மரம் மற்றும் மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம்



அட்மிஷன்

முதுநிலைப் பட்டயப்படிப்பு


இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest & Climate Change) கீழ் பெங்களூரில் தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டுவருகிறது இந்திய ஒட்டுப்பலகைத் (Indian Plywood Industries Research & Training Institute - IPIRTI) தொழிற்சாலைகள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம். இப்பயிற்சி நிறுவனத்தில் ஓர் ஆண்டு கால அளவிலான மரம் மற்றும் மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Graduate Diploma Course in Wood and Panel Products Technology) வழங்கப்படுகிறது.

ஓராண்டு கால அளவிலான இந்தப் பட்டயப்படிப்பில் மரம் மற்றும் பல்வேறு சட்டத் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் / உற்பத்தி, ஒட்டுப்பலகை, துகள் / இழைப் பலகை, அடைப்புப் பலகை, பட்டைக் கதவு போன்றவை தயாரிப்புக்கான தொழில்நுட்பம், மூங்கில்பாய்ச் சட்டம் உற்பத்தி மற்றும் ஒட்டுப்பசைத் தொழில்நுட்பம் போன்றவை முதன்மைப் பாடங்களாக இருக்கின்றன. இப்படிப்பில் மொத்தம் 30 இடங்கள் இருக்கின்றன.   

கல்வித்தகுதி

இப்பட்டயப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் வேதியியல் (Chemistry)/இயற்பியல் (Physics)/கணிதம் Mathematics)/வேளாண்மை(Agriculture)/வனவியல் (Forestry) பாடம் ஒன்றில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது பொறியியல் பட்டப்படிப்பு (B.E/B.Tech) ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களது வயது 28 வயதுக்கு அதிகமாகாமல் இருக்கவேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு இந்திய அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. தொழில் / ஆய்வு நிறுவனங்களிலிருந்து பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு வயது வரம்பு இல்லை.   

விண்ணப்பிக்கும் முறை

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்நிறுவனத்தின் http://ipirti.gov.in/pgdiploma.html எனும் இணையப்பக்கத்திலிருந்து தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணம் ரூ.250-க்கு “Director, IPIRTI, Bangalore” எனும் பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையினையும் சேர்த்து “Indian Plywood Industries Research and Training Institute, P.B. No.2273, (Behind to Peenya Metro Station), HMT Link Road, Off Tumkur Road, P.O. Yeshwanthpur, Bangalore-560 022” எனும் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இப்படிப்புக்கு செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியான இளநிலை அறிவியல் (B.Sc) அல்லது இளநிலைப் பொறியியல் (B.E / B.Tech) பட்டப்படிப்பு மதிப்பெண்களில் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். இந்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு உரிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவை தவிர, தொழில்/ஆய்வு நிறுவனங்களிலிருந்து பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கட்டண விவரம்

இப்படிப்புக்குச் சேர்க்கை பெற்றவர்கள் திருப்பிப் பெற இயலாத படிப்புக் கட்டணம் (Non  Refundable Course Fee) ரூ.41,800 திருப்பிப் பெறக்கூடிய காப்புக் கட்டணம் (Caution Money) ரூ.4840, திருப்பிப் பெற இயலாதக் கல்விச் சுற்றுலாக் (Study Tour) கட்டணம் ரூ.3300, விளையாட்டு மற்றும் கலாச்சாரச் செயல்பாட்டுக் (Sports & Cultural Activities) கட்டணம் ரூ.550 (கட்டணங்களில் மாற்றங்களும் இருக்கலாம்) ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

இப்படிப்புக்குச் சேர்க்கை பெற்றவர்களில் மாணவர்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி இருக்கிறது. மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை. விடுதியில் தங்குவதற்காக மாணவர்கள் திருப்பிப் பெற இயலாத விடுதிக் கட்டணம் ரூ.4400, திருப்பிப் பெறக்கூடிய உணவுக் கட்டண முன்பணம் ரூ.4620 ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். உணவுக் கட்டணமாக மாதம் ரூ.5000 வரை பகிர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டண விவரங்களில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புகளுண்டு.

இப்படிப்புக்கான பயிற்சி மற்றும் தேர்வு முறைகள், பணிகளுக்கான வளாக நேர்காணல்கள் போன்ற கூடுதல் தகவல்களைத் தகவல் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இவை தவிர, பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்நிறுவனத்தின் http://ipirti.gov.in இணையதளத்தைப் பார்க்கலாம்.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர CUCET நுழைவுத்தேர்வு!

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களான NIT-ல் சேர விரும்பும் மாணவர்கள் CUCET (CENTRAL UNIVERSITIES COMMON ENTRANCE TEST) நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நாடு முழுவதும் 15 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. 2020-2021 கல்வியாண்டிற்கான CUCET பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. முதுநிலைப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்க விரும்புகிறவர்கள் CUCET தேர்வு எழுதலாம்.

முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு 30.5.2020 மற்றும் 31.5.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான CUCET தேர்வு 6.6.2020 மற்றும் 7.6.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி CUCET தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு https://www.cucetexam.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

- முத்து