் பார்ப்பது வாட்ஸ்அப் அப்ளிகேஷனைத்தான். அப்படி இருக்கும்போது வாட்ஸ்அப்-பை யூஸ் பண்ணி நாம் ஏன் இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கக்கூடாது என நினைத்த நண்பர்கள் 4 பேர் கோயம்புத்தூரில் ஆங்லோஃபோன் என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வாட்ஸ்அப்பில் ஆங்கிலப் பயிற்சி அளித்துவருகிறார்கள்.

நம் எல்லோருக்குமே தெரியும் இங்கிலீஷ் எவ்வளவு இம்பார்ட்டன்ட் என்று, வேலைக்குப் போகின்றவர்களாக இருந்தாலும், பிசினஸ் பண்ணுகிறவர்களாக இருந்தாலும், டீச்சர்ஸ், தொழில்முறையினர், வீட்டிலிருப்பவர்கள் என சர்வதேச அளவில் தொடர்புகொள்ள அனைவருக்கும் அவசியமான மொழியாக ஆங்கிலம் உள்ளது.

நம்மில் பலர் இங்கிலீஷ் என்றாலே இலக்கணம் (Grammar), வடிவமைப்பு (Structure) எல்லாம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அந்தப் பயத்தில்தான் பேசாமலிருக்கிறோம். நடைமுறையில் அப்படி எதுவுமே கிடையாது. சிம்பிளாக எப்படி நம்மால் தினமும் நடைமுறை வாழ்க்கையில் பேச முடியும் என்பது போன்றுதான் பாடத்திட்டங்களை வகுத்து கற்றுக்கொடுக்கிறோம் எனக் கூறும் அவர்கள்  பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

‘‘வாட்ஸ்அப் (Whatsapp) போன்ற ஊடகத்தின் மூலமும் எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முடியும். மேலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எங்களின் ஆர்வமும் இந்த ஊடகத்தின் மூலம் நிரூபணமானது. பாரம்பரியமாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் முறையை மாற்றி, எளிதில் அனைத்து வயதினரையும் ெசன்றடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது.

இதனை மனதில்கொண்டே நாங்கள் பாடத்திட்டத்தை வடிவமைத்துக்கொண்டிருந்தோம். ஒரு வருடத்திற்கு முன்பு இதற்கு தீர்வாக தமிழ்நாட்டில் ஆங்லோஃபோன் (Anglofone) எனும் நிறுவனத்தை உருவாக்கினோம். கற்றுக்கொடுப்பதன் மூலம் நம்மால் பலவற்றை அறிந்துகொள்ளவும், நம் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதைப்போல, கற்பித்தலிலும் நாங்கள் பலவற்றை கற்றுக்கொள்கிறோம்’’ என்றவர்கள் பாடத்திட்டம் குறித்து விளக்கினர்.

‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிறுவனத்தை தொடங்கியபோது பல யோசனைகள், கேள்விகளுக்குப் பிறகு ஆன்லைனில் (online) கற்றுக்கொடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கான பாடத்திட்டம் அமைத்த பிறகு, இதனை பெரும்பாலான மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக இருவழிகளை யோசித்தோம். அதில் ஒன்று அதற்கென ஒரு செயலி (Application) மூலம் கற்றுக்கொடுப்பது, மற்றொன்று வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் பயிற்றுவிப்பது. இருப்பினும் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் கற்றுத்தரலாம் என்று முடிவெடுத்தோம்.

உலகிலுள்ள மக்கள் ெதாகையில் ஏராளமானோர் அதாவது, ஆறு வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்கள்கூட வாட்ஸ்அப் (Whatsapp) உபயோகிப்பதற்கு எளிதாக இருப்பதால் இதனை தேர்ந்தெடுத்தோம். இதனால், மக்கள் அவரவர் இடத்திலிருந்தே எளிதில் ஆங்கிலம் கற்கலாம் என்பது சிறந்த வழியாக அமைந்தது. அதனை, நடைமுறையில் சாத்தியமாக்கியதற்கு நாங்கள் ‘தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழ்கிறோம்’ என்பதில் பெருமையும் கொள்கிறோம்.

