சிப்போ சிறுதொழில் பயிற்சிகள்!பயிற்சி

சிப்போ என்று சுருக்கமாக அழைக்கப்படும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனமானது மத்திய அரசின் தேசிய சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (National Small Industries Corporation-NSIC) மற்றும் மாநில அரசின் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Small Industries Development Corporation Limited - TANSIDCO) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.

இது மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியுடன் 1991ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சிப்போ நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சிப்போ நிறுவனத்தின் பிரதான நோக்கம் குறு, சிறு, நடுத்தர, ஊரக, கிராமப்புறத் தொழில் தொடங்க உதவுதல் மற்றும் அந்நிறுவனங்களை ஊக்குவிப்பதுதான்சிப்போ நிறுவனமானது தேசிய சணல் உற்பத்தி ஆணையம், மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம், மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், மாவட்டத் தொழில் மையம், ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் ஆகிய துறைகளுடன் இணைந்து திறன் பயிற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில்முனைவோருக்கான பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் மூலமாக பயிற்சி கொடுத்து பல தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. அவர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கண்காட்சிகளையும் நடத்தியுள்ளது.

மேலும் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பரவலாக்குதல் குறித்தும் விளக்கமளிக்கவும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தொழில்முனைவோருக்கான பயிற்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் சொந்தமாக தொழிற்கூடங்கள் அமைக்க ஆலோசனைகள் மற்றும் திட்ட அறிக்கைகளை தயார் செய்வது குறித்தான விளக்கமும் பயிற்சியின் மூலம் வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் சணல் உயர் பொருட்கள் தயாரித்தல், மதிப்புகூட்டு சிறுதானியப் பொருட்கள் தயாரித்தல், மசாலா பொருட்கள், ஊறுகாய் வகைகள் தயாரித்தல், ஃபேஷன் ஜூவல்லரி, ஸ்கிரீன் பிரிண்டிங், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், தொழில்முனைவோர் பயிற்சி, குளிர்பானம் தயாரிப்பு, தையற்கலை, மெழுகுவர்த்தி தயாரிப்பு, பனைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகளை வழங்குகிறது.

அந்த் வகையில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க 45 நாள் இலவச பயிற்சி - பயிற்சியின்போது உணவு தங்குமிடம் இலவசம் என அறிவித்துள்ளது. வயது வரம்பு 18-60. மேலும் பயிற்சியின் மூலம் தாங்கள் கற்கக் வேண்டிய தொழில் வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள மற்றும் பயிற்சியில் சேர தொடர்புகொள்ள வேண்டிய முகவரி ‘சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ), 52, டி.பி. ரோடு, 1வது மாடி, மகபூப்பாளையம், மதுரை-16’ முன்பதிவிற்கு - 0452 2602339, 94430 53104.

-முத்து