எது விலை மதிப்பற்றது?
எனர்ஜி தொடர் 19
நெருக்கடி. சுற்றிலும் நெருக்கடி மட்டுமே. ஏதேதோ எதிர்மறை எண்ணங்கள் மனத்தினுள் எழுந்து ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விஸ்வரூபமெடுத்து அதுவரை சிறுகச் சிறுகச் சேமித்திருந்த வாழ்நாளுக்கான நம்பிக்கையை நசுக்கப் பார்த்தன.
தன்னுள் நிலைகொண்டிருந்த மன அழுத்தத் தாழ்வுநிலையால் மேலும் மேலும் தவறுகள் செய்து, செய்வதறியாமல் திகைத்து நின்றார் ஜெஸி ஓவன்ஸ்.
“என்னால் முடியாது. ம்ஹூம், என்னால் முடியவே முடியாது. நான் வெளியேறிவிடுவேன் என்றே நினைக்கிறேன்...”அது 1936. ஜெர்மனியின் பெர்லினில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த சமயம். வழக்கமான ஒலிம்பிக்ஸ் அல்ல. ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்த அடால்ஃப் ஹிட்லர் நடத்திய ஒலிம்பிக்ஸ்.
அந்நிகழ்வுக்காகவே, தனது யூத வெறுப்பு நடவடிக்கைகளையெல்லாம் மேசைக்குக் கீழ் தள்ளிவிட்டு, அதன்மேல் நட்புறவு எனும் அலங்கார விரிப்பைப் போர்த்தி, அமைதி என்ற பூச்சாடி ஒன்றையும் வைத்து, தொண்டையைக் கனைத்தபடி சற்றே சிரித்தார் ஹிட்லர். ‘பெர்லினுக்குச் சென்றுதான் ஆகவேண்டுமா?’ என்று தயங்கிநின்ற சர்வதேச நாடுகளுக்கு அன்பு அழைப்பு விடுத்தார்.
“வாருங்கள்! இதுவரை உலகமே கண்டிராத பிரமாண்ட ஒலிம்பிக்ஸை நீங்கள் இங்கே காணலாம்!”நிஜம்தான். அத்தனை கோலாகலமான ஏற்பாடுகள். ஆரவார வரவேற்பு. அன்பு உபசரிப்பு. பெர்லினுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடங்கி, சர்வதேச வீரர்கள் வரை ‘வீ லவ் ஜெர்மனி!’ என்று முகம் மலர்ந்தனர்.
ஆனாலும் ஹிட்லர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். ‘ஜெர்மனியே அதிகப் பதக்கங்கள் வெல்ல வேண்டும். ஆரியர்களே வீரியமானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்’ என்று ரகசியமாகக் கட்டளை யிட்டிருந்தார். ஜெர்மானிய வீரர்களுக்குத் ‘தேசவெறியை’ ஊட்டும் விதத்தில் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. நம் தேசத்துக்குப் பெருமை சேர்க்க நாம் இதில் வென்றே ஆக வேண்டுமெனக் களத்தில் ஆவேசமாகச் செயல்படக் கூர்தீட்டப்பட்டனர்.
அந்தச் சூழலில்தான் பெர்லின் ஒலிம்பிக்ஸில் களமிறங்கியிருந்தார் அமெரிக்கத் தடகள வீரரான ஜெஸி ஓவன்ஸ். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். சொந்த தேசத்திலேயே இனவெறிக் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வளர்ந்தவர். தன் திறமையால், அசராத நம்பிக்கையால் தடைகளைத் தகர்த்தெறிந்து, ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுமளவுக்கு மேலேறி வந்திருந்தார். அதுவும் சாதாரணமாக அல்ல.
1935. ஜெஸிக்கு முதுகுத் தண்டின் வால் எலும்பில் பலத்த காயம். குனிந்து தரையைக்கூடத் தொடமுடியாத அளவு பெரும் வலி. அந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த, ‘பிக் டென் சாம்பியன்ஷிப்’ தடகளப் போட்டியில் கலந்துகொண்டார்.
தடகளத்தில் ஓடினார். அசுர வேகம். அசராத வேகம். 100 மீட்டரில் உலக சாதனை நேரத்தைச் சமன் செய்தார். அடுத்த 15 நிமிடங்களில் நீளம் தாண்டினார். அதிலும் முந்தைய சாதனை அளவைவிட 6 இன்ச் அதிகம் தாண்டி புதிய உலக சாதனை. அரைமணி நேரம் கழித்து 220 யார்டு ஓட்டத்தில் கலந்துகொண்டார். அதிலும் உலக சாதனை.
பின்பு 220 யார்டு தடை தாண்டும் ஓட்டத்திலும் உலக சாதனையுடன் அவரே நம்பர் ஒன். ஒரு மணி நேரத்துக்குள்ளாக முதுகுத்தண்டு வலியைத் தாண்டியும், தலைநிமிரச் செய்த நான்கு வெற்றிகள். மூன்று புதிய உலக சாதனைகள்.1936 பெர்லின் ஒலிம்பிக்ஸுக்கு அமெரிக்கா, ஜெஸி ஓவன்ஸை அனுப்பியது. வேறு வழியில்லை.
‘வெறுக்கத்தகுந்த கறுப்பர்களைத்தான் பதக்கங்களுக்காக, நாட்டின் கௌரவத்துக்காக நம்பவேண்டியதிருக்கிறது’ என்பதே வெள்ளை அமெரிக்கர்களின் எரிச்சல்மிகுந்த எண்ணம். அதே சமயம், ஜெஸி ஓவன்ஸ் மீது உலக அளவில் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. ஆனால், ஜெர்மானியர்கள் ஓவன்ஸை எப்படியாவது துரத்தியடிக்க வேண்டும் என்று திட்டம்போட்டனர்.