தங்கள் மேற்படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் ஆங்கிலத்தில் தன் அறிவை மேம்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் என அனைவருக்கும் வாட்ஸ்அப் (Whatsapp) வழி ஆங்கில கல்வி என்பது பயனுள்ளதாக அமைந்தது. ஆகவே, எங்களின் கல்வி நிலையத்தில், மற்ற கல்வி நிலையங்களைப்போல நேரமோ, இடமோ, வயதோ, அனுபவமோ ஆகிய எதுவும் ஒரு தடையாக அமைந்ததில்லை. அமையவும் அமையாது.

இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கையும், வேலையும் எந்தவித பாதிப்புகளுமின்றி சுலபமாக கற்க முடியும். அனைவருக்கும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் வழங்கினால் புரிந்துகொள்ள கடினமாக இருக்கக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு, கற்றுக்கொள்ள வருபவர்
களுக்கு ஆன்லைன் (online) மூலம் மதிப்பீட்டு தேர்வு (Assessment Test) வைத்து அவர்களின் நிலையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பல்வேறு பாடத்திட்டங்களின் மூலம் பயிற்சியளிக்கிறோம்’’ என்றவர்கள் மாணவர்களுக்கான பயிற்சி நடைமுறை பற்றியும் விவரித்தனர்.

‘‘மாணவர்களின் நிலைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க பாடத்திட்ட ஆலோசகர்கள் (Course Advisors) பணிபுரிகிறார்கள். இலக்கண தலைப்புகளைக் கூறி மாணவர்களை குழப்பாமல், வழிவழியாக பயிற்றுவிக்கும் முறையை மாற்றி, ஆங்கிலத்தை அன்றாட வாழ்விற்கு ஏற்றவாறு உரையாடல்கள் மூலம் கற்பிக்கிறோம்.

மேலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் வரும் சந்தேகங்கள், பிழைகள், கேள்விகள் அனைத்திலும் அவர்களுக்கு உதவ பயிற்சியாளர்கள் (Trainers) இரண்டு வேலை நேரங்களில் (Shift) பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு மாணவரின் நிலையறிந்து அவரவர் தேவைக்கேற்ப பயிற்சியளிக்கிறோம். முதல் சிலநாட்களிலிருந்து ஆங்கிலத்தில் அவர்களின் தினசரி மாற்றங்களை (முன்னேற்றங்களை) கண்காணித்து, சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கிறோம்.

மாணவர்களுக்கு நேர்காணல் (Interview) சம்பந்தமாக வரும் சந்தேகங்களையும் மாதிரி நேர்காணல் (Mock Interviews) வைத்து அவர்களுக்கு குறிப்புகள் வழங்கி உதவுகிறோம். இதன்மூலம் கூகுள் (Google) வலைத்தளத்தில் 4.9 ரேட்டிங், மாணவர்கள் எங்களுக்கு கொடுத்துள்ளனர்.

எங்களின் கூட்டுமுயற்சிக்கு உதாரணமாக, தற்போது எங்களிடம் 117 குழுக்களாக ஒரு குழுவிற்கு 15-20 மாணவர்கள் வீதம், ஆங்கிலம் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் மற்றும் பாடங்களை வழங்குவதற்கு தேவையான பாடத்திட்ட ஆலோசகர்கள் (Course Advisers) மற்றும் பயிற்சியாளர்கள் (Trainers) பணிபுரிகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மனதில் தீப்பொறிபோல் தோன்றிய எண்ணம், இப்போது உலகில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு துறைகளிலிருந்து பணிபுரிபவர்கள் மாணவர்களாக இங்கு பயின்று பயனடைந்து வருவதை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதேநேரத்தில், நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதை கற்றுக் கொடுக்க நினைத்தால் அவர்களின் ரெஸ்யூமை அனுப்பினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குகிறோம்’’ என்றனர்.

- திருத்துவராஜ்