பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட திருச்சி NIT மாணவன்!சாதனை

இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் ராணுவ தளவாட கண்காட்சி(Defexpo 2020) நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 11வது ராணுவ தளவாட கண்காட்சி உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்தது. முப்படைகளுக்குமான வருங்கால நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ராணுவ தளவாட தயாரிப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றுவதே ஆகும். இந்திய பிரதமர், மாநில முதல்வர், பாதுகாப்பு துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், சர்வதேச உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள் என  மிகப்பிரம்மாண்டமாக நடந்த இக்கண்காட்சியை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (DRDO) நடத்தியது.

சர்வதேச தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் வான், கடல், தரை படைகளின் நவீன ஆயுதங்களைக் காட்சிப்படுத்திய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது திருச்சி NIT-யில் மின்னியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் கிருஷ்ணகாந்தின் கண்டுபிடிப்பு. எதிரி விமானங்களை துல்லியமாக கண்டறியும் உலகின் முதல் சாதனம் என்ற பெயரும் பெற்றது. கிருஷ்ணகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர். அவரின் கண்டுபிடிப்பு குறித்து கேட்டபோது நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவகல்களை இனி பார்ப்போம்.  

‘‘வான் எல்லையில் விமானங்களின் அலைவரிசைகளை (Frequency) கண்காணிப்பதற்கு ரேடார் தொழில்நுட்பம் அவசியம். அதுபோன்றதொரு தொழில்நுட்பம் தான் என்னுடைய Radome. Frequency Selective Surface எனும் நுண்ணலை பொறியியல் தொழில்நுட்பம் தான் இக்கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபில்டர் போன்று செயல்படக்கூடியது. இந்த கருவியை போர் விமானங்களில் இருக்கும் ரேடாரில் பொருத்தினால் போதும். வான்வழியில் இயங்கும் மற்ற விமானங்களின் ரேடார்களை இக்கருவி  நமக்கு காட்டும். அதேசமயம் மற்ற விமானங்களால் நம்முடைய ரேடாரை கண்டறிய முடியாது.

போர்களத்தில் குறிப்பாக விமானப்படையின் செயல்பாடுகளில் ரேடோம் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும். போர்விமானங்களின் வருகை மற்றும் ஊடுருவல்களை துல்லியமாக கணிப்பதற்கும் மற்றும்  நாட்டின் இதர பாதுகாப்பு காரணங்களுக்கும் இக்கருவி மிகுந்த பயனுள்ளதாக அமையும்.  

ராணுவ முப்படை தளபதி, பாதுகாப்பு துறை அதிகாரிகள், சர்வதேச ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் பாராட்டை இக்கருவி பெற்றது. இத்தொழில்நுட்பத்தை இந்திய ராணுவத்தில் பயன்படுத்துவதற்கான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்துவருகிறது. மேலும் மூன்று காப்புரிமைகளுக்கும் சமர்பித்துள்ளேன்’’ என்ற கிருஷ்ணகாந்த் தன் குடும்ப பின்னணியை பற்றியும் கூறலானார்.

‘‘இந்தியாவின் சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் என்னுடையது. அப்பா தச்சர். அவர் ஒருவரின் சம்பாத்தியம்தான் எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானம். அம்மா வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொள்வார். எனக்கு மூன்று சகோதரர்கள். கல்வியறிவு இல்லாத அப்பாதான் கஷ்டப்பட்டு  எங்களை பட்டம் படிக்க வைத்தார்.

பள்ளிக் கல்வி மற்றும் இளங்கலை மின்னியல் (ECE) பட்டத்தை எங்கள் மாநிலத்தில் படித்தேன். மின்னியல் துறையில் முதுகலைப் பட்டம் புதுச்சேரியில் முடித்துவிட்டு, பெங்களூருவில் இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏரோநாட்டிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஓராண்டு பயிற்சி பெற்றேன். விமான தொழில்நுட்பத்தில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதுவே என்னுடைய ஆராய்ச்சிப் படிப்பிற்கும் வழிவகுத்தது.

திருச்சி NIT-யில் 2016ம் ஆண்டு சேர்ந்தேன். மின்னியல் பேராசிரியர் எஸ்.ராகவன் சார் எனக்கு வழிகாட்டி ஆசிரியராக கிடைத்தது என்னுடைய பாக்கியம். ரேடோம் கருவியின் உருவாக்கத்திலும், செயல்படுத்தியதிலும் அவரின் பங்களிப்பு இன்றியமையாதது. DRDO லேப் ஆராய்ச்சியாளர் டாக்டர்.பாண்டே, என்னுடைய முயற்சியை ஊக்கப்படுத்தினார். ரேடோம் கருவியை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதே என் ஆசை’’ என்கிறார் கிருஷ்ணகாந்த்.

திருச்சி NIT-யில் கிருஷ்ணகாந்துக்கு வழிகாட்டிய, தற்போது ஓய்வுபெற்ற பேராசிரியரான ராகவன் பேசும்போது, ‘‘பெங்களூரு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றபோதே மின்னியல் தொழில்நுட்பத்தில் கெட்டிகாரராக இருந்தார் கிருஷ்ணகாந்த். நான் அவருக்கு அடிப்படை நுண் அலை பொறியியல் தொழில்நுட்பப் பயிற்சியைதான் வழங்கினேன். தனது முனைவர் படிப்பிற்கான ப்ராஜெக்டாக  ரேடோம் கருவியைத் தேர்ந்தெடுத்து செயல்பாடுகளில் இறங்கினார் கிருஷ்ணகாந்த்.

கனவு காண தைரியம் வேண்டும் என்ற தலைப்பில் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (DRDO) தேசிய அளவிலான தொழில்முறை திறன் போட்டியை டெல்லியில் நடத்தியது. இரண்டு கட்ட தேர்வுகள் கொண்ட அப்போட்டியில் சுமார் 3 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். கிருஷ்ணகாந்தின் ரேடோம் கருவி அதில் முதன்மையாக தேர்வு செய்யப்பட்டது. இந்திய அரசின் சார்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை கொடுத்து கருவியை மேம்படுத்த சொன்னார். இதன் மூலம் இப்போட்டியில் பங்குகொண்ட மற்றும் போட்டியில் வென்ற ஒரே NIT திருச்சிதான் என்ற பெயரும் எங்கள் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்தது.

இவ்வாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் இந்திய பெவிலியன் சார்பாக ரேடோம் கருவி காட்சிப்படுத்த தேர்வானது. கண்காட்சியில் ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணகாந்த் மற்றும் வழிகாட்டி ஆசிரியரான எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ராணுவ உபயோகத்திற்கு உடனடியாக பயன்படுத்தும் விதத்தில் ரேடோம் கருவி இருந்ததால்  கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இக்கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டினார். . இந்திய நாட்டின் குடிமகனாக ஆராய்ச்சியாளர் கிருஷ்ணகாந்தின் பங்களிப்பு என்பது நிச்சயம் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.’’ என்று பெருமிதத்தோடு கூறினார் பேராசிரியர் ராகவன்.

- வெங்கட் குருசாமி