கொரோனோவால் ஒலிம்பிக் போட்டிக்கும் சிக்கல்!



ஸ்போர்ட்ஸ்

சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு போட்டியாக ஒலிம்பிக் போட்டி கருதப்படுகிறது. இதை உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என்றுகூட சொல்லலாம். அத்தகைய 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ் பாதிப்பு. சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல நாட்டு ஒலிம்பிக் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகளும் இந்த போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்றும் போட்டியை திட்டமிட்டபடி நடத்தி விடலாம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், போட்டி அமைப்பாளர்களும் நினைக்கிறார்கள். ஆனால் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதுதான் சரியானது என்று பல்வேறு நாடுகளிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக கனடா மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் போட்டி அமைப்பாளர்களுக்கு அதிக நெருக்கடி உருவாகியிருக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது பற்றி எல்லா அம்சங்களையும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரிடமும் முழுமையாக ஆலோசனை நடத்தி 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சூசகமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில், ‘முழுமையான ஒலிம்பிக் போட்டியை நடத்தவேண்டும் என்பதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது. இது கடினமானால், விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டியை தள்ளிவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆனால், போட்டியை ரத்து செய்யும் திட்டம் இல்லை’என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘கொரோனாவினால் ஏற்பட்டு வரும் தாக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் பொறுத்திருந்து நிலைமையைப் பார்ப்போம். அதன் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்’ என்று சொல்லியிருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அடுத்த வருடம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

- குரு