பெர்லினில் ரயில் நிலையத்தில் வந்திறங்கும் ஓவன்ஸை அப்படியே அடித்துத் துரத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் அங்கு வந்தனர். பெரும் பாதுகாப்புடன் ஓவன்ஸ் ஒலிம்பிக்ஸ் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீளம் தாண்டுதலுக்கான தகுதிச் சுற்று நடந்துகொண்டிருந்தது. லஸ் லாங் என்ற ஜெர்மானிய வீரர், முதல் வாய்ப்பிலேயே தகுதி பெற்றார். ஏனோ, அவரைக் கண்டதுமே ஓவன்ஸுக்கு ஆத்திரம் பொங்கியது. நீளம் தாண்டுதலில் ஜெர்மனி தங்கப்பதக்கம் வென்றே தீரவேண்டும் என்பதற்காகவே லஸ் லாங்குக்கு ரகசியப் பயிற்சிகள் கொடுத்து தயார் செய்திருக்கிறார்கள்.
எல்லாம் ஹிட்லரின் ஏற்பாடு என்பது போன்ற செய்திகள் ஓவன்ஸின் கோபத்தைத் தூண்டின. ஜெர்மானியர்கள் மத்தியில் தனக்கு எழுந்த எதிர்ப்பலை. பதக்கம் வெல்லாமல் போனால் அமெரிக்கர்கள் பரிகாசம் செய்வார்களே என்ற அழுத்தம். எல்லாம் சேர்ந்து ஓவன்ஸை நிலைகுலையச் செய்தன.
தகுதிச் சுற்றில் தவறுக்கு மேல் தவறு செய்தார்.கடும்கோபத்துடன் ஓவன்ஸ் தரையை எட்டி உதைத்த பொழுதில், ஒரு கை அவர் முன் நீண்டது. ‘என் பெயர் லஸ் லாங்.’ வெறுப்புடன் கைகுலுக்கினார் ஓவன்ஸ். ‘எப்படி இருக்கிறீர்கள்? ஏதோ ஒரு விஷயம் உங்களை வாட்டுகிறது என்று நினைக்கிறேன்’ - முதல் சந்திப்பிலேயே, அறிமுக வார்த்தைகளிலேயே அக்கறையுள்ள ஓர் நண்பனாக ஆறுதல் வார்த்தைகள் பேசினார் லஸ் லாங். அவர் மீதான வெறுப்பெல்லாம் சடுதியில் கரைந்து போனது ஓவன்ஸுக்கு.
லஸ் லாங், சில நுட்பங்களை ஓவன்ஸுக்குச் சொன்னார். சொற்களால் தெம்பூட்டினார். ஓவன்ஸின் முகத்தில் தெளிவு. ஆனால், சுற்றியிருந்த நாஜி பார்வையாளர்கள் கண்களில் எல்லாம் கனல். தனக்கு இறுதியாகக் கிடைத்த வாய்ப்பில், அசத்தலாகத் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் ஓவன்ஸ்.
‘நாளை நீங்களே பதக்கம் வெல்லப் போகிறீர்கள். இன்றைக்கே எனது வாழ்த்து களைச் சொல்லிவிடுகிறேன்’ என்றார் லஸ் லாங். அன்று இரவு ஓவன்ஸ், அவரது அறைக்குச் சென்று வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். லாங்கின் அன்பு அத்தனை இதமாக இருந்தது.
மறுநாள். நீளம் தாண்டுதல் - இறுதிப் போட்டி. லஸ் லாங் அபாரமாகத் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். மைதானமே ஆர்ப்பரிக்க ஹிட்லரின் முகத்தில் அத்தனை பெருமிதம். லாங், ஓவன்ஸிடம் வந்தார். ‘இது உனது நாள்.
வெற்றி உனதே!’ என்று ஓவன்ஸை வாழ்த்தினார். ஓவன்ஸ் நீளம் தாண்டினார். அந்தக் கணமே லாங்கின் உலக சாதனை முறியடிக்கப்பட்டது. ஹிட்லரின் முகம் சிறுத்துப்போனது. எதைப்பற்றியும் கவலைப்படாமல், லாங் ஓடிச்சென்று ஓவன்ஸை உற்சாகமாக வாழ்த்தினார். நெகிழ்ந்தார் ஓவன்ஸ்.
அந்த ஒலிம்பிக்கில் ஜெஸி ஓவன்ஸ், நான்கு பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்தார். ஆரியர்களே வீரியமானவர்கள் என்ற ஹிட்லரின் பொய்ப் பிரசாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கினார்.
தன் மார்பில் தங்கப் பதக்கங்கள் தவழ்ந்த நொடியில் ஓவன்ஸின் மனத்தில் தோன்றிய வார்த்தைகள். ‘இந்தத் தங்கப் பதக்கங்கள் அற்புதமானவை. அவற்றைவிட அதிஅற்புதமான மனிதர், லஸ் லாங். எத்தனை பெரிய வெற்றிகள் பெற்றாலும், அவற்றையெல்லாம்விட மேலானது, விலை மதிப்பில்லாதது சக மனிதர்கள் மீது நாம் காட்டும் அக்கறையும் அன்புமே..’
1935. ஜெஸிக்கு முதுகுத்தண்டின் வால் எலும்பில் பலத்த காயம். குனிந்து தரையைக்கூடத் தொடமுடியாத அளவு பெரும் வலி. அந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகெனில் நடந்த, ‘பிக் டென் சாம்பியன்ஷிப்’ தடகளப் போட்டியில் கலந்துகொண்டார். தடகளத்தில் ஓடினார். அசுர வேகம். அசராத வேகம்.
(வளர்வோம்)
முகில்
|